சாம்பார் இட்லி 
கலை / கலாச்சாரம்

உணவுக்கு சுவை சேர்க்கும் சாம்பார் தோன்றிய வரலாறு தெரியுமா?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

தென்னிந்திய உணவுகளில் முக்கியமான அங்கம் வகிப்பது சாம்பார் ஆகும். உணவுகளுக்கு சுவை கூட்டும் இந்த சாம்பார் தோன்றி வரலாறு பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சாம்பார் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 வகை சாம்பார்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சமையல் கலைஞர்களும் புதிது புதிதாக சாம்பார் வகைகளைக் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சாம்பார் நமது உணவோடு 17ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. அதற்கு முன்பு வரை பல்வேறு வகையான குழம்புகள் இருந்தபோதும் பருப்புடன் சேர்த்து உண்ணும் இந்த வகை சாம்பார் 17ம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அது தொடங்கியது ஒரு சுவாரசியமான சம்பவம்‌. தஞ்சாவூர் மராத்திய அரண்மனையில் நிகழ்ந்தது. அந்த வரலாற்றை சற்றுப் பார்ப்போம்.

மராத்திய தளபதி ஏகோஜி (வெங்கோஜி என்றும் அழைக்கப்பட்டார்) கி.பி. 1674ம் ஆண்டு தஞ்சாவூரைக் கைப்பற்றினார். அது முதல் தஞ்சாவூரில் மராத்திய ராஜ வம்சம் தொடங்கியது. இந்த ஏகோஜி சிவாஜியின் மாற்றான் தாய் மகன். அதாவது மாற்று சகோதரன். ஏகோஜிக்கும் சிவாஜிக்கும் இடையே சில பிரச்னைகள் கி.பி. 1670களில் நிலவியபோது அதனைத் தீர்த்ததில் ஏகோஜியின் மனைவி தீபா பாய் நல்லாலோசனைகள் முக்கியப் பங்காற்றின. மனைவி ஒரு மந்திரி என்ற சொல்லிற்கு தீபா பாய் நல்லதொரு உதாரணமாக விளங்கினார்.

‘என்ன சார், சாம்பார் கதைக்கு இன்னும் வரவில்லையே’ என்று கேட்பது காதில் விழுகிறது. இந்த ஏகோஜியின் அரண்மனைக்கு, அதாவது சித்தப்பாவின் அரண்மனைக்கு சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி கி.பி. 1680களில் விஜயம் செய்தார். மராத்தியர்களிடம் ‘அம்டி’ என்றொரு பருப்பு சேர்த்த குழம்பு பிரபலம். இந்த அம்டி செய்வதற்கு, புளிப்பிற்காக மகாராஷ்டிரத்திலிருந்து ‘கோகும்’ என்ற பழத்தின் உலர வைத்த தோலினைப் பயன்படுத்துவார்கள். சம்பாஜி வந்த அன்று அம்டி செய்வதற்கு  போதுமான அளவு  கோகும் இல்லை. அதனை உடனே வரவழைக்கவும் இயலாது. ஏனென்றால் அது மகாராஷ்டிரத்திலிருந்து வரவேண்டிய ஒரு மசாலாப் பொருள்.

சமையல்காரர் ஒரு உபாயத்தை யோசித்தார். நம் தமிழகப் பகுதிகளில் நாம் பயன்படுத்தி வந்த குழம்பில் புளியை புளிப்பிற்காகப் பயன்படுத்தினோம். எனவே, கோகுமிற்கு பதிலாக புளியை அந்த சமையல்காரர் சமயோஜிதமாகப் பயன்படுத்தினார்.

சம்பாஜிக்கு அந்தப் புளியைச் சேர்த்த அம்டி மிகவும்  பிடித்துப்போனது. மிகவும் விரும்பி உண்டார். சம்பாஜி விரும்பிய அந்த உணவுக்கு, ‘சாம்பார்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இப்படி சாம்பார் நமது உணவில் சேர்வதற்கு சம்பாஜி முக்கியமான காரணமாக இருந்துள்ளார். சாம்பார் நமக்குக் கிடைக்க உதவிய மராத்தியர்களுக்கு நன்றி.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT