பிரபல வயலின் கலைஞர் கன்யாகுமரிக்கு சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான. ‘துரோணாச்சார்யா விருது’ வழங்கப்பட்டது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளரான என்.கோபாலசுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வயலின் கலைஞர் கன்யாகுமரிக்கு இந்த விருதினை வழங்கினார்.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் 1985ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டுவரும் முக்கியமான ரோட்டரி சங்கமாகும். பல்வேறு சமூக நலத் திட்டங்களை ஆற்றிவரும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், ஆண்டுதோறும் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கும் பல்வேறு வகையான விருதுகளை அளித்து கௌரவித்து வருகிறது.
2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவரும், ‘துரோணாச்சார்யா விருது’ பல்வேறு துறைகளில் திறம்பட்டவர்களை அங்கீகரிப்பதன் மூலமாக கற்றல் மற்றும் சாதனை கலாசாரத்தை வளர்ப்பதுடன், மற்றவர்களையும் அந்தந்தத் துறைகளின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் ஊக்குவிக்கின்றது. கர்நாடக இசைத்துறையில் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிவரும் அவரது இசைத்துறை அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
கடந்த நாற்பதாண்டுகளாக வயலின் கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கும் கன்யாகுமரி பல்வேறு விருதுகள் பெற்றவர். இவருக்கு 2016ம் ஆண்டுக்கான சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் வயலின் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தவிர, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, திருப்பதி ஸ்ரீ தியாகராஜர் விழாக் குழு வழங்கிய சப்தகிரி சங்கீத வித்வான்மணி விருது, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பின் சங்கீத கலா நிபுணா விருது, கிருஷ்ண கான சபையின் சங்கீத சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் ஆளுநர் இவருக்கு கெளரவ குடியுரிமை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்.
கன்யாகுமரி கச்சேரிகள் செய்யத் தொடங்கி வெள்ளி விழா கொண்டாடியபோது நடந்த பாராட்டு விழாவில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி இவருக்கு, ‘தனுர்வீணா பிரவீணா’ என்ற பட்டத்தை வழங்கினார்.
2004ம் ஆண்டு ஒரு பெண் வயலின் கலைஞர் என்ற முறையில் பல்வேறு சாதனைகள் புரிந்தமைக்காக இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.
“கடந்த இசை விழா சீசனில் மியூசிக் அகாடமியில் கச்சேரிகளுக்கு வயலின் வாசித்தவர்களில் 40 சதவிகிதம் பேர் கன்யாகுமரியின் சிஷ்யர்கள் என அண்மையில் தெரிந்துகொண்டேன். கன்யாகுமரியின் சிஷ்யர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர், வயலின் கற்றுக் கொடுக்க கட்டணம் வாங்குவதில்லை என்று அறிந்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்! மிக அபூர்வமான ஒரு கலைஞர் கன்யாகுமரி! அவருக்கு துரோணாச்சார்யா விருது அளித்தது எனக்குப் பெருமையாக உள்ளது” என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார் கோபாலசுவாமி.
தனது ஏற்புரையில், கோபாலசுவாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்த அதே நிகழ்ச்சியில்தான் எனக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. இன்று அவர் கையால் விருது வாங்குவதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார் கன்யாகுமரி.
கன்யாகுமரி குறித்த அறிமுகம் முடிந்தவுடன் திரையிடப்பட்ட அவருடைய வயலின் கச்சேரி கிளிப்பிங் அன்று பார்வையாளர்களுக்குக் கிடைத்த ஒரு ரசிக்கத்தக்க போனஸ்!