Statue Of Liberty 
கலை / கலாச்சாரம்

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை..! பீடம் அமைக்க பணமில்லை! நிதி திரண்டது எவ்வாறு?

பிரபு சங்கர்

அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதியும், இன்னாள் ஜனாதிபதியும் நம்ம ஊர் தேர்தலைப் போலவே ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருக்கிறார்கள். ஜோ பைடன் கன்னா பின்னாவென்று உளறுகிறார்; டிரம்ப் துப்பாக்கிக் குண்டால் சுடப்படுகிறார்…

நம் நாட்டு நீதி மன்றங்களில் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, கையில் தராசைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, நீதி தேவதை அம்போவென்று நிற்பது போலவே அமெரிக்காவிலும் சுதந்திர தேவி சிலை, அநாகரிக அரசியலைக் கண்டு தேமேயென்று நிற்கிறது. 

அதன் உணர்வு ஒரு பக்கம் இருக்கட்டும், அந்தச் சிலை அங்கே எப்படி வந்தது என்று பார்ப்போமா?

அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டு கொண்டாடியபோது, அதைப் பெருமைப் படுத்தும் வகையில் நட்பு நாடான பிரான்ஸால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிலைதான் இது. அமெரிக்க சுதந்திரம், இரு நாடுகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவு என்ற நட்புணர்வின் வெளிப்பாடு இது.

சிலையை பிரான்ஸ் உருவாக்க, அதைத் தாங்கும் பீடத்தை அமெரிக்கா அமைத்தது. சிலை வடிவமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1875ம் ஆண்டு தொடங்கி, 1884ம் ஆண்டு முடிந்தது. 

‘உலகுக்கு ஒளியூட்டும் சுதந்திர தேவி‘ (STATUE OF LIBERTY) என்று இந்தச் சிலைக்குப் பெயரிட்டார்கள். இது ரோமானிய பெண் தெய்வமான லிபர்டாஸைக் குறிக்கும். உயர்த்திய வலது கரத்தில் ஒளி தரும் தீப்பந்தம், இடது கையில் ஜூலை 4, 1776 என்று பொறிக்கப்பட்ட ஒரு புத்தகம். இது அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்றதன் அடையாளமாகக் காலடியில் துண்டிக்கப்பட்ட சங்கிலி. 

சிற்பி, பிரெடரிக் பர்தோல்டியால், தன் தாயின் முகத்தையே மாதிரியாகக் கொண்டு இந்த தேவியின் முகத்தை வடிவமைத்திருக்கிறார்.

லேடி லிபர்ட்டி என்றும் அழைக்கப்படும் இந்தச் சிலையின் கிரீடத்தில், உலகின் ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் குறிக்கும் வகையாக ஏழு கூர்முனை ஈட்டிகளைக் காணலாம்.

எந்தவகைப் பெரும் புயலாலும் பாதிக்கப்படாத வகையில் சிலையினுள் எஃகுச் சட்டங்கள் உறுதியாகத் தாங்கி நிற்கின்றன. இந்தச் சட்டங்களை அமைத்துத் தந்தவர், பாரீஸ் நகரின் ஈஃபில் கோபுரத்தை நிர்மாணித்த, பிரான்ஸ் பொறியியல் நிபுணரான, குஸ்தாவே ஈஃபில்.

பீடம் அமைப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுவிட்டது, ஆனால் செலவுக்குதான் பணமில்லை! என்ன செய்ய? பிரபல நியுயார்க் வொர்ல்டு நாளிதழ் ஆசிரியரான (அப்போதே ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பிரதிகள் விற்ற தினசரி பத்திரிகை அது!) ஜோசஃப் புலிட்ஸர், பீடம் அமைக்க நன்கொடை வழங்கும் அன்பர்கள் ஒவ்வொருவருடைய  பெயரையும் தன் பத்திரிகையில் வெளியிடுவதாக ஓர் அறிவிப்பைச் செய்தார். அவ்வளவுதான் வந்து கொட்டியது நிதி!

பாரீஸில் சிலை தயாராகிவிட்டது. சம்பிரதாயமாக 1884, ஜூலை 4ம் நாள் பாரீஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்கத் தூதுவரிடம் அது ஒப்படைக்கப்பட்டது. இப்போது அதை பிரான்ஸிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும். 1885ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிலை பல்வேறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. மொத்தம் 214 பெட்டிகளில் அந்த பாகங்கள் அடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கப்பலில் அனுப்பட்டன.

இவை நியுயார்க் துறைமுகம் வந்தடைந்தவுடன் அங்கிருந்து பெட்லோய் என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பாகங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு அங்கே ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருந்த பீடத்தில் நிறுவப்பட்டது.

சிலை மட்டும் 151 அடி உயரம், பீடத்தையும் சேர்த்து மொத்தம் 305 அடி. சிலையினுள் 354 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படிகள் வழியாக கிரீட உச்சிவரை சென்று அங்கிருந்து நியுயார்க் நகரின் எழிலை ரசிக்கலாம். கட்டணம் கட்டாயம் உண்டு. 

1924ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த சிலை 27 டன் தாமிரம், 113 டன் இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிலையின் மொத்த எடை 204 டன்.

பிரமாண்டமாய் உயர்ந்து, வியப்புடன் அண்ணாந்து பார்க்க வைக்கிறது சுதந்திர தேவி சிலை!

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

SCROLL FOR NEXT