ராஜேந்திர சோழனிடம் இருந்த ஒரு படையைப் பார்த்து எதிரிகள் நடுநடுங்கிப் போனார்கள். அப்படி எதிரிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக அமைந்த அந்தப்படை எது தெரியுமா? அதுதான் யானைப்படை. உலகத்தில் உள்ள யாருக்குமே இல்லாத தனிப்பெருமை நம் நாட்டு அரசர்களுக்கு இருந்தது என்றால், அதுதான் யானைப்படை.
சாதாரணமாக தரையில் பயணம் செய்வது போல கடலில் செல்ல முடியாது. கடலில் பயணம் செய்வது என்பது சவாலுக்குரிய விஷயமாகும். அப்படியிருக்கையில், யானைப்படையை கப்பலிலே ஏற்றி கடாரம் வரை சென்று போரிலே வெற்றிப் பெற்ற வரலாற்றை என்னவென்று சொல்வது!
யானைகளை கப்பல்களில் ஏற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கே யானைகளுக்கு பலதரப்பட்ட பயிற்சிகளை செய்திருப்பார்கள். அடுத்து, யானைகளை ஏற்றிச் செல்ல பெரிய கலம் தேவைப்படும். ‘திரிசடை’ என்பதுதான் சோழர்களிடம் இருக்கும் மிகபெரிய மற்றும் எடை தாங்கக்கூடிய கப்பலாகும். பெயருக்கு ஏற்றாற்போல மூன்று மூன்று கப்பல்களாக சென்று பயணிக்கும் மற்றும் போரிடும். யானைகள் செல்வதற்கும் திரிசடைக்கப்பல் தேவைப்பட்டது.
வீரர்களை ஏற்றிச் செல்லவும் திரிசடை தேவைப்பட்டது. இதையெல்லாம் விட முக்கியமானது கடல் பயணத்தின்போது யானைகளுக்கு மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களுக்கே கடல் பயணத்தைப் பார்த்து பயம் இருக்கும்போது மிருகத்திற்கும் அதேபோன்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். நடுக்கடலில் யானைக்கு மதம் பிடித்தால், மொத்த படையுமே அழிந்து விடும். அதனால் யானைக்கு மயக்க மருந்து கொடுத்து அது விழித்ததும் தரையிலே நடக்க வைத்துக் கூட்டிச்செல்வார்கள்.
யானைக்குத் தேவையான உணவுகளையும் எடுத்துக்கொண்டு, மொத்த படையையும் வழிநடத்திக் கடலில் சென்று வெற்றிப் பெற்று வந்தான் என்று சொன்னால், அவன்தான் ராஜேந்திர சோழன்.
சோழர் படையில் 60,000 யானைகள் இருந்தன என்கிறது வரலாறு. கி.பி.1225ல் சீன புவியியலாளர் சாயு குவா என்பவர் சோழ நாட்டை பற்றியும், சோழர் படையை பற்றியும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். சோழ நாடு மேற்கு இந்திய நாடுகளுடன் போர் இட்டுக்கொண்டிருந்தது என்றும் சோழ படையில் 60,000 யானைகள் உள்ளன என்றும் ஒவ்வொரு யானையும் 8 அடி உயரம் கொண்டது எனவும் போரிடும்போது யானைகளின் மீது அம்பாரி அமைத்து அதில் வீரர்கள் அமர்ந்து நெடுந்தொலைவிற்கு அம்புகளை எய்கிறார்கள் என்றும் அருகில் உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலகறியச் செய்ய யானைகளும் உதவியிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை வீழ்த்தும் யானையானது போரின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் ஆயிரம் யானைகளை கொன்ற வீரனை சங்க இலக்கியம் போற்றிப் பாடுகிறது.