தாடி ஆண்களின் முகத்திற்கு ஒரு தனி அழகைத் தருகிறது. அவர்களின் தோற்றத்தை சிறிது மாற்றுகிறது. தாடி கலாசாரம் எப்போது தோன்றியது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆரம்ப கால நாகரிகங்களான சுமேரியர்கள் மற்றும் ஆரியர்கள் தங்கள் தாடியை கவனமாக சீர் செய்து ஸ்டைலாக வைத்திருந்தனர். அன்றைய கலாசாரத்தில் தாடி என்பது ஆண்களை பொறுத்தவரை ஞானம், அந்தஸ்து மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடையது.
பண்டைய எகிப்தில் சாதாரண ஆண்களுக்கு தாடி வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால், அரச பதவி மற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் மட்டும் தாடி வளர்க்கும் பழக்கம் கொண்டிருந்தனர்.
பண்டைய கிரேக்க கலாசாரத்தில் ஆரம்ப காலங்களில் தாடி மிகவும் மதிக்கப்பட்டது. அங்கு ஞானம் மற்றும் வலிமையின் அடையாளமாக தாடி கருதப்பட்டது. சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் முழு தாடியுடன் சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரிஸ்டாட்டிலின் சீடர் மன்னர் அலெக்ஸாண்டர் காலத்தில் தாடி நாகரிகம் இல்லை. அப்போதிலிருந்து சுத்தமாக சேவ் செய்வது வழக்கமானது.
ரோமானியர்கள் தாடி மீது பலவிதமான அனுமானங்களைக் கொண்டிருந்தனர். பேரரசர் ஹட்ரியன் போன்ற ஆரம்பகால ரோமானிய தலைவர்கள் தாடி வைத்திருந்தனர். பின்பு அது மாறி தாடி இல்லாத நாகரிகம் பரவியது.
இடைக்கால ஐரோப்பாவில் மாவீரர்கள் மற்றும் பிரபுக்கள் முழு நீள தாடிகளை கொண்டிருந்தனர். அவை ஆண்மை மற்றும் மரியாதையுடன் தொடர்புடையதாக கருதப்பட்டன. தாடி வைத்திருக்கும் ஸ்டைல் ஒருவரின் சமூக அந்தஸ்தை அல்லது தனிப்பட்ட செல்வாக்கை குறித்தது.
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்தின்போது தாடி வைக்கும் முறை மாறி சுத்தமான ஷேவ் செய்யப்பட்ட வழக்கம் ஆண்களிடையே பரவியது. பல ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மத்தியில் தாடி வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால், பொதுமக்கள் தாடி வைக்கும் பழக்கத்தை பின்பற்றினர்.
பதினேழாம் நூற்றாண்டில் தாடி வைக்கும் பழக்கம் வீரர்கள் மற்றும் சாகசக்காரர்களிடையே மீண்டும் ஒரு எழுச்சி கண்டது. பலவிதமான தாடி ஸ்டைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிலர் நன்கு அழகுபடுத்தப்பட்ட குறுகிய தாடிகளை வைத்திருந்தனர். மேலும் சிலர் நீண்ட மற்றும் ஒழுங்கற்ற தாடிகளை வளர்க்கும் பழக்கம் கொண்டிருந்தனர்.
19ம் நூற்றாண்டில் விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆண்கள் மத்தியில் தாடி வைக்கும் பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. சார்லஸ் டார்வின் மற்றும் ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் தாடி வைத்திருந்தனர். அதனால் தாடி, செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின், ஆண்மையின் அடையாளமாக பார்க்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாடி வைக்கும் பழக்கம் குறைந்து கிளீன் ஷேவ் பழக்கம் வந்தது. இருப்பினும் சிக்மண்ட் பிராய்ட் போன்ற உளவியலாளர்கள் மற்றும் எர்னஸ்ட் ஹெம்மிங்வே போன்ற நாவலாசிரியர்கள் தாடி வளர்த்ததால் அது அறிவின் அடையாளமாகக் கருதப்பட்டது.
1960 மற்றும் 70 காலகட்டத்தில் தாடி வைக்கும் பழக்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இது கிளர்ச்சியாளர்களின் அடையாளம் என்று கருதப்பட்டது.ஹிப்பி இயக்கம் மற்றும் ஹிப்ஸ்டர் துணை கலாசாரம் தாடி வைக்கும் பாணியை தழுவியது.
21ம் நூற்றாண்டில் ஃபேஷன் மாறுபாடுகள் காரணமாக மறுபடியும் தாடி குறிப்பிடத்தக்க பிரபலத்தை பெற்றுள்ளது. நேர்த்தியாக ட்ரிம் செய்யப்படும் தாடி முதல் முழு தாடி மற்றும் புதர் தாடி வரை நிறைய தாடி ஸ்டைல்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன.