தலைமுறை தலைமுறையாக மருதாணி உபயோகிக்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. மருதாணியின் தோற்றம் மிகவும் பழைமையானது. இது எகிப்து, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் தோன்றியது. காலப்போக்கில் தெற்கு ஆசியாவிலும் பரவியது. பண்டைய நாகரிகங்களில், குறிப்பாக தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் தோன்றி இருக்கலாம் என்று சான்றுகள் சொல்கின்றன.
மருதாணியின் பண்டைய தோற்றம்: பண்டைய எகிப்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மருதாணி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. எகிப்தியர்கள் தங்கள் தலைமுடி மற்றும் நகங்களுக்கு சாயமிட மருதாணியை பயன்படுத்தினர். மேலும், அவர்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் சடங்குகளின் ஒரு பகுதியாகவும் இது (மம்மி செய்யப்பட்ட உடல்களுக்கும்) பயன்படுத்தப்பட்டது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா: மருதாணியின் பயன்பாடு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. அங்கு அது கலாசார மற்றும் மத நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியது. மக்கள் மருதாணியை தங்கள் கை, கால்களில் அரைத்துப் பூசியதுடன், கலை மற்றும் சடங்குகளில் குறிப்பிடத்தக்க வாழ்க்கை நிகழ்வுகளை குறிக்கவும் பயன்படுத்தினர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான்: தெற்காசியாவில் மருதாணியின் பயன்பாடு பல ஆண்டுகளுக்கும் முந்தியது. முகலாயர்களால் இந்தியாவிற்கு மருதாணி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அழகுபடுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருதாணி காலப்போக்கில் பல்வேறு கலாசார மற்றும் மத நடைமுறைகளில், குறிப்பாக இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மத திருமண நிகழ்வுகளில் ஆழமாக வேரூன்றியது.
மெஹந்தி: வட இந்தியாவில் மெஹந்தி என்ற பெயரால் மருதாணி அழைக்கப்படுகிறது. பெண்களின் கைகளில் பலவிதமான சிக்கலான மற்றும் நுண்ணிய வடிவங்களை அமைக்க மெஹந்தி பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மருதாணி, திருமணங்கள் பண்டிகைகள் போன்ற மங்கலகரமான நிகழ்வுகளுடன் தொடர்புடையது. கையில் வரையப்படும் நுண்ணிய சிக்கலான வடிவமைப்புகள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும் தீமையை தடுக்கவும், எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. மணமகளின் கைகளில் மருதாணியை பயன்படுத்துவது செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் திருமண பந்தத்தில் வலிமையை குறிக்கிறது.
அழகு சாதனம்: மேலும், தற்போது மருதாணி அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடைய சாயத்தை தலையில் பூசி கலரிங் என்ற பெயரில் இளைஞர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். நடுத்தர வயதினர் நரை முடியை மறைக்க மருதாணியை பயன்படுத்துகின்றனர். இது ரசாயன முடி சாயத்திற்கு நல்லதொரு மாற்றாக அமைகிறது.
மருத்துவப் பண்புகள்: மருதாணி இலைகளை அரைத்துப் பூசிக் கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. வெப்பமான கால நிலையில் உடலை குளிர்விக்கப் பயன்படுத்துகிறது. உஷ்ணம் மற்றும் காய்ச்சலை தணிக்க உள்ளங்கால்கள் மற்றும் கைகளில் தடவப்படுகிறது. மருதாணியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள் தீக்காயங்கள் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.
நிலத்தின் நண்பன்: விவசாயத்தில் மருதாணி செடிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் கடுமையான வாசனை சில பூச்சிகளை தடுக்கிறது. இந்தச் செடியின் வேர்கள் மண்ணரிப்பை தடுப்பதில் திறம்பட செயல்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மதிப்பு மிக்கதாக அமைகின்றன.