கலை / கலாச்சாரம்

தங்க அம்பாரி!

மும்பை மீனலதா

‘தங்க அம்பாரி’ என்றாலே உடனே நினைவில் வருவது மைசூர் நகரம்தான்.

மைசூர் மன்னர் பரம்பரையில், முக்கிய சின்னமாகக் கருதப்படும் தங்க அம்பாரி சுமார் 750 கிலோ எடை கொண்டதாகும். இதைத் தயாரிக்க தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் சந்தனக் கட்டைகள், யானைத் தந்தங்கள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நவராத்திரி விழா நாட்களில் இந்த தங்க அம்பாரியிலமர்ந்து மன்னர்கள் தர்பார் நடத்தியதோடு, அவர்களது அரசாட்சியின் கீழிருக்கும் பகுதி  மக்களுக்கு தான - தர்மம் செய்து வந்தனர்.  மேலும், விஜயதசமித் திருநாளில் தங்க அம்பாரியை யானை மீது பொருத்தி அதன் மேல் மன்னரை அமரவைத்து வீதியுலாவாக அழைத்து வரும் வழக்கமிருந்தது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபின், மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர, விஜயதசமி ஊர்வல நாளில் தங்க அம்பாரி மீது சாமூண்டீஸ்வரி தேவியை அமர வைப்பது வழக்கமானது.

தங்க அம்பாரி விபரம்

ன்னரின் குடும்பச் சின்னமான அம்பாரி, மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில்  வைக்கப்பட்டுள்ளது. இதில் யது வம்சத்தைச் சேர்ந்த 22 மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர்.

வரலாற்றுப்படி அஸ்தினாபுரத்தை ஆண்ட ‘தர்மராயா’ அரசர்தான், இதனை முதலில் பயன்படுத்தியுள்ளார். பின்னர் மைசூர் மகாராஜா அம்பாரியைக் கைப்பற்ற,  மைசூரு மன்னர்கள் உபயோகப்படுத்தி வந்தனர்-

மூன்று பகுதிகள் கொண்ட அம்பாரியை  கட்டமைக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதன் மூன்று முக்கிய பாகங்களை இணைத்தபின்பு, மாவிலை மற்றும் வாழை இலை கொண்டு அலங்கரிக்கப்படும். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் உருவங்களும், சந்தனத்தால் ஆன சிங்க முகங்களும் அம்பாரியில் இடம் பெற்றிருக்கும். சிம்மாசனத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தங்க குடை மீது சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருக்கும்.

ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் நவராத்திரி விழாவின் இறுதி நாளாகிய விஜயதசமி யன்று நடைபெறும் யானை ஊர்வலத்தில், 700 ஆண்டு கால வரலாற்றினைக் கொண்ட தங்க அம்பாரியைக் காணவும், சாமூண்டீஸ்வரி தேவியை வணங்கி வழிபடவும் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் திருளாக வந்து கூடுவார்கள். இந்த ஊர்வலம் ஜம்பூ சவாரியெனவும் அழைக்கப்படுகிறது.

மைசூர் அரண்மனை கோலாகலம்

த்து நாட்கள் நடைபெறும் மைசூர் தசரா திருவிழாவின் முக்கிய ஈர்ப்பு மைசூர் அரண்மனையாகும். இரவு 7 மணி முதல் 10 மணி வரை தினமும் 1,00,000க்கும் மேற்பட்ட மின்விளக்குகளால் அரண்மைன ஒளிரும். கர்நாடக மாநிலத்தின் நடனம், இசை மற்றும் கலாசாரத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளியேற்றப்பட்ட அரண்மனைக்கு முன்பாக நிகழ்த்தப்படுகின்றன.

மைசூர் அரண்மனைக்கெதிரேயுள்ள கண்காட்சி மைதானத்தில் நடைபெறும் தசரா கண்காட்சி, தசராவின் இன்னுமொரு முக்கிய அம்சமாகும். தசராவின் போது தொடங்கும் இந்தக் கண்காட்சி டிசம்பர் வரை நடைபெறும். ஆடை அணிகலன்கள், சமையலறைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களென மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கிற்காக, விளையாட்டுப் பகுதிகளும் உள்ளன.

மைசூர் தசராத் திருவிழாவும், மைசூர் அரண்மனையும் காண காண திகட்டாததொன்றாகும்.

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

இத தெரிஞ்சுக்காம யாரும் ஸ்மார்ட்போன்  வாங்காதீங்க! 

SCROLL FOR NEXT