Kalaignar Karunanidhi 
கலை / கலாச்சாரம்

கலைஞர் கருணாநிதியும் நகைச்சுவை சொல்நயமும்!

ஜூன் 3, கலைஞர் பிறந்த நாள்

ஆர்.ஜெயலட்சுமி

லைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. இவர் தமது பேச்சிலும் எழுத்திலும் நகைச்சுவை கலந்த சமயோசிதத்தை சாமர்த்தியமாகக் கையாளும் வல்லமை பெற்றவர். இவரது சொல்நயம் மிக்க சில சந்தர்ப்பங்களைப் பார்ப்போம்.

ம்ப ராமாயணத்தை அடிப்படையாக வைத்து கவிஞர் வாலி, ‘அவதார புருஷன்’  என்னும் நூலை எழுதினார். அந்த நூலை விரும்பிப் படித்தார் கலைஞர் கருணாநிதி. இதைக் கேள்விப்பட்ட கவிஞர் வாலி, கலைஞர் கருணாநிதியிடம், ‘என்ன நீங்கள், ராமாயணத்தை இவ்வளவு விரும்பிப் படிக்கிறீர்கள்? உங்களுக்கு ராமாயணம் பிடிக்குமா?’ என்று வியப்பாகக் கேட்டார்.

அதற்குக் கலைஞர், ‘யார் சொன்னது எனக்கு ராமாயணம் பிடிக்காது என்று. எனக்கு ராமாயணத்து வாலியையும் பிடிக்கும். வாலியின் ராமாயணத்தையும் பிடிக்கும்’ என்று சொல்நயத்துடன் பதில் சொல்லி அசத்தினார்.

ருசமயம் கவிஞர் வைரமுத்துவின், ‘ஆயிரம் பாடல்கள்‘ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலைஞர் கருணாநிதியும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வாலியை பார்த்து கவிஞர் வைரமுத்து இவ்வாறு பேசினார், ‘நீங்கள் ஸ்ரீரங்கத்து சிவப்பு, நான் வடுகப்பட்டியின் கருப்பு’ என்று பேசினார். மேடையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கலைஞர் உடனே, ‘அதனால்தான் இருவரும் என்னோடு இருக்கிறீர்கள்’ என்று கமெண்ட் அடித்ததும் வந்திருந்த கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ரசித்து சிரித்தனர்

ரு சமயம் நிருபர் ஒருவர் கலைஞரிடம், ‘எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள். அதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?’ என்று கேட்டார். அதற்குக் கலைஞர், ‘மகாபாரத அர்ஜுனனின் பலம் வில் பவரில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மகா சாதாரணமானவனின் பலமும் வில்பவரில் (Willpower )தான் இருக்கிறது என்று பதில் சொல்லி, நிருபரை சிரிக்க வைத்தார்.

திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட கலைஞர் கருணாநிதி, அந்த விழாவில் பேசும்போது, ‘ஒரு குழந்தை ஆணாகப் பிறந்து அதன் மழலை சொல்லை கேட்டால் அதற்குப் பிறகு புல்லாங்குழல் இசையைக்கூட கேட்கத் தேவையில்லை. அதைபோல், மற்றொரு குழந்தை பெண்ணாக பிறந்து அதன் பேச்சை கேட்டால் பிறகு யாழிசையை  கேட்கத் தேவையில்லை. குழந்தைகளின் மழலைப் பேச்சில் அத்தனை இனிமை அடங்கியுள்ளது. எனவே, ஒரு ஆண், ஒரு பெண் இரு குழந்தைகள் போதுமானது. இதைத்தான் திருவள்ளுவர் தனது குறளில், ‘குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்று கூறிச் சென்றுள்ளார். அதாவது, குழல் ஆணையும் யாழ் பெண்ணையும் குறிப்பதாகும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று திருவள்ளுவர் நினைத்திருந்தால் ஆர்கெஸ்ட்ரா இனிது என்றுதானே சொல்லியிருப்பார்’ என்று கூற, அந்த விழா கூட்டமே சிரிப்பால் அதிர்ந்தது.

ரு சமயம் கலைஞர் கருணாநிதி மாணவர்களிடம் பேசும்போது, ‘எல்லா மலரிலும் வண்டு சென்று சேகரிக்கின்ற காரணத்தினாலேதான் தேனுக்கு அதிகமான சக்தி உண்டு என்கிறார்கள். காரணம் பல்வேறு மலர்களிலே வண்டு சென்று அமர்ந்து அந்த மதுவினை சேகரிக்கின்ற காரணத்தால் தேன் சக்தி வாய்ந்த ஒரு மருந்து என்று கூறப்படுகிறது. அதைப்போல பல்வேறு கருத்துக்களையும் மாணவர்கள் உய்த்து உணர வேண்டும். மாணவர்கள் பல மலர்களிலே மொய்க்கின்ற வண்டாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிடாமல், தயவு செய்து உவமையை தத்துவத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ இப்படிக் கூறிய கலைஞரின் கருத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

படித்ததில் பிடித்தது…

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT