Do you know where the world's largest silverware is?
Do you know where the world's largest silverware is? 
கலை / கலாச்சாரம்

உலகின் மிகப்பெரிய வெள்ளிப் பொருட்கள் எங்கு உள்ளன தெரியுமா?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

லகத்தின் மிகப்பெரிய வெள்ளி பாத்திரம் எங்குள்ளது தெரியுமா? ஒன்றல்ல, இரண்டு வெள்ளிப் பாத்திரங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. அவை, ஜெய்ப்பூரிலுள்ள சிட்டி பாலஸில், அதாவது நகர அரண்மனையில் உள்ளன. அவை இரண்டு வெள்ளி கூஜாக்கள். கின்னஸ் புத்தகத்தினால், உலகின் மிகப்பெரிய வெள்ளிப் பாத்திரங்கள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்த வெள்ளி பாத்திரங்கள், ‘கங்காஜாலிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டு வெள்ளி கூஜாக்கள் 1894 முதல் 1896 வரையிலான காலகட்டத்தில், ஜெய்ப்பூரில் மகாராஜா சவாய் இரண்டாவது மாதோ சிங் அவர்களால், மிஸ்ட்ரி கானா என்ற பட்டறையில், கோவிந்த ராம், மாதவ் ராம் என்ற வெள்ளி கொல்லர்களால் உருவாக்கப்பட்டன. இவை கங்கை நீரினை சுமந்து செல்வதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை ஒவ்வொன்றின் எடை 345 கிலோ. இவற்றின் உயரம் 5 அடி 3 அங்குலம். சுற்றளவு 14 அடி 6 அங்குலம். இவற்றில் தண்ணீரை மொண்டு எடுப்பதற்கு ஏணிகள் உருவாக்கப்பட்டன.

இவை ஒவ்வொன்றும் 14,000 வெள்ளி நாணயங்களை உருக்கி, தகடுகளாக ஆக்கி, மரத்திலான அச்சில் ஊற்றி உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட4,091 லிட்டர் தண்ணீரை தாங்கும் கொள்ளளவை உடையவை. சவாய் இரண்டாவது மாதோ சிங் கடவுள் பக்தி நிறைந்தவர். வாழ்நாள் முழுவதும் தனது தேவைகளுக்கு கங்கை நதி நீரையே பயன்படுத்தினார். வெள்ளி புனிதத்துடன் சம்பந்தப்பட்டதால், கங்கை நீர் வெள்ளி கூஜாவில் வைக்கப்பட்டிருந்தது.

விக்டோரியா ராணி கி.பி.1901ம் ஆண்டு மறைந்தார். அவரது மகன் ஏழாவது எட்வர்ட் கி.பி.1902ம் ஆண்டு முடிசூட்டியபோது, ஜெய்ப்பூர் அரசர் மகாராஜா சவாய் இரண்டாம் மாதோ சிங் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து சென்றபோது, மாதோ சிங் இந்த கூஜாக்களையும் உடன் எடுத்துச் சென்றார். கூஜாக்களை எளிதில் எடுத்துச் செல்ல, சக்கரங்கள் பொருத்திய வட்ட வடிவ அடித்தளம் அமைக்கப்பட்டது. அரசர் ஏழாவது எட்வர்ட் இதனைக் காண்பதற்கே, மாதோ சிங்கை அவரது இருப்பிடத்தில் சந்தித்தார்.

இந்த வெள்ளி கூஜாக்கள் இப்போதும் ஜெய்ப்பூரின் நகர அரண்மனையில் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு வைக்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர் போகும்போது, இவற்றைக் காணத் தவறாதீர்கள்.

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

SCROLL FOR NEXT