Kannu theli Img Credit: Green Eyes youtube channel
கலை / கலாச்சாரம்

காளை + காளை அல்லது காளை + (ஆண்) எருமை பங்கேற்கும் விளையாட்டு எது தெரியுமா?

தேனி மு.சுப்பிரமணி

கந்நுதெளி (Kannutheli) என்பது கேரளத்தில் நடத்தப்படும் ஒரு மரபு வழியிலான விளையாட்டாகும். கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் நடத்தப்படும் கம்பளா விளையாட்டை ஒத்த ஒரு விளையாட்டு இது. அறுவடை முடிந்து மாடுகளும், வேளாண்மக்களும் ஓய்வாக இருக்கும் போது பொழுது போக்காகத் துவக்கப்பட்ட இவ்விளையாட்டு, தற்போது தனி விளையாட்டாக மாறியிருக்கிறது. கேரள நாட்காட்டியில் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த விளையாட்டு, காளை + காளை அல்லது காளை + (ஆண்) எருமை ஆகியவற்றை நுகத்தடியில் (இரு மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டப்படும் மரத்தாலான, நீளமான கட்டை. இதை ஏர் ஓட்டும்போதும், வண்டி இழுக்கும் போதும் மாடுகளின் கழுத்தில் வைத்துக் கட்டுவார்கள்) பூட்டி சகதி நிறைந்த கழனியில் குறிப்பிட்ட தொலைவை வேகமாக கடப்பது ஆகும். முதலில் வரும் மாட்டுக்கும் ஓட்டி வருபவருக்கும் பரிசுகள் உண்டு.

இந்த விளையாட்டு, பாலக்காடு, மணப்புரம், கோழிக்கோடு, பட்டம்பி போன்ற பகுதிகளில் பிரபலமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போட்டிக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் உண்டு என்றாலும் பொதுவான விதியாக வேகம் என்பது உள்ளது.

மணப்புரம், கோழிக்கோடு, பட்டாம்பி பகுதிகளில் நடத்தப்படும் போட்டியானது வட்டத்தளி என்பதாகும். இதில் வயலைச் சுற்றி 200 மீட்டர் ஓட்ட வேண்டும். பாலக்காட்டில் நடத்தப்படுவது நீளத்தளி என்பதாகும். இதில் நேராக 100 மீட்டர் ஓட்ட வேண்டும்.

வெற்றி பெறும் மாட்டின் உரிமையாளருக்கும் மாட்டை ஓட்டுபவருக்கும் பணப்பரிசு உண்டு. இப்போட்டிகளில் மாடுகளை ஓட்டிச் செல்பருக்குப் பலத்த காயங்களும் ஏற்படுவதுண்டு.

கந்நுதெளிப் போட்டிக்காக, மைசூர் லம்பாடி காளைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். காங்கேயம் காளைகளையும் குறைந்த அளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த வகைக் காளைகளை இப்போட்டிக்காகவே தனிப்பட்ட முறையில் வளர்ப்பவர்கள் உள்ளனர். போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், போத்துவுக்கும் (எருமைக்கடா) தனியாக பயிற்சிகளும், சிறப்புக் கவனிப்புகளும் உண்டு.

கர்சாகர் தினம் என்றழைக்கப்படும் விவசாயிகள் நாளான ஆவணி முதல் நாள் கோழிப்பாறையில் நடக்கும் கந்நுதெளியில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொள்ளும். அப்போது மூன்று பிரிவுகளில், மூன்று விதமான போட்டிகள் நடக்கும்.

மாடுகள் பிறக்கும் போது அதற்குப் பற்கள் இருக்கும். அந்தப் பற்கள் விழுந்து பிறகு முளைக்கும். பிறவிப் பல் விழாத மாடுகள் துணை இளையர் (Sub Junior), பிறவிப் பல் விழுந்து இரண்டு முதல் நான்கு பற்கள் முளைத்திருந்தால் அது இளையர் (Junior), ஆறு பற்களுக்கு மேல் முளைத்திருந்தால் அது மூத்தோர் (Senior) என்ற பிரிவுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT