‘சக்கையும், மாங்கையும் ஆறு மாசம்‘ என்பது கேரளத்தில் நிலவி வரும் சமையல் பழமொழி. அதாவது வருடத்தில் ஆறு மாதங்கள் பலாவும், அடுத்த ஆறு மாதங்கள் மாங்காயும் அங்கே அபிரிமிதமாக விளையும் என்று அர்த்தம்.
நேந்திரங்காய் கேரளத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இவர்கள் அதிலிருந்து சிப்ஸ் செய்வதைக் கண்டு பிடித்த பிறகுதான், இப்போது உலகெங்கும் அது பிரபலமாகியிருக்கிறது.
இன்னொருத்தருக்குச் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர் ‘குடியா‘ என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் ‘சம்சாரி‘ போல. ஒரு வருடம் முழுவதும் விவசாயம் செய்து முடிவில் நிலச் சொந்தக்காரருக்கு குறிப்பிட்ட மூட்டை அளவு நெல்லை குத்தகைப் பலனாக அளிப்பார்.
1969ம் ஆண்டு இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் கேரள முதல்வராக இருந்தபோது உழுபவருக்கே நிலம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி நில உரிமையாளருக்கு வருடந்தோறும் கிடைத்து வந்த 12 மூட்டை நெல், அரை மூட்டையாகக் குறைந்தது. இதனாலேயே நில உரிமையாளர் குடும்பத்திலிருந்து ஒருவரோ அல்லது இருவரோ வெளியூர், வெளி மாநிலம் அல்லது வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
உப்பு மாங்காய், வடு மாங்காய், (காம்புடன் கூடிய) கன்னி மாங்காய் என்று மாங்காயில் பல வகைகள் உண்டு. வடுமாங்காய் கொங்கேடு கிராமத்தில் மட்டுமே கிடைக்கும்.
திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பாக அவரை ஒரு தொட்டிலில் அமர்த்தி ஏழெட்டு பேராகத் தூக்கி வருவார்கள். தொன்மை பழக்கப்படி பால்ய விவாகம் நடந்ததால், மாப்பிள்ளைப் பையனை பல்லக்கில் அமர்த்தித் தூக்கி வந்து கொண்டு வந்தது ஈஸியாக இருந்தது. ஆனல் இப்போதும் அந்த பாரம்பரியம் மாறாமல் தொட்டிலில் இளைஞனை அமர்த்தி அழைத்து வருகிறார்கள். என்ன நாலைந்து பேர் எக்ஸ்டாவாக தூக்குவார்கள்!
திருமணத்தைப் பொறுத்தவரை நாயர், மேனன் வகுப்பினர், மணப்பெண்ணுக்குப் புடவை கொடுப்பது, மணமக்கள் மாலை, மோதிரம் மாற்றிக் கொள்வது, தாலிகட்டுவது என்று அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள்.
கேரளத்தில் ‘மடம்‘ என்றால் ஆன்மிக அமைப்பு என்று அர்த்தமல்ல. இது வயலுக்கு நடுவே இருக்கும் அந்த வயலின் சொந்தக்காரருக்கான வீடு.
அந்நாளில் பறை (10 கிலோ), பத்துப் பறை (ஒரு மூட்டை), இடங்கழி (1 கிலோ), நாடி (சுமார் 300 கிராம்), உரி (சுமார் 200 கிராம்), ஒழக்கு (சுமார் 50 கிராம்) என்ற முகத்தலளவை கணக்கு இருந்தது.
நவராத்திரி சமயத்தில் சிறுமிகள் கொலு வைக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குச் சென்று, ‘பொம்ம கோல பட்சணம், வீட்டைப் பார்த்தா லட்சணம்‘ என்று ராகம் போட்டுச் சொல்லி ஒரு பெரிய துண்டில் எல்லார் வீட்டு நவராத்திரி பிரசாதங்களையும் வாங்கி, கூட்டாஞ்சோறு போல கலந்து உண்பார்கள்.
கிருஷ்ண ஜயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்கும் சிறுமிகள் சென்று, கோவிலில் விளக்கேற்றுவதற்காக எண்ணெய் சேகரிப்பார்கள். அப்போது, ‘ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமிக்கு திருவிளக்கு எண்ணெய், எண்ணெய் பார்த்தால் எண்ணெய், இல்லாவிட்டால் பொம்மை‘ என்று பாடலாகப் பாடி சேகரிப்பார்கள்.
ஆவணி அவிட்டம் நாளன்று சிறுவர்கள் கையில் ஆலமரக் கிளை ஒன்றைப் பற்றியபடி ‘ஆவணி அவிட்ட கோமணம், அக்கா பொறந்தா ஒக்காரை, பாட்டன் பொறந்தா வழுக்காவடி (கைத்தடி), அம்பி பொறந்தா சோணாரி‘ என்று சொல்லி ஒவ்வொரு வீடாகச் சென்று ‘பவதி பிட்சாந்தேஹி‘ என்று உணவு யாசகம் கேட்பார்கள்.
பாலக்காடில் பழுக்க மரத்தால் ஆன தொட்டிலில் பச்சிளங் குழந்தைகளை இட்டு தாலாட்டுவார்கள். பழுக்க மரத்தால் செய்யப்பட்ட எந்த மரச்சாமானுக்கும் வார்னிஷ் பூச வேண்டாம் என்பதே இதன் சிறப்பு.
பாலக்காடு ஆண்கள் பெரும்பாலும் பஞ்சகச்சம் வேட்டி கட்டுவார்கள், எங்கு போவதானாலும் செருப்பு அணிய மாட்டார்கள். பின்னாளில் பஞ்சகச்சம் சாதா வேட்டியாக மாறினாலும், விவசாய வேலையை மேற்கொண்டிருப்பதால் செருப்பு அணிவதைத் தவிர்ப்பார்கள். நமக்கு உணவளிக்கும் பூமித்தாயை செருப்புக் காலால் மிதித்து அவமரியாதை செய்யக்கூடாது என்பது அவர்களுடைய கோட்பாடு.