Eppadi Iruntha Naan Ippadi Aayittean
Eppadi Iruntha Naan Ippadi Aayittean https://www.dimtsas.eu/en
கலை / கலாச்சாரம்

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

ங்களிடம் தங்கத் தட்டு, வெள்ளித் தட்டு, அலுமினியத் தட்டு மூன்றையும் கொடுத்தால், நீங்கள் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? சந்தேகமில்லாமல், தங்கத் தட்டினைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள்? ஆனால், பிரெஞ்ச் பேரரசின் மூன்றாவது நெப்போலியன் அலுமினியத் தட்டுக்களையே பயன்படுத்தினார். தங்கம், வெள்ளி போன்றவற்றை இரண்டாம் பட்சமாகவே பார்த்தார். மூன்றாவது நெப்போலியன் என்ன, பிரெஞ்ச் பிரபுக்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் அலுமினிய பித்தான்களை அணிந்தனர். அதனை தங்கத்தினை விட உயர்வாக கருதினர். ஆச்சரியமாக உள்ளது இல்லையா?

அலுமினியத்தின் கம்பீரமான வரலாறு: 1778ம் ஆண்டு வாக்கிலேயே அலுமினியம் ஒரு உலோகமாக இருக்கலாம் என கணித்த லவாய்சியர், தனது வேதியியில் கூறுகள் என்ற புத்தகத்தில் ஆர்ஜில்லா என்று இதனை குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்போது அலுமினியத்தை தனி உலோகமாகப் பிரித்தெடுக்கும் முறைகள் வரவில்லை.

1807ம் ஆண்டு டேவி, ஆலம் என்பது கண்டுபிடிக்கப்படாத ஒரு உலோகத்தின் உப்புதான் என்ற கோட்பாட்டினை வைத்து அதற்கு, 'அலுமினம்' என்று பெயரிட்டப்போதும், அதனை முதலில் செயல்படுத்தியவர் ஒயர்ஸ்டெட் என்ற விஞ்ஞானி. அவர் 1825ம் ஆண்டு, அலுமினியத்தினை முதலில் பிரித்தெடுத்தார். 1827ம் ஆண்டு, ஜெர்மானிய விஞ்ஞானி ஓஹ்லர், புதிய விதமாக அலுமினியத்தினைப் பிரித்தெடுக்கும் முறையினைக் கண்டார். ஆனால், இவற்றின் மூலம் கிடைக்கும் அலுமினியமானது மிகவும் குறைவான அளவே.

1854ம் ஆண்டு, டெவில்லி என்ற பிரஞ்ச் விஞ்ஞானி முதன் முறையாக கிலோ அளவில் அலுமினியத்தினைப் பிரித்தெடுக்கும் முறையினைக் கண்டுபிடித்தார். அதுவரை கிலோ கணக்கில் அலுமினியத்தினை பிரித்தெடுக்க பல வருடங்களாகும். அப்போது, பிரஞ்சு சக்கரவர்த்தியாக இருந்த நெப்போலியன் III, டெவில்லிக்கு அளவு கடந்த பணத்தினை ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய பின்னரே, இத்தகைய கிலோ கணக்கு அலுமினியம் கிடைத்தது. அதனை ஒரு காட்சிப் பொருளாக, மிகப்பெரிய கண்காட்சியான 'எக்ஸ்போசிஸன் யுனிர்வஸ்லலே' என்பதில் வைக்கப்போக, அப்போது அலுமினியத்தின் மதிப்பானது பலமடங்கு பெருகியது.

அதனுடைய மெலிதான பளபளப்பும், மேலும் எடைக்குறைவும், மக்களுக்குப் பிடித்துப்போக, எல்லா மேல்தட்டு மக்களும், அலுமினியத்தினை ஆபரணங்களாக உபயோகிக்கத் தொடங்கினர். அதைக் கண்ட, விஞ்ஞானி டெவில்லி, பல தொழிற்சாலை உபயோகமுள்ள உலோகம் இப்படி வீணாகிறதே என வருந்தினார். அதன் எடைக்குறைவைக் கண்ட, நெப்போலியன் III அதன் மூலமாக, பாதுகாப்பு கவசங்களை செய்யலாமெனவும் நினைத்தார். பின்னர், அவை சரிப்பட்டு வராமல் போகவே, அதனைக் கொண்டு, தனது உணவு அறைப் பாத்திரங்கள் மற்றும் தட்டுக்கள் என எல்லாவற்றிற்கும் அலுமினியத்தினைப் பயன்படுத்தினார். முதல் தர விருந்தாளிகளுக்கு அலுமினியத் தட்டில் உணவு பரிமாறப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுக்கள் இரண்டாம்பட்ச விருந்தாளிகளுக்கே.

அலுமினியத்தின் வீழ்ச்சி: 1886ம் ஆண்டு வாக்கில், அலுமினியத்தினை அதிக அளவில் மின்பகுப்பின் மூலமாக (Electrolysis) உற்பத்தி செய்யும் முறையினை ஹெரோல்ட் மற்றும் ஹால் என்ற விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். பின்னர், 1888ம் ஆண்டு வாக்கில், பாக்ஸைட் மூலமாக, அலுமினியத்தினை எளிதில் பிரித்தெடுக்கும் முறையினை கார்ல் பேயர் கண்டிபிடித்தவுடன், அலுமினியத்தின் விலை வீழ்ச்சி கண்டது.

1892ம் ஆண்டு, இங்கிலாந்தில், பிக்காடெல்லி சர்க்கஸ் இடத்தில், அலுமினியத்தின் சிலை நிறுவப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிலோ 1200 டாலர் என்று இருந்த, அலுமினியம், 20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 1 டாலர் என வீழ்ச்சி அடைந்தது. இன்று உலகில் ஆக்ஸிஜன், சிலிக்கனுக்கு அடுத்தபடியாக எளிதில் கிடைக்கும் மூன்றாவது தனிமமாக அலுமினியம் உள்ளது. எனவே, அலுமினியத் தட்டைப் பார்த்தால், சாதாரணமாக பார்க்காதீர்கள். அதற்குப் பின்னர், ஒரு பெரிய பணக்கார வரலாறு உள்ளது.

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT