Ant chutney with a geographical indication 
கலை / கலாச்சாரம்

புவிசார் குறியீடு பெற்றுள்ள எறும்பு சட்னியின் பாரம்பரியம் தெரியுமா?

ஆர்.வி.பதி

ழங்காலத்தில் மக்கள் பூச்சிகள் மற்றும் புழுக்கள் முதலானவற்றையும் தங்கள் உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள். காலப்போக்கில் இது மறைந்தாலும் இன்னும் சில மாநிலங்களில் இத்தகைய உணவு கலாசாரம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் பலர் ஈசல் மற்றும் இலிப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் வழக்கம் உள்ளது. மழைக்காலங்களில் வெளிச்சத்தை நாடிவரும் ஈசல்களைப் பிடித்து அவற்றை அரிசியோடு சேர்த்து வறுத்து உண்பது இன்றளவும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது.

இதேபோல், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்ட பழங்குடி மக்கள் சிலர் சிவப்பு எறும்புகளைக் கொண்டு செய்யப்படும் சட்னியை உணவாகப் பயன்படுத்தும் காலாசாரத்தைக் கொண்டுள்ளனர். இந்த எறும்பு சட்னியைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிவப்பு நெசவாளர் எறும்பு (Red Weaver Ants) எனும் ஒரு வகை சிவப்பு எறும்புகளைக் கொண்டு இந்த பாரம்பரியமான சட்னி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் அறிவியல் பெயர் ஓகோபில்லா ஸ்மரக்டினா (Oecophylla smaragdina) ஆகும். இத்தகைய எறும்புகள் கடித்தால் வலி மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், உடலில் கடிபட்ட இடத்தில் தடிப்புகள் ஏற்படும். இத்தகைய எறும்புகளைக் கொண்டு இயற்கையான முறையில் பழங்குடி மக்களால் உருவாக்கப்படும் சட்னியின் பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு இதை அங்கீகரிக்கும் விதமாக சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு (GI-Geographical Indication) 02 ஜனவரி 2024 அன்று வழங்கப்பட்டுள்ளது.

சிவப்பு எறும்புகள் மற்றும் அவற்றின் முட்டைகளில் புரதம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு எறும்புகள் அதிக அளவில் புரதச் சத்தைக் கொண்டுள்ளன. இது நமது உடல் தசைகளை வலுவானதாக ஆக்கும் வல்லமை படைத்தது. சிவப்பு எறும்புகளில் வைட்டமின் பி12, பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் முதலான நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிவப்பு எறும்பு சட்னியின் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் செயற்கையான பொருட்கள் ஏதும் இதில் கலக்காமல் உருவாக்கப்படும் இயற்கையான ஒரு உணவாகும். எறும்புகள் மற்றும் முட்டைகள் உள்ளூர் மசாலாப் பொருட்களின் கலவையுடன் இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமான இந்தத் தயாரிப்பு முறையானது பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த எறும்பு சட்னி கலாசாரப் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

ஒடிசா பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்புகளைப் பிடித்து அதனுடன் மிளகாய், உப்பு, இஞ்சி மற்றும் பூண்டினைச் சேர்த்து நன்றாக அரைத்து சட்னியைத் தயாரிக்கின்றனர். இந்தச் சட்னியை அவர்கள் ‘கை சட்னி’ (Kai Chutney) என்றும் அழைக்கிறார்கள்.

மஞ்சள் தூளில் அபாயம்: ஈய அளவு அதிகரிப்பு!

‘வடை போச்சே...!' வடிவேலு சொன்ன இந்த வசனத்துக்குப் பின்னால் இத்தனைக் கதைகளா...?

இந்த 7 விஷயங்கள் தெரிந்தால் போதும் உங்கள் குழந்தையை தயக்கத்திலிருந்து மீட்டுவிடலாம்! 

ஜூட் (Jute) ஆடைகளின் சிறப்புகளும், அவற்றை அணிவதால் உண்டாகும் பயன்களும் பற்றித் தெரியுமா?

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாம்! மன்னித்து விடுங்களேன்!

SCROLL FOR NEXT