Onam Festival 
கலை / கலாச்சாரம்

பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையின் சுவாரஸ்ய வரலாறு!

கலைமதி சிவகுரு

கொல்ல வருஷம் எனப்படும் மலையாள வருடத்தின் தொடக்கம், ஆவணி திருவோணம்  நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம், ‘அறுவடைத் திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது. சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும்  வாமணன் அவதரித்ததும் திருவோண நாள் எனக் கூறப்படுகிறது.

தானம், தருமங்கள் செய்வதில்  சிறந்து விளங்கிய கேரள மன்னர் மகாபலி ஒரு முறை வேள்வி செய்யும்போது அவரிடம் திருமால் வாமணனாக உருவெடுத்து (குள்ள உருவில்) வந்து மூன்றடி இடம் கேட்டார் மகாபலியும் சம்மதித்தார். ஒரு அடியில் இந்த பூமியையும் மறு அடியில் விண்ணையும், அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தார் மகாராஜா. அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். திருமால் வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி  தள்ளிய இடம் ‘திரு காட்கரை காட்கரையப்பன்’ கோயில் ஆகும்.

தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒரு முறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினார் மன்னர் மகாபலி. திருமாலும் அந்த வரம் கொடுத்து விட்டார். அதனை நினைவு கூர்ந்து மகாபலியை வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அத்தப் பூக்கோலம்: மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் போடப்படும் பூக்கோலம் ‘அத்தப்பூ’ எனப்படும். முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் 2, மூன்றாம் நாள் 3 என தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்து குலுங்கும். அதனால் மக்கள் பூக்களின் திருவிழாவாக ஓணத்தை கொண்டாடுகிறார்கள்.

ஆடை அலங்காரம்: 10  நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் ‘கைகொட்டுக்களி’ எனப்படும். 10 நாட்களுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுவர். முதல் நாள் அத்தம், 2ம் நாள் சித்திரா, 3ம் நாள் சுவாதி. மூன்று நாட்களும் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள்  வழங்கப்படும். முக்கியமாக, களறி, பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவை நடை பெறும்.

ஓணசாத்யா: 4ம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். இவ்வுணவினை ஓணசாத்யா என அழைப்பர்.‘காணம் விற்றாவது ஓணம் உண்’ என்ற பழமொழி  ஓணசாத்யா  உணவின் சிறப்பை கூறுகிறது. தேங்காய் மற்றும் தயிர் பெரும்பாலான உணவு வகைகளில் பெரும்பங்கு பெறுகிறது.

புலிகளி: நான்காம் நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு  நடனம் ஆடி வருவர். புலிகளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியை தலைநகராக கொண்டு ஆண்ட  ராம வர்மா சக்தன் தம்புரான் என்ற மன்னரால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.

ஐந்தாம் நாள் அனுஷத்தில் கேரளத்தின் பாரம்பரியமான படகுப் போட்டி நடக்கும். இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடி கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருகேட்டை, 7ல் மூலம், 8ல் பூராடம், 9ல் உத்திராடம்.

யானை திருவிழா: 10ம் நாளான திருவோணத்தன்று யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூத்தோரணங்களாலும், அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். இன்று யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT