அணையின் நடுவே கோட்டை https://tamil.nativeplanet.com
கலை / கலாச்சாரம்

அணையின் நடுவே உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கோட்டை எங்குள்ளது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

சியாவிலேயே மிக நீளமான மண் அணை, தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணை, 6 கிராம மக்களின் தியாகத்தால் உருவான அணை… இப்படிப் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. இதை அனைத்தையும் தாண்டி பவானிசாகர் அணைக்குள் உலகம் வியக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கம்பீரமான கோட்டை மூழ்கிக் கிடப்பது பலருக்கும் தெரியாது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஐந்து லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பவானிசாகர் அணையின் நடுவே ஒரு கோட்டை அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் மட்டுமே, குறிப்பாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கினால் மட்டுமே இதைப் பார்க்க முடியும். இந்தக் கோட்டையின் வரலாறு, இக்கோட்டையை கட்டியது யார், பவானிசாகர் அணை உருவாகக் காரணமான ஐந்து கிராம மக்களின் தியாகம் ஆகியவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1948 முதல் 1955 காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது இந்த பவானிசாகர் அணை. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்பு அங்கு பீர்க்கடவு, வடவள்ளி குய்யனூர், பட்டரமங்கலம், ராஜன் நகர் என ஐந்து கிராமங்கள் கூடுவாய் எனும் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டு இருந்தன. இந்த ஐந்து கிராமங்களின் தியாகத்தால் உருவானதுதான் இந்த பவானிசாகர் அணை. இப்படிப் பல பெருமைகளை கொண்ட பவானிசாகர் அணைக்குள்தான் இந்த உலகம் வியக்கும் வரலாற்று சிறப்புமிக்க கம்பீரமான கோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டையைக் கட்டியவர் ஹொய்சாளர்களின் ஆட்சியில் படைத் தளபதியாக இருந்த பெருமாள் தண்டநாயகன் என்பவர். இவர் இந்தக் கோட்டையை எப்படிக் கட்டினார்?

ஹொய்சாளர்கள், தமிழகத்தில் சோழர்கள் எப்படி தங்களது கட்டடக்கலைக்கு சான்றாக பல்வேறு வரலாற்று முத்திரைகளை விட்டுச் சென்றுள்ளனரோ அதுபோலவே இந்த  ஹொய்சாளர்கள் கர்நாடகாவில் தங்களது கட்டடக்கலை, இலக்கியம் என்று தெளிவான முத்திரையை விட்டுச் சென்றுள்ளனர். ஹொய்சாள பேரரசு கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டது. மேலும், பாண்டியர்களுக்கு எதிராக பதவி நீக்கம் செய்யப்பட்ட சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு உதவி புரிந்த ஹொய்சாளர்கள் தமிழகத்தின் சில பகுதிகளிலும் ஆட்சி செய்தனர். இந்த ஹொய்சாளர் மன்னர்கள் பொதுவாக பல்லாளர்கள் என அழைக்கப்பட்டனர்.

பவானிசாகர் அணை

வீரபல்லாலர்  என்பவர்தான் ஹொய்சால வம்சத்தின் 11வது மற்றும் கடைசி ஆட்சியாளர். இந்தப் பேரரசின் ராணுவத் தளபதிகள் தண்டநாயகா என்று அழைக்கப்பட்டனர். மூன்றாம் வீர பல்லாளனின் தளபதியாக இருந்து கொங்கு நாட்டை கைப்பற்றும் பொறுப்பில் இருந்தவர்தான் இந்த தண்டநாயக்கா. வீரபல்லாளன் தண்டநாயக்கத்தின் மீதுள்ள வீரத்தையும் நம்பிக்கையும் போற்றும் வகையில் கொங்கு நாட்டின் பகுதியை பெருமாள் தண்டநாயக்கருக்கு பரிசாக அளித்துள்ளார். அப்படிக் கிடைத்த இடம்தான் பவானிசாகர் அணை அமைந்துள்ள இடம். அங்குதான் அந்த ராணுவத் தளபதி கொங்கு மண்டலத்தை கோட்டை கட்டி ஆண்டதாக வரலாறு கூறுகிறது.

இந்தக் கோட்டைதான் ஒரு காலத்தில் தண்டநாயக்க கோட்டை என அழைக்கப்பட்டு பிறகு ‘டணாய்க்கன்’ கோட்டையாக மாற்றப்பட்டு தற்போது அறியப்படுகிறது. இது கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நுழைவாயிலான கஜல்ஹட்டி கணவாயை டணாய்க்கன் கோட்டை பாதுகாத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு மூன்றாம் நரசிம்மா தனது தந்தை வீர சோமேஸ்வரன் நினைவாக கட்டிய சோமேஸ்வரர்  மங்களாம்பிகை கோயிலும் உள்ளது. இந்தக் கோட்டையும் கோயிலும் முகலாயர் படையெடுப்பில் சூறையாடப்பட்டன.

பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஹொய்சாலர் இந்தக் கோட்டையையும் கோயிலையும் புதுப்பித்துள்ளார். கிட்டத்தட்ட 12 வருடங்களாக நீருக்குள் மூழ்கி இருந்த மிகவும் பழைமையான கொங்கு நாட்டு வரலாற்று சிறப்புமிக்க கோட்டை தற்போது வெளியே வந்துள்ளது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 49 அடி தண்ணீர் உள்ளதால் மாதவராயப் பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சி அளிக்கிறது. 32 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட மண்டபம் அழகாகக் காட்சி தருகிறது. இன்னும் பத்து முதல் 12 அடி வரை நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கி திட்டு முழுவதுமாகக் காட்சி அளிக்கும்.

இந்தக் கோயில்கள் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கோட்டையைக் காண படகு சவாரி வசதியும் உண்டு. அணையில் இருந்து இந்தக் கோட்டையை பார்த்து ரசித்துவிட்டு வரலாம்.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

SCROLL FOR NEXT