Silattu Palagai 
கலை / கலாச்சாரம்

அழியும் தருவாயில் உள்ள அழித்து அழித்து எழுதிய சிலேட்டுகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. அவர்கள் எழுதக் கற்கும் இடம் சிலேட்டுதான். நீங்கள் சிலேட்டில் எழுதியிருக்கிறீர்களா? முன்பெல்லாம் சிலேட்டில் நன்கு எழுதிப் பழகிய பின்புதான் நோட்டில் எழுதப் பழக்குவார்கள். பின்னர் பென்சிலில் எழுதிப் பழகிய பின்புதான், பேனாவால் எழுதத் தொடங்குவார்கள். இப்போது சிலேட்டுகள் பள்ளிகளில் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. எல்.கே.ஜி. முதலே நோட்டு பென்சில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பாரம்பரியம் மிக்க சிலேட்டுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

எழுதும் சிலேட்டுகள் ஒரு வகை பாறையில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அந்தப் பாறையின் பெயர்தான் சிலேட்டு. அதில் இருந்து தயாரிக்கப்படுவதால் அந்தப் பெயரையே இதற்கும் வைத்திருக்கிறார்கள். சிலேட்டு பாறைகள், உருமாறிய மென்பாறைகளாகும். களிமண் மற்றும் வண்டல்மண் அல்லது எரிமலை சாம்பல்கள் படிவுகளாகி சிலேட்டுப் பாறைகளாகின்றன.

சிலேட்டு பாறைகள் தனித்துவமானவை. பளபளப்புத் தன்மையும், மென்மையும் கொண்டவை. களிமண்ணானது அதிக வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும்போது மைக்கா மற்றும் சிலேட்டு பாறைகள் உருவாகின்றன. சிலேட்டுப் பாறையின் வண்ணமானது அதில் கலந்திருக்கும் இரும்புத் தாதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் இவை சாம்பல் (பழுப்பு) வண்ணத்தில் காணப்படுகின்றன. சிலேட்டுப் பாறைகள் கூரைக் கற்களாவும், தரைக் கற்களாகவும்கூட பயன்படுத்தப்படுகின்றன.

சிலேட்டு பாறைத் துண்டுகளே பாலிஷ் செய்யப்பட்டு எழுது பலகையாக மாணவர்களின் கைகளில் தவழ்கிறது.1800களில் இருந்து சிலேட்டுகளை எழுது பலகையாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. எத்தனை அடுக்குகள் கொண்ட தகட்டினால் சிலேட்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்பதைப் பொறுத்து எழுது பலகைகள் உறுதியாக இருக்கும். மென்மையான சிலேட்டுகள் எளிதில் உடைந்துவிடும்.

Silattu Palagai

சிலேட்டு பாறைகள் தண்ணீர் உறிஞ்சுவதில்லை, மேலும் குளிர்ச்சியை தாங்கும் தன்மை கொண்டது என்பதால் இவை பெரும்பாலும் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலேட்டு பாறைகள் விலை மதிப்புமிக்கவை. அதை கடினமான அடுக்காக உருவாக்கவும், பொருத்திப் பயன்படுத்தவும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சிலேட்டுகள் உலகெங்கும் தயாராகிறது. ஆனால், பிரேசில் மற்றும் இங்கிலாந்து சிலேட்டுகள் தரம்மிக்கவையாக பெயர் பெற்றுள்ளன. கல் சிலேட்டுகளாக அறிமுகமான சிலேட்டுகள், மரச்சட்ட சிலேட்டுகள், பிளாஸ்டிக் சட்ட சிலேட்டுகள், கோடு போட்ட சிலேட்டுகள், எழுத்துகள் பதித்த சிலேட்டுகள், ஆணிமணிச் சட்ட சிலேட்டுகள், காந்தத்தன்மை கொண்ட சிலேட்டுகள் என பல நவீன அவதாரங்கள் கண்டுவிட்டன.

இன்றைய காலத்தில் கல் சிலேட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் சிலேட்டுகள் மற்றும் எழுது பலகைகள் வந்துவிட்டன. உடைந்துவிடும் சிலேட்டுகளை பலரும் விரும்புவதில்லை. இருந்தாலும் சிலேட்டுகளும் காலத்திற்கேற்ப நவீனத்துவம் பெற்று வழக்கத்திற்கு வருகின்றன. அவை என்றும் மழலைகள் விரும்பும் பொருளாக இருந்து, பாடங்களை (எழுதிக்) கற்பிக்கின்றன. அழித்து அழித்து எழுதிப் பழக, சிலேட்டை விட சிறந்த சாதனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உங்கள் கல்வியை சிலேட்டில் இருந்து தொடங்குங்கள். நாளைய தலைமுறையும் சிலேட்டில் இருந்து கற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT