சிகிரியா என்பது இலங்கையில் உள்ள ஒரு பழைமையான பாறை கோட்டையாகும். இது தம்புள்ளா நகரத்துக்கு வடக்கு மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பழைமையான வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்தப் பாறை 200 மீட்டர் உயரத்தைக் கொண்டு காட்டிற்கு நடுவிலே உயர்ந்து நிற்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பழைமையான கோட்டை சுவர்கள், படிகள் மற்றும் குட்டைகளை கொண்டிருக்கிறது. இந்த இடம்தான் தற்போது இலங்கையில் அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிடக்கூடிய இடமாகக் கருதப்படுகிறது.
அதனால் இலங்கை அரசு இந்த இடத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு ஏற்றாற்போல சில மாற்றங்களைச் செய்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஏறி இறங்க படிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாறையின் உச்சியை அடைய 1200 படிகளை ஏறியாக வேண்டும். பாறை உச்சியை அடைவதற்கு முன்பு வாசலில் அழகிய தோட்டம் மற்றும் கற்பாறை ஆகியவற்றைக் காணலாம்.
படிகளை ஏறுவதற்கு முன்பு நாம் பார்க்கக்கூடிய ஒன்றுதான் கண்ணாடி சுவர். இந்த கண்ணாடி சுவர் எலுமிச்சை, தேன் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை கொண்டு சுவற்றின் மீது தேய்த்து அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவற்றில் இன்னமும் கண்ணாடி போன்ற அமைப்பும் பளபளப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சுவரில் சுதை ஓவியங்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மலை உச்சியை அடைவதற்கு முன்பு பார்க்க வேண்டிய ஒரு இடம்தான் சிங்க நடைமேடையாகும். இப்போது இதில் சிங்கத்தின் பாதங்களே மிச்சமிருப்பதைக் காண முடியும்.
மலை உச்சியில் ஒரு காலத்தில் கட்டடங்கள் நிரம்பி இருந்தன. இப்போது வெறும் கட்டடங்களின் அடித்தளத்தை மட்டுமே காண முடிகிறது. இந்த மொத்த பரப்பும் 2 ஹெக்டர் நிலப்பரப்பை கொண்டது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. மலை உச்சியிலிருந்து 360 டிகிரி காட்சியிலும், அகலப்பரப்பு காட்சியிலும் மொத்த காட்டின் அழகையும் ரசிப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த மலையின் உச்சியிலிருந்து சுலபமாகவே ஒரு சில கிலோ மீட்டர் தொலைவு வரை பாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிகிரியா பாறையிலிருந்து அதற்கு நேர் எதிரிலேயே இருக்கும் பின்டுரங்களா பாறையையும் பார்க்க முடியும்.
இத்தனை அழகு பொருந்திய சிகிரியா பாறையின் கதை சற்று சோகமானதாகும். காஷியப அரசன் தன்னுடைய தந்தை தத்துசேனாவை இங்கேதான் சிறைப்பிடித்து வைத்திருந்தாராம். தனக்கு அரச பதவி கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் இவ்வாறு செய்தார். பின்பு தன்னுடைய சகோதரன் பழி வாங்குவான் என்ற பயத்தில் தனது நாட்டின் தலைநகரத்தை சிகிரியாவிற்கு மாற்றி விட்டு இங்கேயே எதிரிகள் உள்ளே நுழைய முடியாத வண்ணம் வலிமையான கோட்டையை கட்டினார் என்று கூறப்படுகிறது.
சிகிரியாவிற்கு செல்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
* சிகிரியாவை பார்வையிட செல்வதற்கு முன்பு அங்கேயே ஒரு இடம் பார்த்து ஒரு நாளைக்கு தங்கிக்கொள்வது நல்லதாகும்.
* சிகிரியாவின் பார்வை நுழைவு சீட்டின் விலை 4500 LKR ஆகும். இது மிகவும் விலை அதிகமாகக் கருதப்பட்டடாலும் பாறையின் உச்சியில் சென்று பார்க்கக்கூடிய காட்சிகளை ஒப்பிட்டு பார்க்கையில் ஏற்றுக்கொள்ள கூடியதாகவே உள்ளது.
* சிகிரியா காலை 7 மணிக்குத் திறந்து மாலை 5.30 மணிக்கு மூடப்படும்.
* காலையிலேயே இங்கு வந்து விடுவது நல்லது. அப்போதுதான் வெப்பத்தையும், கூட்ட நெரிச்சலையும் சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
* முன்பே சொன்னது போல மொத்தம் 1200 படிகள் இருப்பதனால் 2 முதல் 3 மணி நேரம் ஏறுவதற்கு தேவைப்படும். எனவே, நல்ல காலணிகளை அணிந்து கொள்வது சிறந்ததாகும். தண்ணீர் பாட்டில்களையும் உடன் எடுத்து செல்வது நல்லது.
இலங்கைக்குச் செல்லும்போது கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய பழைமையான இடங்களில் சிகிரியா நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.