Do you know where the temple where the rotating lingam is located? https://www.youtube.com
கலை / கலாச்சாரம்

சுழலும் லிங்கம் காட்சி தரும் திருக்கோயில் எங்குள்ளது தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

ரு சமயம் ஔவை பிராட்டி சிவபெருமானை தரிசிக்க கயிலாயம் சென்றார். நீண்ட நேரம் நடந்து வந்த களைப்பினால் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் வீற்றிருந்த திசையை நோக்கி அவர் தனது காலை நீட்டினார். இதைக் கண்ட பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிட்டது. ஔவையிடம் வந்த பார்வதி தேவி, “ஔவையே, உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திசையை நோக்கி நீங்கள் உங்கள் கால்களை நீட்டி அமர்ந்து இருக்கிறீர்களே, இது அவரை அவமரியாதை செய்வது போல் அல்லவா உள்ளது. எனவே, உங்கள் கால்களை வேறு திசையை நோக்கி நீட்டி அமருங்கள்” என்றாள்.

இதைக் கேட்டு ஔவையார் சிரித்தார். அம்பிகையிடம், “தாயே என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படி ஒரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே. அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே எனக்குச் சொல்லுங்கள். அந்த திசை நோக்கி எனது காலை நீட்டிக்கொள்கிறேன்” என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.

இப்படி அனைத்து திசைகளிலும் காட்சி தரும்படியான சுழலும் சிவலிங்கம் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்தான் அமைந்துள்ளது. இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்தும்விதமான இந்த சிவலிங்க ஓவியம் அமைந்துள்ளதாக ஐதீகம். ஸ்ரீ மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து அருள்மிகு சுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு செல்லும் இரண்டாம் பிராகாரத்தில், முக்குறுணி விநாயகர் சன்னிதி அருகில் மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில் சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது. இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று தரிசித்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை பீடம் நம்மை நோக்கி இருப்பது போலவே இருக்கும் என்பதுதான் அதிசயம். கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பிவிடும். மேற்கே சென்றால் அங்கும் வந்துவிடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்த பக்கமாகவும் வந்துவிடும் இப்படியான ஒரு அதிசய ஓவியம் இது.

இந்த அதிசய சிவலிங்க ஓவியத்துக்கு மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால் அபிஷேகத் தீர்த்தம் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றி சுற்றி எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, ‘சுழலும் லிங்கம்’ என்று பெயர். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் அவசியம் இந்த சுழலும் லிங்கத்தை தரிசித்துவிட்டு வாருங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT