திருநெல்வேலியின் பல சிறப்புகளில் பத்தமடைப் பாயும் ஒன்று. மத்த பாய்களை விட, பத்தமடைப் பாய்கள் ரொம்பவே ஸ்பெஷல். திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வளரும் கோரைப் புற்களால் நெய்யப்படும் பாய்கள்தான் பத்தமடை பாய்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாய்கள் பரவலாக நெய்யப்பட்டு வந்தாலும் பத்தமடை பாய்க்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம்தான். இந்த பாய்க்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்புகள் தெரியுமா?
பத்தமடைப் பாய்கள் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வளரும் காய்ந்த கோரைப்புல் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கோரைப் புல் நல்ல தரமானவை. இந்தப் பாய்களின் குறுக்கு இழை பருத்தி அல்லது பட்டினால் ஆன இழைகளால் நெய்யப்படுகின்றது. பிற புற்களால் செய்யப்படும் பாய்களை விட இவை மெல்லியதாகவும், மிருதுவாகவும் இருக்கும். இப்பாய்கள் 100 முதல் 140 பாவு பருத்தியாலோ பட்டு இழைகளாலோ நெய்யப்படுபவை. இந்த பாய்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளான கோரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
இந்த சிறிய ஊரில் கலை ரசனையுடன் தயாரிக்கப்படும் பத்தமடை பாய்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடி சூட்டிக்கொண்டபோது அவருக்கு இங்கிருந்து பத்தமடைப் பாய் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், ரஷ்ய ஜனாதிபதியும், இந்திய ஜனாதிபதியும், விக்டோரியா மகாராணியும் கூட இந்த பத்தமடைப் பாயை பாராட்டி உள்ளார்கள். பத்தமடை பாய்க்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புல் இனத்தில் ஒருவகை நாணல். இந்த நாணல் புற்கள் தண்ணீர் இருக்கும் இடங்களில்தான் அதிகமாக வளரும். அதனால் இயற்கையாகவே இவற்றிற்கு குளிர்ச்சி தன்மை உண்டு. தாமிரபரணி தண்ணீருக்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இந்தத் தண்ணீர் பாயும் கோரையில் செய்யப்படும் பாய்களில் படுக்க நோய் தீருவதாகச் சொல்கிறார்கள்.
திருமணத்துக்கென்றே பாயில் மணமக்கள் பெயரையும், தேதியும் கூட தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு இணங்க இவர்கள் நெய்து தருவதுண்டு. இந்தப் பாயை வாங்க நேரில்தான் சென்று ஆர்டர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போன் மூலமே அவர்களுக்குத் தெரிவித்து பணத்தையும் அனுப்பிவிட்டால் போதும் தயாராகி வந்துவிடும்.
இந்தப் பாய்களில் முரட்டு நெசவு வகை, நடுத்தர நெசவு வகை, நுண் நெசவு வகை என்று மூன்று வகை உண்டு. நுண் வகை பத்தமடைப் பாயை நெய்யப் பயன்படும் கோரையின் புற உறை உரித்து கிடைக்கும் நுண்புரிதான் இந்தப் பாய்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
சாதாரணமாக பாய்கள் தடிமனாக இருக்கும். ஆனால், இந்த பத்தமடைப் பாய்களோ மிகவும் மெல்லியதாக இருக்கும். இந்தக் கோரைகளை எவ்வளவு மெல்லியதாக பிரித்தெடுக்கின்றார்களோ அதைப் பொறுத்து விலையும் அதிகமாக இருக்கும்.