பழங்கால ஆயுதங்கள் பற்றி பேசும்போது வாள், ஈட்டி, வில் போன்றவை நம் நினைவுக்கு வரும். இருப்பினும், பழங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட கல்லைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆயுதம் அதன் கூர்மை மற்றும் செயல்திறனுக்காக தனித்து நின்று பேசப்படுகிறது. அதுதான் அப்சீடியன் கல். இது இயற்கையாய் உருவான ஒரு எரிமலைக் கண்ணாடியாகும். இதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் அதன் கூர்மையான விளிம்புகளால் பண்டைய காலத்தில் நடந்த போர்களில் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக்கருவி மற்றும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு அப்சீடியன் கற்களுக்கு உண்டு. இந்தக் கல்லின் கூர்மையான விளிம்பை உருவாக்கும் திறனைக் கண்டறிந்த ஆரம்ப கால மனிதர்கள், இதை பல ஆயுதங்களாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தக் கல்லின் குறிப்பிடத்தக்க பயன்பாடு என்னவென்றால், கத்தி மற்றும் அம்புகளை உருவாக்குவதாகும்.
இந்தக் கல்லைப் பயன்படுத்தி குறுகிய வாள்கள் உருவாக்கப்பட்டன. இத்தகைய ஆயுதங்கள் அவற்றின் கூர்மைத்தன்மை காரணமாக போரில் தனித்துவமான வகையில் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, இவற்றின் உறுதித்தன்மை காரணமாக எதிரிகளின் கவசத்தை ஊடுருவி காயங்களை உண்டாக்கும் அளவுக்கு உறுதி கொண்டதாக இருந்தன. உலகெங்கிலும் உள்ள பல பழங்குடியினர் கலாச்சாரங்களில் இந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அப்சீடியன் கல்லை உடைக்கும்போது வரும் கூர்மையான விளிம்புகள், மனிதனின் சதை மற்றும் எலும்பைக்கூட வெட்டக்கூடியவை. மேலும், இதைப் பயன்படுத்தும்போது சத்தம் எதுவும் வராது என்பதால் பதுங்கியிருந்து தாக்குவதற்கு ஏற்றதாக இருந்தது. இருப்பினும், இந்தக் கல்லை பக்கவாட்டில் தாக்கினால் எளிதில் உடையக்கூடிய தன்மை, இந்த ஆயுதத்தின் ஆயுள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக அமைந்தது.
அப்சீடியன் கல்லை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது மனிதனின் புத்திக்கூர்மை மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும். பண்டைய நாகரிகங்கள், எந்த அளவுக்கு தந்திரமாக இதைப் பயன்படுத்தி ஆயுதங்களை வடிவமைத்தார்கள் என்பதை இது காட்டுகிறது. அப்சீடியன் கல்லின் கூர்மை மற்றும் வெட்டும் பண்புகள் பற்றி மனிதன் பெற்ற அறிவு, பிற்காலத்தில் உலோகங்களைப் பயன்படுத்தி ஆயுதம் செய்வதன் வளர்ச்சிக்கு பங்களித்தது.
பழங்காலத்தில் ஒரு கல்லின் குறிப்பிடத்தக்க பண்புகளை கண்டறிந்து, ஆயுதங்களை செய்து போரில் பயன்படுத்தியது, புதுமையை நோக்கிய மனிதனின் தேடுதலையும், தன் விதியை வடிவமைக்க இயற்கை சக்தியை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதையும் இது நினைவுபடுத்துகிறது.