Red Thread story 
கலை / கலாச்சாரம்

சீனாவின் 'சிகப்பு நூல்' பற்றிய சுவாரசியமான கதையை தெரிஞ்சிக்கலாம் வாங்க!

நான்சி மலர்

இந்த சிகப்பு நூல் கதையை மேற்கோளாக நிறைய படங்களில் காட்டுவதை பார்த்து எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. இந்த கதையின் பின்னணி என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அப்படி தேடுகையில்தான், இது ஒரு சீன புராணக்கதையாக சொல்லப்படுகிறது என்பது தெரிந்தது.

இந்த கதை காதல், திருமணம் போன்றவற்றிற்காக சொல்லப்படுவது. காதலில் விழப்போகும் இருவரோ அல்லது திருமணம் செய்துகொள்ள போகும் இருவரோ அவர்களின் தலையெழுத்து என்றோ நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு அடையாளமாக இருவரின் விரல்களிலும் ஒரு சிகப்பு நூல் இணைத்திருக்கும். அது ஒருவரை இன்னொருவரோடு சேர்த்து வைக்கும் என்று நம்பப்படுகிறது.

இங்கே சொல்லப்படும் க்யூப்பிட்(Cupid) போல சீனாவில் சொல்லப்படும் காதலுக்கும், திருமணத்திற்குமான கடவுள் ‘யு லாவோ’ என்று சொல்லப்படுகிறது. சீனர்களின் கதைப்படி அந்த சிகப்பு நூல் இருவரின் கணுக்கால்களில் கட்டப்பட்டிருக்கும். இதுவே ஜப்பான் கலாச்சாரத்தில் ஒரு ஆணினுடைய கட்டைவிரலில் இருந்து பெண்ணினுடைய சுண்டு விரலில் பிணைக்கப்பட்டிருகிறது. சிகப்பு நிறம் சீனர்களுக்கு மிகவும் பிடித்த நிறம். சீனர்களின் திருமணத்தின்போது அதிகம் பயன்படுத்தும் நிறமாகும்.

Red Thread

இந்த சிகப்பு நூலால் இணைக்கப்பட்ட இரண்டு பேரும் எவ்வளவு தூரம் சென்றாலும் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்பது எழுதப்பட்ட விதி. இந்த சிகப்பு நூல் சிக்கலாம், நீட்டலாம் ஆனால் ஒருபோதும் உடையாது.

ஒருநாள் இரவு சிறுவன் ஒருவன் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, யு லாவோ நிலவு ஒளியில் நின்றுகொண்டிருந்தார். அவர் சிறுவனிடம் அவன் கைகளில் இருக்கும் சிவப்பு நூலை பற்றி சொல்கிறார். அவனுக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணையும் காட்டுகிறார். அந்த வயதில் திருமணம், காதல் என்று ஆசையில்லாத சிறுவன். அந்த பெண்ணிண் மீது கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறான்.

பிறகு பல வருடங்கள் கழித்து சிறுவன் இளைஞன் ஆனதும் அவனுக்கு திருமணம் நடக்கிறது. அவனுடைய மனைவி அந்த ஊரிலேயே மிகவும் அழகியாக இருக்கிறாள். ஆனால் புருவத்திற்கு மேலே அவளுக்கு இருக்கும் தழும்பை அலங்காரம் செய்து மறைத்து வைத்திருக்கிறாள். அது ஏன் என்று கணவனும் கேட்க, அதற்கு அந்த பெண் கூறியது, அவள் சிறுவயதாக இருந்த போது ஒரு சிறுவன் அவள் மீது கல்லெறிந்து விட்டு சென்றுவிட்டான். அதனால் ஏற்பட்ட வடுவை மறைக்கவே அலங்காரம் செய்து கொள்கிறேன் என்றாள். இதை கேட்ட சிறுவன் ஆச்சர்யமடைகிறான். யு லாவோ சொன்னது போலவேதான் அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது.

சிகப்பு நிறம் சீனாவில் புனிதமாக கருதப்படுகிறது. நமக்காக விதிக்கப்பட்டவர்கள் நமக்காக காத்திருப்பார்கள். ‘கடவுள் எல்லோருக்குமான காதல் கதையை பிறக்கும் போதே எழுதி வைத்து விட்டார்’ என்பது சீனர்களின் நம்பிக்கை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT