பருத்தி நீண்ட காலமாக இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உலகளவில் அதிக பருத்தி உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இது பருத்தி ஆடைகளுக்கும் பொருந்தும். ஆம், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்காகவே பல நாடுகள் இந்தியாவை சுற்றி வந்தனவாம். அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவைச் சேர்ந்த சென்னையில் தயாரிக்கப்பட்ட மெட்ராஸ் பருத்தி என்றழைக்கப்படும் துணிகளுக்காகவே பல நாடுகள் இந்தியாவைத் தேடி வந்தனவாம். அப்படி இந்த மெட்ராஸ் பருத்தி துணிகளுக்குப் பின் என்னதான் மறைந்திருக்கிறது என்று இந்தப் பதிவில் பார்க்கலாமா?
மெட்ராஸ் பருத்தி இலகுரக பருத்தி துணி ஆகும். மெட்ராஸ் பருத்தி ஆடைகள் உலகளவில் பிரபலமாக திகழ்ந்த ஆடைகளுள் ஒன்று. தற்போது சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ் பகுதியை சுற்றியிருந்த மக்கள் தம் கைகளாலேயே இந்த துணிகளை நெய்தார்கள்.
1950 காலக்கட்டங்களில் மற்ற ஆடைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வணிக ரீதியில் உச்சத்தைத் தொட்டிருந்தது மெட்ராஸ் பருத்தி. முக்கியமாக, இதன் இலகுவான தன்மையினால், இந்தத் துணியை அணிந்து கொண்டு எந்த ஒரு வேலையை செய்வதற்கும் எளிதாக இருப்பதால் ஆப்பிரிக்கா, மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளிலும் வெகுவாக பிரபலமடைந்ததாக கருதப்படுகிறது.
இந்த மெட்ராஸ் பருத்தி ஆடைகள் முதன்முதலில் கைக்குட்டை வழியாகத்தான் சென்னையில் அறிமுகமானது மற்றும் பிரபலமும் ஆனது. இந்தக் கைக்குட்டையை சுறுக்கமாக RMHK அதாவது Real Madras Hand Kerchief என்றே அழைப்பார்களாம். அதன் பிறகுதான், இது மெல்ல மெல்ல உடுத்தும் ஆடைகளாக பிரபலமடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதிக செலவு செய்யாமல், கைத்தறி நுட்பத்தைப் பயன்படுத்தி பருத்தியை துணிகளாக மாற்றுவதில் தமிழர்கள் கைதேர்ந்து விளங்கியதாக கூறப்படுகிறது. அதே தொழிநுட்பத்தைப் பயன்படுத்தியே இந்த வகையான மெட்ராஸ் பருத்தி துணிகள் தயாரிக்கப்பட்டன. ஆகையால், இவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை பெறுபவர்களும் வாங்கும் அளவிற்கு மலிவானவையாக விளங்கின.
மெட்ராஸ் பருத்தி துணியானது, பெரும்பாலும், Checked Pattern அதாவது சதுர வடிவில் கோடுகள், கட்டங்கள் போன்ற டிசைன்களை கொண்டிருக்கும்.
மேலும், இதற்கு பயன்படுத்தும் சாயமானது இயற்கையாக தாவரங்களில் இருந்தும், கரிமச் சேர்மங்களில் இருந்தும், சில பூச்சி வகைகளில் இருந்தும் தயாரிக்கப்பட்டனவாம். இந்தச் சாயம் சரியாக ஒட்டாது. எனவே, இதனை ஒவ்வொரு முறை சலவை செய்யும் போதும் சாயம் வழிந்தோடி மற்றொரு நிறத்திற்கு அழகாக மாறிவிடுமாம். ஆகையால், இது Bleeding Madras Cotton என்றும் அழைக்கப்பட்டது என்ற சுவாரஸ்ய செய்தியும் உண்டு.