திருமண விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் விழா மேடையை ஒட்டிப் போடப்படும் மற்றொரு மேடையில் நடுநாயகமாக நாதஸ்வரம் வாசிக்க, அதற்குத் துணையாக இருபுறமும் தவில் வாசிப்பவர்களைப் பார்த்திருப்போம். சமயங்களில் அவர்களின் ‘தொம் தொம்’ இசையை தலையாட்டி ரசித்திருப்போம். தவில் பற்றி சில விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
மங்கலம் என்ற சொல்லுக்கு ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, சுபம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இதனடிப்படையில் தமிழரின் திருமணம், காதணி விழா, புகுமனை புகுதல் போன்றவற்றில் தவில் முக்கியத்துவம் பெறுவதால் இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர். தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது உபயோகத்தில் வந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால், 15ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது எனப்படுகிறது.
தவில் பெரும்பாலும் கர்நாடக மற்றும் கிராமிய இசைக்குப் பயன்படுகிறது. நாதஸ்வரக் கச்சேரிகளில் நாதஸ்வரம்தான் முதன்மை வாத்தியம்; தவில் பக்கவாத்தியம்தான். இருப்பினும் நாதஸ்வரக் கச்சேரி துவங்கும்போது தவில் வாசிப்போடுதான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு எனலாம்.
தவிலின் உருளை வடிவிலான பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் வளந்தலை என்று கூறப்படும். இது எருமைக்கன்றின் தோலால் செய்யப்படுகிறது.இதன் பெரிய பக்கத்தில் உள்ள தோல் தொப்பி என்று வழங்கப்படுகிறது. இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்தத் தோலை தாங்கிப் பிடிக்கும் வளையங்கள் இரு பக்கமும் உண்டு. இந்தக் கருவியில் ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும்.
தவில் வாசிப்பவர் பட்டையான ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி தவிலை இசைப்பார். அரிசி அல்லது மைதா மாவு பசையால் கடினப்படுத்தப்பட்ட தொப்பி போன்ற கவசத்தை வலது கையின் அனைத்து விரல்களிலும் அவர் அணிந்திருப்பார். தவிலின் இடது பக்கம் போர்டியா மரத்தால் செய்யப்பட்ட ஒரு குறுகிய, தடிமனான குச்சியால் முழக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தவில் உருவாக்கத்துக்கும் இசைக்கலைஞர்களுக்கும் புகழ் பெற்றது. தஞ்சாவூர் தவில் என்று அழைக்கப்படுவதே இதற்கு சான்று. பாரம்பரிய இசைக் கலையான தவில் வாசிப்பதற்கு அடிப்படை பயிற்சியான வாய்மொழி பாடங்கள், கட்டைப் பயிற்சி (தவில் வாசிக்கக் கை விரல் படிவதற்கு) ஆகிய பயிற்சிகளை வழங்கிய பின்னர் தவில் வாசிப்பதற்கான பயிற்சிகளையும் முறையாக கற்றுத் தருகிறார்கள். கடந்த காலங்களில் குருகுலவாச முறைப்படி தவில் கற்றுக்கொள்ள குறைந்தது 5 வருட காலம் ஆகலாம். தற்போதைய கால கட்டத்தில் பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு என மூன்று வருடங்கள் படிப்பு இசைக்கல்லூரிகளில் வந்துவிட்டது.
வாசிப்பவரின் விரல்களும், மூளையும் இணைந்து கலையாக மாறி நம்மை மகிழ்விக்கும் தவில் இசையை ரசிப்போம்.