மரச்செக்குகளில் எண்ணெய் வித்துக்களைப் போட்டு மாடு பூட்டி அதில் எண்ணெய் ஆடி எடுத்து பயன்படுத்திய காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். ஏனென்றால், மரச்செக்கு எண்ணெயை பயன்படுத்தியபோது சர்க்கரை வியாதி இல்லை, இரத்தக்கொதிப்பு இல்லை, இருதயக் கோளாறுகள் இல்லை. இவை எல்லாம் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. காலங்கள் மாறிட, நம் கலாசாரமும் மாறியது. அதனால் நாம் பெற்றது என்னமோ பலவிதமான வியாதிகளைத்தான் என்று சொன்னால் மிகையில்லை. இன்றும் ஒருசில இடங்களில் மரச்செக்கு எண்ணெய்கள் கிடைக்கின்றன அவற்றின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
பலவிதமான எண்ணெய்கள் இயந்திரத்தின் மூலம் தயாரிப்பதால் அவை சூடாகி அவற்றில் உள்ள உயிர் சத்துக்கள் அனைத்துமே நீக்கப்பட்டு, வடிகட்டி பார்ப்பதற்கு பளிச்சென்று நமக்கு பாக்கெட்டில் கிடைக்கின்றன. மரச்செக்கு மூலம் எடுக்கப்படும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் செக்கானது வாகை மரத்தினால் செய்யப்படும் ஒன்றாகும். அதனை நமது முன்னோர்கள் மாடு பூட்டி இழுத்து அதனை இயற்கை முறையில் தயாரிப்பதனாலே அவை நம் உடலுக்கு நன்மையை கொடுக்கின்றன. மேலும், மன அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேவையில்லாத கொலஸ்ட்ராலை அது நீக்குகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. அதுபோக உடல் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே ஒரு தீர்வாக மரச்செக்கு எண்ணெய் அமைகிறது. சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு தேங்காய் எண்ணெய் உடல் பராமரிப்புகளுக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வை தருகிறது.
கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுவதால் ஆரோக்கியமான உணவை நாம் பெற முடிகிறது. செக்கு எண்ணெய் பெரும்பாலும் உணவுக்கும் மட்டுமில்லாமல் மருத்துவம் சம்பந்தமாகவும் பயன்படுகிறது. ஒரிஜினல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கும் மனத்திலும் மற்ற எண்ணெய்களை காட்டிலும் வித்தியாசமாகக் காணப்படுகிறது. ஏனெனில் செக்கு எண்ணெய் தயாரிப்பில் சூடாகாமல் அவற்றில் உள்ள உயிர்சத்துக்களை அப்படியே நமக்குத் தருகின்றன. மேலும், அவை செக்கில் ஆட்டிய பிறகு, அதனை பித்தளை பாத்திரத்தில் எடுத்து அதனை வெயிலில் வைத்துவிடுவார்கள். இதனால் சூரிய ஒளியில் உள்ள சத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.
மரச்செக்கு எண்ணெய் அடர்த்தியாகக் காணப்படுவதால், 5 லிட்டர் தேவைப்படும் இடத்தில் 2 லிட்டரே தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும் சமைக்கும்போதும் அதை நாம் உபயோகப்படுத்தும்போது நல்ல மணம் வருவதையும் காணலாம். பாக்கெட்டுகளில் கிடைக்கும் எண்ணெய்களை விட செக்கு எண்ணெய்க்கு கொஞ்சம் விலை அதிகம் கொடுக்க வேண்டியதுதான் இருக்கும். ஆனால், ஆரோக்கியம் நமக்குக் கிடைக்கும்.