நம் கலாசாரங்களில் ஆரத்தி எடுப்பது என்பது பாரம்பரியமாக பின்பற்றி வரும் ஒரு பழக்கம். இந்த கணினிமயமான உலகத்தில், விஞ்ஞானமும், நவீன வாதமும் முற்போக்கு வாதமும் நம் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்றபோதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாதவையாகவே நீடித்து நிற்கின்றன. இதில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது. தொலைதூர பயணங்கள் முடித்து வரும் குடும்பத்தினர், திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய்மார்கள் முதலியவர்களுக்கு பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு.
தண்ணீரில் மஞ்சள் கரைத்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்க்கின்றனர். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிறப்பு நிறம் வருகின்றது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரைச் சுற்றி ஆரத்தி எடுக்கிறோம். இவ்வாறு மூன்று முறை சுற்றுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு என்பதை நாம் கண்டறிந்து உள்ளோம். அந்த நபரின் மேல் சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் நோக்கம்.
இன்னும் சொல்லப்போனால் கற்பூரத்தை பொதுவாக பூஜைகளுக்கு ஏற்றி சுற்றிப்போடுவது வழக்கம். இதை பூஜையின் பாகமாக இறையருளுக்காக செய்வதாகவே கருதுகின்றனர். அதேபோல், கற்பூரம் திருமணமாகி வரும் புதுமண தம்பதியரை வரவேற்பதற்காக வாசற்படியின் இருபுறங்களிலும் பக்கத்துக்கு 11 கற்பூரம் என்று இரண்டு பக்கமும் வரிசையாக ஏற்றிவிட்டு பிறகுதான் ஆரத்தி எடுப்போம்.
இதற்கு என்ன காரணம் என்றால், கற்பூரம் ஏற்றும்போது அதன் புகை சென்று சேரும் இடம் எல்லாம் பாசிட்டிவ் சக்தி பரவுகின்றது. மேலும், சூழ்நிலையில் உள்ள விஷ அணுக்களை அழிக்கவும் இந்த கற்பூர புகைக்கு சக்தி உண்டு. இதனால் புதுமண தம்பதியர் புத்துணர்ச்சி பெறுவர். திருஷ்டியும் கழியும். இறையருளும் கிடைக்கப்பெறும். இந்த உண்மைகளை அறிந்திருந்ததால்தான் இன்றும் ஆரத்தியில் வெற்றிலையின் மீது கற்பூரத்தை ஏற்றிக் காண்பிக்கிறோம். வெற்றிலை சிறந்த சுத்திகரிப்புப் பொருள் என்பதும் நாம் அறிந்ததே.
இப்படி, ஒவ்வொன்றிலும் அறிவியலுடன் ஆன்மிகமும் இரண்டறக் கலந்திருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்து அறியலாம்.