இராஜஸ்தானில் 540 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆன்மிக குருவான ஜாம்பேஷ்வர் என்ற ஜாம்பாஜி அருளிய நன்னெறிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்பவர்களை, ‘பிஷ்னோய் மக்கள்’ (Bishnoi People) என்று அழைக்கின்றனர். ’பிஷ்’ எனும் சொல்லிற்கு இருபது என்றும் ’னோய்’ எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள் கொள்ளலாம். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இவர்கள் வாழ்கின்றனர்.
தங்களின் ஆன்மிகக் குரு அருளிய, தங்களின் அடிப்படை உடல் நலத்தைப் பேணிக் காத்திட 10 நன்னெறிகளும், நல்ல சமூகப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்திட 7 நன்னெறிகளும், இறைவனை வழிபட 5 நன்னெறிகளும், கால்நடைகளை நன்கு வளர்த்தல், விலங்குகளைக் கொல்லாதிருத்தல், செடி, கொடி, மரங்களை அடியுடன் வெட்டாமல், இயற்கைச் சூழ்நிலையைக் காத்திட 7 நன்னெறிகளும் என்று மொத்தம் 29 நன்னெறிகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
பிஷ்னோய் மக்கள் தூய சைவ உணவை மட்டுமே இவர்கள் உண்கின்றனர். காட்டையும், காட்டு விலங்குகளையும் நேசிப்பதில் சிறந்தவர்கள். கால்நடைகள் வளர்ப்பதே இவர்களின் தொழில். தாங்கள் வாழும் பகுதிகளில் சுற்றித் திரியும் சிங்காரா வகை மான்கள், புள்ளி மான்கள், கலை மான்கள், காட்டெருமைகள், மயில்கள் போன்ற விலங்குகள் தங்களின் வேளாண் நிலங்களில் மேய்ந்தாலும், அதனை இவர்கள் அடித்து விரட்டுவதில்லை. விலங்குகளின் உணவுக்காக, தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்களில், சிறிது பகுதியிலுள்ள பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். கடும் கோடைக்காலத்தில் காட்டு விலங்குகள் நீர் அருந்த வசதிகளையும் செய்து தருகின்றனர்.
இந்த இனக்குழுக்களில் உள்ள பெண்களிடம் ஒரு வினோதமான பழக்கம் இருக்கிறது. அதாவது, மான்களில் தாய் மான் இறந்து விட்டால், அந்த மானின் குட்டிகளுக்கு இங்குள்ள பெண்களேத் தாய்ப்பால் கொடுத்து மூன்று மாதங்கள் வரை அக்குட்டிகளை வளர்த்து, அதன் பிறகு, காட்டில் கொண்டு போய் விட்டு விடுகின்றனர்.
1730-ஆம் ஆண்டில், ராஜஸ்தான், மாநிலம், ஜோத்பூரிலிருந்து தென்மேற்கே 26 கிலோ மீட்டர் தொலைவில் தார் பாலைவனத்தில் உள்ள கேஜர்லி (Khejarli) என்ற கிராமத்தின் மரங்களை வெட்ட வந்த மார்வார் மன்னர் அபய் சிங்கின் படை வீரர்களை, அம்ருதாதேவியின் தலைமையில் பிஷ்னோய் பழங்குடி மக்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் கோபமடைந்த மன்னரின் வீரர்களால், அங்கிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மொத்தம் 363 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.