ஹாலிவுட் பாடல் விரும்பிகளா நீங்கள்? ஐம்பதைக் கடந்தவர்களா, அப்படியானால் நிச்சயம் ‘கங்க்ராசுலேஷன்ஸ் அண்ட் ஸெலிப்ரேஷன்ஸ்‘ (Congratulations and celebrations) என்ற பாடல் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்.
1968ம் ஆண்டு க்ளிஃப் ரிச்சர்ட் என்ற ஹாலிவுட் பாடகரின் மிகப் பிரபலமான பாடல் அது. உலகெங்கும் பரவி, எல்லாவகையான பாராட்டு நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாமல் பாடப்பட்ட பாடல் இது. அதாவது ‘ஹாப்பி பர்த் டே‘ பாடலுக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் கொண்டாட்டங்களில் பாடி மகிழ்ந்த பாடல், ‘கங்ராசுலேஷன்ஸ்….‘
இந்தப் பாடல் பாரெங்கும் பரவியது என்றால், ரிச்சர்ட் பாடிய பிற எல்லா பாடல்களுமே பெரும் புகழ் பெற்றன. எண்ணற்ற விருதுகள் பெற்றிருக்கும் இவர், இன்றும் தன் 83 வயதிலும் உற்சாகத்துடன் பொது மேடைகளில் அதே ‘கங்ராசுலேஷன்ஸ்…‘ பாடலைப் பாடி வருகிறார். அழைப்பின்பேரில்தான் இவ்வாறு பாட அவர் இந்த வயதில் சம்மதிக்கிறார் என்றாலும், அவருடைய குரலில் வயது தெரியவில்லை என்பதுதான் அற்புதம். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய க்ளிஃப் ரிச்சர்ட் தான் நம் நினைவுக்கு வருவார்.
இங்கிலாந்துக்காரரான இவர், தன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக, தன் தாய்நாடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, வட ஐரோப்பா, ஆசியா என்று அநேகமாக எல்லா நாடுகளிலும் புகழ்க் கொடி நாட்டியவர்.
எல்விஸ் ப்ரஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன் போன்ற பாடகர்களுக்குச் சமமாக, ஏன் அவர்களையும் விட மேலாக சாதனைகள் புரிந்திருக்கிறார் ரிச்சர்ட். ஆயிரக்கணக்கான பாடல் நிகழ்ச்சிகள் என்று மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான தன் இசைத்தட்டுகள் விற்பனை மூலமாகவும் உச்சியில் நிற்கிறார் இவர். நூற்றுக்கணக்கான தங்கம் மற்றும் பிளாட்டினம் டிஸ்க் விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘இந்த விருதுகளை வைத்துக் கொள்ளவே நான் நாலாயிரம் சதுர அடி பரப்புள்ள ஒரு வீட்டை வாங்கலாமா என்றும் யோசித்ததுண்டு,‘ என்று தன் பெருமையைச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் இவர்.
எல்லாம் சரி, அது என்ன, இயக்குநர் பாக்கியராஜ் தலைப்பு – இது நம்ம ஆளு என்று?
இங்கதான் விஷயமே இருக்குங்க.
க்ளிஃப் ரிச்சர்டின் தந்தையார் பெயர் ரோட்ஜர் ஆஸ்கர் வெப்ப் (Rodger Oscar Webb); தாயார், டொரொதி மேரி டேஸ்லி (Dorothy Marie Dazely). இவர்களுக்கு 1940ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் நாள், கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் (இப்போது கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழகம்) ரிச்சர்ட் பிறந்தார். இந்த மருத்துவமனை எங்கே இருக்கிறது தெரியுமா?
நம் உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோவில்! ஆமாம், அந்த காலத்தில் தந்தையார் ரோட்ஜர் அப்போதைய இந்திய ரயில்வேயில் கேட்டரிங் ஒப்பந்ததாரராகப் பணியாற்றியவர். பணி நிமித்தமாக இந்தக் குடும்பம் சில வருடங்கள் மேற்கு வங்கம் ஹௌராவில் வசித்தது. ஆனால் 1946ம் ஆண்டு அங்கு வாழ்ந்த இஸ்லாமியர், தனிநாடு கோரி ‘டைரக்ட் ஆக்ஷன் டே‘ (Direct Action Day) என்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இனி இந்தியாவில் தொடர்ந்து வாழ்வது சரிப்படாது என்று தீர்மானித்த ரோட்ஜர் தன் தாய்நாடான இங்கிலாந்துக்கே சென்று நிரந்தமாகத் தங்கி விட்டார்.
க்ளிஃப் ரிச்சர்ட் இங்கிலாந்திலும், பிறகு உலகம் முழுவதிலும் புகழ் பெற்றாலும், அவர் இந்தியாவில் பிறந்தவர்; ஆகவே அவர் நம்ம ஆளுதானே?