கர்நாடகா மற்றும் தெலங்கானா பாரம்பரிய வீடுகள் 
கலை / கலாச்சாரம்

‘குத்து மனே’, ‘பறம்பு’ என்பவை என்ன?

பாரதி

தென்னிந்திய வீடுகளின் வடிவமைப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்போது இதைப் படியுங்கள்…

பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்தவருக்குமே அவர்களுக்கென்று பாரம்பரிய வீட்டின் வடிவமைப்புகள் இருக்கும். அது எப்போதும் ஒரு தனித்துவமான அழகைக் கொண்டதாகத்தான் இருக்கும். அந்த வகையில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் பாரம்பரிய வீடுகள் பற்றிப் பார்ப்போம்.

கர்நாடகா மற்றும் தெலங்கானா பாரம்பரிய வீடுகள்: கர்நாடகாவில் உள்ள பாரம்பரிய வீடுகள் பெரும்பாலும் சதுர வடிவில் இருக்கும். இந்த வீடுகளில் இல்கல் என்ற நெசவாளர்கள் வசிப்பார்கள். வீட்டைச் சுற்றி உணவுகள் அல்லது பொருட்கள் சேமித்து வைப்பதற்காக போதிய இட வசதிகளும் இருக்கும். இந்த வகையான வீடுக,ளை ‘குத்து மனே‘ என்று அழைப்பார்கள். மேலும், இந்த வீடுகளில் ‘கம்ப் மர‘ தூண்களைக் காணலாம்.

இந்த இடங்களில் வெப்ப நிலை அதிகம் இருப்பதால் அதற்கேற்றவாறு வீடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சாய்வான ஓடுகள் கொண்ட கூரைகள், வீட்டை சுற்றி நெல் வயல்கள் என அழகாக இருக்கும். முன்பெல்லாம் இந்த வகையான வீடுகள் வைத்திருப்பவர்தான் அவ்வூரில் பெரிய செல்வந்தராக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. வெளியில் இருந்து பார்த்தால் அங்கு இருக்கும், ‘குத்து மனே’ கோயில் போலவே இருக்கும்.

கேரளாவின் பாரம்பரிய வீடுகள்

கேரளாவின் பாரம்பரிய வீடுகள்: கேரளாவில் பறம்பு என்று அழைக்கப்படும் பாரம்பரிய வீடுகளே அதிகம் காணப்பட்டன. இது, ‘தோடி’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்த பறம்பு வீடுகள் பண்ணை அல்லது திறந்தவெளி பகுதியில்தான் அதிகம் கட்டப்பட்டன. இந்த திறந்தவெளிப் பகுதிகளைப் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்ய பயன்படுத்தி வந்தனர்.

‘நாலுகெட்டு’ என்ற அழைக்கப்படும் இந்த வகையான பாரம்பரிய வீடுகளில் அனைத்து திசைகளிலும் நுழைவாயில் இருந்தது. வீட்டு விலங்குகளுக்கென தனி இடம் வீட்டை ஒட்டி வெளியில் கட்டப்பட்டன. தேக்கு மற்றும் பலா மரம் பயன்படுத்தித்தான் ஜன்னல், கதவு ஆகியவை செய்யப்பட்டன.

ஆந்திராவின் பாரம்பரிய வீடுகள்

ஆந்திராவின் பாரம்பரிய வீடுகள்: இந்தியாவிலேயே ஆந்திராவின் பாரம்பரிய வீடுகள்தான் நீளமாகவும் பெரிய அறைகளைக் கொண்டதாகவும் இருக்கும். இந்த வீடுகளை, ‘மந்துவா லோகிலி’ என்று அழைத்தனர். இந்த வீடுகளில் உள்ள திறந்தவெளி முற்றம் தனித்துவம் வாய்ந்தது. மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்ளூர் வடிவமைப்புடன் இசுலாமிய வீடுகளின் வடிவமைப்பும் சேர்ந்துக்கொண்டது. செதுக்கப்பட்ட ஜன்னல்கள், வளைவுகள் மற்றும் கருப்பு கல் ஆகியவை இந்த வீடுகளில் அதிகம் காணலாம்.

ஆந்திரக் கடலோர வீடுகள், ‘சுட்டிலு’ அல்லது ‘மிடில்லு’ என்ற பெயர்களால் அழைக்கப்படும். இதனை வட்ட கொத்து வீடுகள் எனவும் அழைப்பார்கள். இந்த பாரம்பரிய வீடுகளில் இருந்த சிவப்பு கற்களையும் (Vadapalli tiles) விரிவான நுழைவாயில்களையும் மற்றும் தேக்கு மரங்களையும் இன்று நவீன வீடுகளிலும் காணலாம்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய வீடுகள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய வீடுகள்: தமிழ்நாட்டில் பட்டு நெசவாளர்கள், விவசாயிகள், பானை உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கென தனித்தனி தெருக்கள் இருக்கும். தமிழ்நாடு வீடுகள் என்றால் திண்ணை மற்றும் முற்றம் வைத்துக் கட்டுவது வழக்கம். அப்போது சாலையில் நடைப்பயணம் செல்வோர் களைப்பாருவதற்காக இந்தத் திண்ணைகள் கட்டப்பட்டன. பெரிய வீடுகளிலிருந்து சிறிய வீடுகள் வரை அனைவருமே சுவற்றிற்கு சுண்ணாம்பு பயன்படுத்துவார்கள். ஏனெனில், இது சூரிய ஒளியை தடுத்து, வீடு குளிர்ச்சியாக இருக்க உதவும்.

கிராமப்புறங்களில் மண்ணால் கட்டப்பட்ட கூரை வீடுகள் அதிகம் காணப்பட்டன. ஆனால், இப்பொழுது அதிகப்படியான கூரை வீடுகள் அழிக்கப்பட்டு நவீன வீடுகளாக மாறிவிட்டன. பாரம்பரிய வீடுகள் அறிவியல் ரீதியாகவும் அழகுப்பூர்வமாகவும் வாழ்வதற்கு ஏற்றவாறும் கட்டப்பட்டன. இன்றும் சில இடங்களில் இந்த பாரம்பரிய வீடுகளைக் காண முடியும். இன்றைய நவீன வீடுகள் பாரம்பரிய வீடுகளின் சில அணுகுமுறைகளைப் பின்பற்றி கட்டப்பட்டு வருகின்றன என்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

SCROLL FOR NEXT