தென்கொரிய மக்களால் இன்றுவரை தெய்வமாக வணங்கப்படும் ஒரு பெண்! தமிழ்நாட்டிலிருந்து சென்று தென்கொரிய மக்களை ஆண்ட ஒரு இளவரசி! தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் இருக்கும் தொடர்புதான் என்ன போன்ற கேள்விகள் உங்கள் மனதில் தோன்றுவது நியாயம்தான். அதைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
என்னதான் உண்மையை திரையிட்டு மூட வேண்டும் என்று நினைத்தாலும், ஆழமாக அதை குழி தோண்டி புதைத்தாலும் ஒருகட்டத்தில் உண்மை வெளியே வரத்தான் செய்கிறது. நம்முடைய தமிழர்களின் மறைந்த வரலாறும் அவ்வப்போது இவ்வாறுதான் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ் மொழியில் இருக்கும் பல வார்த்தைகளை இன்றும் கொரியர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம் இனத்தின் இளவரசியை பற்றிய ஆராய்ச்சியை ஆய்வாளர் முனைவர் நா.கண்ணனும், ஒரிசா பாலா என்பவரும் வெளிக்கொண்டு வந்தனர்.
அம்மா, அப்பா, அண்ணி போன்ற உறவுமுறைகளை குறிக்கும் வார்த்தைகளும், அது, இது, புல், நுகண் என 500க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இன்றும் அங்கு புழக்கத்தில் உள்ளது. இதைப்போல உணவுகளிலும் தோசை, கொழுக்கட்டை போன்ற உணவுகள் அங்கும் பிரதான உணவுகளாக உள்ளன. ஆரம்பத்தில் சீன மொழியை பேசிவந்த கொரியர்கள் பிறகு 16ம் நூற்றாண்டில் ஹங்குல் (Hangul) என்ற எழுத்து மொழியை தாய்மொழியாக ஏற்றார்கள். இந்த மொழி மாற்றத்திற்கு முன்பு சீன மொழியில்தான் தங்கள் சொந்த வரலாற்றை எழுதி வைத்திருந்தனர். பிறகு மொழி மாற்றம் ஏற்பட்ட பிறகு தங்கள் வரலாற்றை தம்முடைய தாய்மொழியில் எழுத ஆரம்பித்தார்கள்.
அப்படி அவர்கள் மொழிபெயர்த்து கொண்டுவரும்போதுதான் நமக்கும், கொரியர்களுக்கும் இருக்கும் உண்மையான தொடர்பு வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அவ்வாறு அவர்கள் மொழிபெயர்ப்பு செய்த அந்த புத்தகத்தின் பெயர்தான் SAMGUK YUSA. ஐந்து தொகுதிகள் மற்றும் ஒன்பது பாகங்கள் கொண்ட இந்த நூலில் பண்டைய கொரிய வரலாறு, இலக்கியம், மதம், மொழி பற்றியவை இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் வரும் மூன்று ராஜ்ஜியங்களில் ஒன்றான Kaya ராஜ்ஜியத்தில்தான் நம்முடைய தமிழ் இளவரசி வருகிறாள். அந்த இளவரசியின் பெயர்தான் Heo Hwang Ok. அதாவது அவருடைய தமிழ் பெயரை உள்வாங்கி கொரிய அரசர் சீன மொழியில் அவருக்கு வைத்த பெயர்தான் இது. இந்தப் பெயரின் பொருள் மஞ்சள் நிறக்கல்.
ஆக, அந்தத் தமிழ் இளவரசி ‘மஞ்சள் நிறக்கல்’ என்ற பெயரில்தான் கொரியாவிற்கு வந்திருக்க வேண்டும். இந்தப் பெயர் பற்றியக் குறிப்பு அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அப்படியானால் இளவரசியின் பெயர் என்னவாக இருக்கும். இந்த வரலாற்றை தமிழர்களுக்கு தெரியப்படுத்திய கண்ணண், இந்த இளவரசிக்கு, ‘செம்பவளம்’ என்று பெயர் வைத்தார்.
கொரியாவில் 2000 வருடத்திற்கு முன்பு 9 இனக்குழுக்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தன. அதாவது அரசன் என்று கிடையாது. இனக்குழுவின் தலைவனாக 9 பேர் இருந்துள்ளனர். பின்பு கிம் சூரோ என்பவன்தான் இளம் வயதிலேயே அரசனாகிறான். அவ்வாறு அரசனான கிம் சூரோவிற்கு ஒரு கனவு வருகிறது. தனக்கு மனைவியாகப் போகிறவள் மேற்கிலிருந்துதான் வருவாள் என்பதே அந்தக் கனவு. கொரிய மக்களுக்கு மேற்கு திசை புனிதத்திற்கான திசையாகும். அதை அவர்கள் சொர்க்கத்திற்கான திசை என்று சொல்வார்கள். ஏனெனில், அது புத்தர் தோன்றிய திசையாகும். ஆகையால், அந்தக் கனவு நிறைவேறும் என்று அரசன் காத்திருந்தான்.
எத்தனையோ பெண்கள் திருமணம் செய்ய முன்வந்தபோதும் மேற்கிலிருந்து ஒரு பெண் வருவாள் என்று காத்திருந்தான். அதேசமயம், இந்தியாவிலும் ஒரு அழகிய இளவரசியின் தந்தைக்கும் கிழக்கு திசையில் தனது பெண்ணுக்கான கணவன் காத்திருக்கிறான் என்ற கனவு வர, தனது மகளை அனைத்துப் பரிவாரங்களுடன் கடல் பயணம் மேற்கொள்ள அனுப்புகிறார். அவ்வாறு அந்த இளவரசி கடற்பயணம் மேற்கொண்டு கொரியாவை அடைந்து கிம் சூரோவை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறாள். அந்த ராணி இறக்கும்போது ஒரு வரம் கேட்கிறாள். தன்னுடைய பெற்றோரை எப்படி அவள் அம்மா, அப்பா என்று அழைக்கிறாளோ அவ்வாறே கொரிய மக்களும் தங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்க வேண்டும் என்று கேட்கிறார். அது போலவே இன்றுவரை கொரிய மக்கள் தங்கள் பெற்றோரை அழைக்கிறார்கள்.
மேலும், அந்தப் புத்தகத்தில், கொரியாவில் உள்ள கயா ராஜ்ஜிய கடற்கரையில் பல்வேறு படை வீரர்களும், பணிப்பெண்களும் சூழ நிறைய நகைகளை அணிந்துக்கொண்டு, பொற்காசுகளையும், பவளங்களையும், யாழ் மற்றும் கப்பலை புயலில் நிலைப்படுத்தும் கல் அடுக்குகளை எடுத்துக்கொண்டு இரண்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்ட கப்பலில் வந்து தரையிறங்கினாள் 16 வயதான ஓர் இளம்பெண் என்று குறிப்பிடுகிறது.
அப்போது தன்னுடைய நாட்டை வலம் வந்துக்கொண்டிருந்த கிம் சூரோ அந்தப் பெண் குறித்து விசாரித்தான். அவளின் பெயரையும், நாட்டையும் பற்றிக் கேட்டான். அந்தப் பெண், தான் ஆயத்த நாட்டிலிருந்து வந்ததாகவும், தன்னுடைய அப்பா ஒரு அரசர் என்றும் பின்பு தன்னுடைய பெயரையும் சொன்னாள். அவளின் பெயரின் பொருளான மஞ்சள் நிற ரத்தினம் என்பதை தனது மொழியில் Hwang ok என்று மொழிப்பெயர்த்தான். பின்பு அவர்களை அரண்மனைக்கு அழைத்து சென்று ராஜ விருந்து வைத்தான். மேற்கு பக்கத்திலிருந்து இந்தப் பெண் வந்ததால், அவள் தனக்காக இறைவனே அனுப்பி வைத்ததாக உறுதியாக நம்பினான். பின்பு அவளையே திருமணம் செய்து கொரிய நாட்டு அரசியாக்கினான். இவர்கள் இருவருக்கும் 12 குழந்தைகள் பிறந்தன.
இறுதியாக, அவள் இறந்த பிறகு அவளது கல்லறையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு அவள் கல்லறையில் இன்றும் இருக்கிறது. அவள் கொண்டு வந்த கற்கள் இன்றும் அங்கு உள்ளதாக நம்பப்படுகிறது. இன்று கொரியாவை சேர்ந்த கிம், ஹியோ, லீ போன்ற மூன்று பிரிவை சேர்ந்த சுமார் 80 லட்சம் மக்கள் அந்தத் தமிழ் அரசியின் வம்சாவளிகள்தான். இந்த மூன்று பிரிவில் உள்ள மக்களும் இன்றளவும் அந்தத் தமிழ் அரசியை தெய்வமாக வணங்குகின்றனர்.
அந்தப் பெண் வந்து இறங்கியபோது தனது நாட்டை ஆயத்த நாடு என்றும், அவள் பயணம் செய்த கப்பல் மற்றும் வைத்திருந்த திரிசூலத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை வைத்தே அவள் தமிழ் பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்தக் காலக்கட்டத்தில் பவள வியாபாரம் நம் தமிழகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் இருந்திருக்கிறது. இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் முனைவர் நா.கண்ணன் அந்தப் பெண்ணுக்கு செம்பவளம் எனப் பெயரிட்டார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனின் கீழ் குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அதில் ஒன்றுதான் ஆய் ராஜ்ஜியம் என்னும் ஆய் நாடு. ஆயர் என்ற மன்னர்கள் இந்த பகுதியை ஆட்சி புரிந்ததால் இந்த இடத்திற்கு ஆய்நாடு என்ற பெயர் வந்தது. இந்த ஆய் நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர். அப்போது அவர் கொரியாவிலும் வணிகத் தொடர்போடு இருந்துள்ளனர்.
மேலும், அந்தப் பெண்ணோடு சென்ற வீரர்கள் கற்களையும் கூட எடுத்துச் சென்றுள்ளனர். நடுக்கல் வழிபாட்டின் தொன்மையை இந்த செயல் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆயத்த நாடு என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு வட இந்திய ஆய்வாளர்கள் அவள் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் அல்ல என்று வேறு ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். அதாவது, உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திதான் அந்தப் புத்தகத்தில் ஆயத்த நாடு என்று கூறிப்பிடுவதாக அவர்கள் சொல்கிறார்கள். மேலும், உத்திரபிரதேசத்தின் மாநில சின்னம் மீன். அதைத்தான் ராணி பயன்படுத்தினார் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இது சற்றும் ஏற்புடையதாகவே இல்லை.
ஏனெனில், 2000 ஆண்டுகளுக்கு முன் உத்திரபிரதேசத்தின் பெயர் ‘சக்கேட்டா’ அதற்கான சாட்சி ஆதிபுராணத்தில் இருக்கிறது. மேலும் 16ம் நூற்றாண்டில் உத்திரபிரதேசத்தை ஆட்சி புரிந்த முகலாய மன்னர் தன்னுடைய சின்னமாக மீனை வைத்திருந்தான். அதற்குப் பின்பு ராமரின் வில்லும் கங்கை மற்றும் யமுனை நதியின் சங்கமத்தை சேர்த்து 1916ம் ஆண்டு அந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மீன் சின்னத்தை பாண்டியர்கள் தங்கள் சின்னமாகப் பயன்படுத்தியிருந்தார்கள். அந்தப் பெண் வந்தது கப்பலில் என்று தெளிவாக இருக்கிறது. ஆனால், பண்டையக் காலத்தில் அயோத்தியாவிலிருந்து எந்தக் கடல் கடந்த பயணமும் மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கடல் பயணத்தையே அவர்கள் தவறு என்று கூறினார்கள்.
இதை சரியாக ஆராயாமல் ராணி செம்பவளம் அயோத்தியாவை சேர்ந்தவள் என்ற பொய்யான தகவலைப் பரப்பியதை நம்பி கொரிய அரசு அவளுக்கு அயோத்தியாவில் நினைவுச்சின்னத்தை அமைத்திருக்கிறது. அந்த நினைவுச் சின்னம் உண்மையிலேயே ஆய்நாடு இருந்த கன்னியாகுமரியில் அமைய வேண்டியது. எனினும், இன்றுவரை கொரிய மொழியில் பிரிக்க முடியாத அளவு பின்னிப் பிணைந்துள்ள தமிழ் மொழியே இதற்கு சான்றாக அமைகிறது.