கலை / கலாச்சாரம்

பாரதியின் படைப்புகளும்; கை மாறிய காப்புரிமையும்!

கல்கி டெஸ்க்

மது வரலாறுகளைத் தெரிந்துகொள்வதில் ஏறக்குறைய நம் அனைவருக்குமே ஆர்வம் உண்டு. ஒருவரது பிற்கால வாழ்வும் அவர்களின் சந்ததியர் இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்று ஆய்வாளர்கள் தேடிக் கண்டுபிடித்து சொல்வதை ஆர்வமுடன் கேட்போம். அதிலும் உலகப்புகழ் பெற்றவர்கள் எனும்போது அந்த ஆர்வம் சற்று அதிகம் இருக்கவே செய்கிறது. இதோ நமது புரட்சிக்கவி பாரதியைப் போல. பாரதியாரைப் பற்றிய எந்தச் செய்தியும் நமக்கு சுவாரஸ்யம் தருபவையே.

பாரதியின் மறைவுக்குப் பின்னர் அவரது படைப்புகள் என்னவாயிற்று என்பதைப் பற்றி, படித்த செய்தி ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

நன்றி: கார்த்திக் புகழேந்தி

பாரதி மறைந்தது சரியாக இரவு 1:30மணிக்கு. பொழுது விடிந்த பிறகே அவரது மரணச் செய்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மரணத்தின்போது உடல் மெலிந்து, ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடையில் பாரதி இருந்தார்.

பாரதிக்கு மகன்கள் கிடையாது. இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் தங்கம்மாள், இளையவர் சகுந்தலா. ஆக, தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா என்பவர்தான் பாரதி உடலுக்கு எரியூட்டினார்.

பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தனது கணவரின் படைப்புகளை தம் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறு சிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். ‘சுதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் இரு பாகங்களுக்கு மேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை.

பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000 ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது. அதிலும், செல்லம்மாள் வாங்கின கடன் 2,400 போக, மீதம் 1,600 மாதம் 200 என எட்டு தவணைகளாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர். (செல்லம்மா பாரதி எனக் கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு கையில் பெற்றபோது இனம்புரியாத உணர்வு எனக்குள்.)

ஆனால், உலக சரித்திரத்திலேயே நடைபெறாத இலக்கிய பரிமாற்றமாக விசுவநாத ஐயரிடமிருந்து காப்புரிமையை வாங்கி 1949ல் பாரதி மறைந்து 27வது ஆண்டில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது அரசாங்கம்.

கடையத்தில்தான் தனது கடைசி காலம் வரை வாழ்ந்தார் செல்லம்மாள். தனது பேரப்பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று செல்லம்மாள் அளவில்லாத தாகத்தோடு இறைஞ்சினதை அவருடைய மூத்த மகள் தங்கம்மாளின் மகளும், பாரதியின் பேத்தியுமான டாக்டர் எஸ்.விஜயபாரதி தனது நினைவுகளில் இருந்து குறிப்பிடுகின்றார்.

தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தனர். இன்றைக்கு அவரது பேத்தி டாக்டர் எஸ்.விஜயபாரதி காப்புரிமை குறித்த பன்னாட்டு வழக்கறிஞராக கனடாவில் தனது மகள்களோடு வசிக்கின்றார்.

பாரதியோ, நம் எல்லோர் மத்தியிலும் பெயர்களிலும், தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும், கவிதையிலும், காட்சிகளிலும், வார்த்தையிலும், வரிகளிலும் நெஞ்சுரத்திலும் நீக்கமற வாழ்கின்றார். ஆம்… எம் முண்டாசுக் கவிஞனுக்கு என்றும் மரணமில்லை.

கந்தசாமி R முகநூல் பதிவிலிருந்து..

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT