கிருஷ்ணராஜ சாகர் அணை 
கலை / கலாச்சாரம்

கிருஷ்ணராஜ சாகர் அணை உருவான, ‘திக் திக்’ பின்னணி தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

ம் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாற்று பொக்கிஷத்துக்குப் பின்னாலும் எவ்வளவு இழப்புகள் இருக்கின்றன என்பதை நமக்கு பல வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் கட்டுமான பணியின்போது, அது சமாளித்த திக் திக் சவால்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கே.ஆர்.எஸ் என சுருக்கமாகவும், பிரபலமாகவும் அழைக்கப்படுகிறது கிருஷ்ணராஜ சாகர் அணை. இது காவிரி நடுவே கர்நாடகாவின் மண்டியா நகரில் கம்பீரமாக கட்டப்பட்ட பெரும் அணையாகும்.

கிருஷ்ணராஜ சாகர் அணை

மைசூர் மாகாணத்தில் அமைந்திருந்த மண்டியா எனும் பகுதி விவசாயத்தை தொழிலாகக் கொண்ட ஊர். இங்கே அக்காலத்தில் கோடைக்காலத்தில் நிலவி வந்த வறட்சியின் காரணமாக அருகாமை பகுதிகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் துவங்கினர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது 1875 - 76ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் காரணத்தால் மைசூர் சாம்ராஜ்யத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு (20%) அழிந்ததாக வரலாற்றுத் தரவுகள் மூலம் அறியப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வறட்சி தொடர்கதை ஆனது. போதிய நீர் கிடைக்காத காரணத்தால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் காய்ந்து கருகின. விவசாயத்திற்கு காவிரி நீரை மட்டுமே நம்பி இருந்த இப்பகுதி மக்கள், நீர்வரத்து வற்றிப் போனதால் அவதிக்குள்ளாகினர்.

கிருஷ்ணராஜ சாகர் அணை

இதைக் கண்டு மனம் வருந்திய அன்றைய மைசூர் மன்னர் 4ம் கிருஷ்ணராஜ உடையார், இப்பகுதியில் இதுபோல பஞ்சம் ஏற்படாமல் இருக்க அணை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார். இத்திட்டத்தின் கீழ் உருவானதுதான் கிருஷ்ணராஜ சாகர் அணை.

அப்போதைய மைசூர் தலைமை பொறியாளர், இந்த அணையின் கட்டுமான திட்ட வரைவுடன் சென்றபோது, மைசூர் அரசு வருவாய் அமைச்சகம், ‘இந்த அணை தேவையில்லை’ எனக் கூறி ரத்து செய்ய பார்த்தனர். ஆனால், தலைமை பொறியாளர் விடாது, திவான் ஆனந் ராவ் மற்றும் மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் ஆகியோர் சென்று முறையிட்டு மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பின்னர், மன்னரின் பரிந்துரை ஏற்கப்பட்டு 81 லட்சம் ரூபாய் மதிப்பில் அணை கட்டுமானம் 1911ம் ஆண்டு துவங்கியது.

நான்காம் கிருஷ்ணராஜ உடையார்

மைசூர் மாகாணம் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுத் துவங்கும்போதே மதராஸ் மாகாண அரசு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. ஏனெனில், கட்டுமானம் துவங்கும்போது திவானாக இருந்த பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா அணையின் உயரத்தை 194 அடி கட்டத் திட்டமிட்டிருந்தார். மற்றும் மதராஸ் மாகாணம் அளித்த அழுத்தம் காரணமாக அணையின் 194 அடி உயரம் என்பது குறைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

1911ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்களுடன் துவங்கப்பட்டது கிருஷ்ணராஜ சாகர் அணை.

1931ம் ஆண்டு அணையின் கட்டுமானம் கட்டி முடிக்கும் தருவாயில் 5000ல் இருந்து 10,000திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்தை அணையின் கட்டுமான திட்டத்தினால் இழந்திருந்தனர். அரசு, இருப்பிடத்தை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடமும் விவசாய நிலமும் இழப்பீடாக அளித்தது.

இந்த அணையை கட்டி முடிக்க 6 மாதங்கள் இருக்கும் தருவாயில் ஒதுக்கப்பட்ட நிதி மொத்தமும் தீர்ந்தன. ஏற்கெனவே இந்த அணையை கட்டி முடிக்க மன்னர் கிருஷ்ணராஜ உடையார் தனது குடும்ப நகைகள், அரசு கருவூலத்தில் இருந்த பணம் என எல்லாவற்றையும் அணையின் கட்டுமானத்திற்காக செலவிட்டிருந்தார்.

இந்த செய்தி அறிந்த தலைமை பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா, மறுநாளே அனைத்து கிராம மக்களையும் தன்னை வந்து மண்டியாவில் பார்க்கச் சொல்லி செய்தி அனுப்பி இருந்தார். கிராம மக்களைக் காண விஸ்வேஸ்வரய்யா மன்னருடன் சென்றிருந்தார். அங்கே மக்கள் முன்னிலையில், நிதி நெருக்கடி குறித்து மக்களோடு மக்களாக சாதாரண மனிதரை போல உரையாற்றினார் மன்னர். நான்கு வாரங்கள் அவர்களை வந்து கட்டுமான பணிகளில் உதவுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தனது அரண்மனையை அடமானம் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மக்கள் பேரமைதி காத்தனர். மறுநாள், தனது மாளிகையை அடமானம் வைக்கும் வேலையில் மன்னர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, மாளிகையின் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக திரண்டு வந்திருந்தனர். தங்களால் இயன்ற உதவியை செய்து, கூலி இன்றி வேலை செய்யவும் தயாராக இருப்பதாக மன்னரிடம் கூறி பணிகளில் தீவிரமாக இறங்கினர்.

மக்களின் பஞ்சத்தைப் போக்க மன்னரால் கையில் எடுக்கப்பட்ட அணையின் கட்டுமானம், முடிவில் அந்த குடிமக்கள் கைகளால் முடிக்கப்பட்ட வரலாறு கொண்டிருக்கிறது கிருஷ்ணராஜ சாகர் அணை.

ஆரம்பத்தில் மண்டியா (Mandya)வின் கண்ணம்பாடி எனும் இடத்தில் கட்டப்பட்டதால் இது கண்ணம்பாடி அணை என அழைக்கப்பட்டது. பின்னர், மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் நினைவாக கிருஷ்ணராஜ சாகர் அணை என பெயர் மாற்றம் செய்தனர்.

காவிரி நதி மட்டுமின்றி, ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் என இரு நதிகளும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இணைகின்றன. வெள்ளத்தை தடுக்கும் வகையில் விஸ்வேஸ்வரய்யா 48 தானியங்கி மதகுகள் இதில் அமைத்தார். ஒரு தொகுப்பில் 8 தானியங்கி மதகுகள் என 6 தொகுப்புகளாக விஸ்வேஸ்வரய்யா இதை அமைந்திருந்தார்.

மைசூர், மண்டியா, பெங்களூரு என கர்நாடகாவின் 3 முக்கிய நகரங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது கிருஷ்ணராஜ சாகர் அணை. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் சேலத்தில் அமைந்திருக்கும் மேட்டூர் அணைக்கும் வந்து சேர்கிறது.

வெற்றி அடைய கனவு காணுங்கள்!

பொங்கி வரும் கோபத்தை புஸ்வானமாக்க சில யோசனைகள்!

கவனத்தை கவனத்தோடு கையாளுங்கள்!

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

SCROLL FOR NEXT