இந்திய கலாசாரத்தின் அடிப்படையான அம்சம் யாரைப் பார்த்தாலும் கை கூப்பி வணங்குவதும், பெரியவர்களைக் கண்டால் தரையில் விழுந்து வணங்குவதுமாகும். பணிவைக் குறிக்கும் வார்த்தை நமஸ்காரம். இன்றைய நவீன கலாசாரத்தில் வணங்குதல் என்பது பலவீனத்தின் அடையாளமாகவோ, பத்தாம் பசலித்தனமாகவோ எண்ணப்படுகிறது. அதனால் இந்தப் பழக்கம் இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறது.
‘நம’ என்றால் வளை, ‘நமஸ்காரம்’ என்றால் வளைதல், பணிதல் என்று பொருள். இரு கைகள், இரு முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குவதை ‘பஞ்சாங்க நமஸ்காரம்’ என்கிறோம்.
தலை மேல் இரு கரம் கூப்பி வணங்குவதை, ‘திரியங்க நமஸ்காரம்’ என்றும், இரு கைகள் மார்பு, இரு முழங்கால்கள் பூமியில் பட வழங்குவதை, ‘சாஷ்டாங்க நமஸ்காரம்’ என்றும் அழைக்கிறோம். தலை மட்டும் குனிந்து வணங்குதல், ‘ஏகாந்த நமஸ்காரம்’ எனப்படும். தலை, இரு கைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு ஆகிய அனைத்தும் பூமியில் படும்படி வணங்குவதை, ‘அஷ்டாங்க நமஸ்காரம்’ என்கிறோம்.
ஒரு மனிதனுக்கு உடல்தான் பிரதான அடையாளம். எண் ஜாண் கிடையாக விழுந்து வணங்கும்போது அவன் உடல், மனம் மற்றும் அனைத்தையும் கோயிலில் இருக்கும் இறைவனுக்கு பரிபூரணமாக தன்னை அர்ப்பணிக்கிறான். அதாவது சரணாகதி அடைகிறான்.
‘பஞ்சாங்க நமஸ்காரம்’ எனப்படும் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு கைகள் பூமியில் பட வணங்குதலை பெண்கள் செய்யவும், அஷ்டாங்க நமஸ்காரத்தை ஆண்கள் செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது.
நமஸ்காரம் செய்வது என்பது நம் அகங்காரத்தை குறைக்கும். நான் என்ற எண்ணத்தை போக்கும். என்னால் ஆவது ஒன்றும் இல்லை, எல்லாம் உன் செயலே என சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கம் ஆகும்.
பெற்றோருக்கு ஒரு முறை, இறைவனுக்கு மூன்று முறை, சன்னியாசிகளுக்கு நான்கு முறை என நமஸ்காரம் செய்ய வேண்டும். மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது அவர்கள் ஆசியளிக்க வேண்டும். கோயிலில் இறைவனைத் தவிர யாருக்கும் நமஸ்காரம் செய்தல் கூடாது.