Margazhi Sangamam 
கலை / கலாச்சாரம்

இந்த வருடத்து தமிழிசை சங்க விருது யாருக்குத் தெரியுமா?

S CHANDRA MOULI
Margazhi Sangamam

ந்த வருட இசை விழா சீசனில் பல்வேறு சபாக்களும் பல வித்வான்களையும் விருது அளித்து கௌரவிக்கின்றன. எந்தெந்த சபாக்களில் யார் யாருக்கு என்னென்ன விருது என்று இன்னொரு ரவுண்டு சுற்றிப் பார்க்கலாமா?

இந்த வருடம் தமிழிசை சங்கத்தின் 81வது இசை விழாவுக்குத் தலைமை வகிப்பவர் தமிழக தலைமை செயலாளராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வெ.இறையன்பு. இசைப் பேரறிஞர் விருது பெறுபவர் டி கே எஸ் கலைவாணன். பண்ணிசை பேரறிஞர் விருது பெறுபவர் திருஞானசம்பந்தன் ஓதுவார்.

ஒளவை டி கே சண்முகம் மகனான டி கே எஸ் கலைவாணன் தன் ஏழு வயதிலேயே அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி 51 பாடல்களையும் 51 ராகங்களில் பாடி அரங்கேற்றினார். 1330 திருக்குறளையும் இசையோடு பாடி ஒலிப்பேழையில் பதிவு செய்தவர். 2000ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் அகில இந்திய வானொலி சார்பாக அந்தமான் தலைநகர் போர்ட்பிளேயரில் நடைபெற்ற விழாவில் பாடியவர்.

கன்னியாகுமரியில் 133 அடி வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு குறலிசை பாடி கலைஞரது பாராட்டைப் பெற்றவர். ரிஷிகேஷ் தலத்தில் கங்கைக் கரையில் குறலிசை அரங்கு நிகழ்த்தியதைப் பாராட்டி இவருக்கு “கங்கை குறளிசை பாணர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இவரது இசைத்திறனைப் பாராட்டி கிருபானந்த வாரியார், அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, இல.கணேசன், அவ்வை நடராசன் உள்ளிட்ட பல பிரமுகர்களின் பாராட்டைப் பெற்றவர்.

தியாக பிரம்ம கான சபாவின் இயல் இசை நாடக விழாவில் ’வாணி கலா சுதாகரா பட்டம்’ பெறுபவர்களின் பட்டியல்: மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத் – ரவிகுமார் (குரலிசை) உஷா ராஜகோபாலன் (வயலின்) நெய்வேலி வெங்கடேஷ் (மிருதங்கம்), மீனாட்சி சித்தரஞ்சன் (நடனம்) கே ஆர் எஸ் குமார் (நாடகம்)

மல்லாடி ஸ்ரீராம் பிரசாத், மல்லாடி ரவிகுமார் ஆகிய மல்லாடி சகோதரர்கள் ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் தாத்தா மற்றும் அப்பாவிடம் இசை கற்றுக் கொண்டவர்கள். ஆலாபனைகள் மற்றும் தியாகராஜ கிருதிகளை வழங்குவதில் இவர்கள் சிறந்தவர்கள்.

வயலின் கலைஞர் உஷா ராஜகோபாலன் முதலில் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். சில ஆண்டுகளுக்குப் பின் வயலினா? வீணையா? எதைக் கற்றுக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, “ உஷாவின் அம்மா, “ வீணை பெரிசு!

கச்சேரிக்கு எடுத்துக் கொண்டு போவது சிரமம்! அதனால் வயலினே கற்றுக் கொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டாராம். அப்போது பாதை மாறி இன்று நாடறிந்த வயலின் கலைஞராக விளங்குகிறார்.

மீனாட்சி சித்தரஞ்சன் ஒரு பரதநாட்டியக் கலைஞர்: நாட்டிய ஆசிரியர், நடன இயக்குனர். இவர், பந்தநல்லூர் பாணியில் வல்லுனர். அப்பா தமிழ் நாடு அரசு அதிகாரி. நான்கு வயதில் பரதம் கற்றுக்கொள்ளத் தொடங்கி ஒன்பது வயதில் அரங்கேற்றம். ‘கலாதீக்சா’ என்பது இவரது நடனப் பள்ளி. இவரது மாணவிகளுள் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவும் ஒருவர்.

பிரம்ம கான சபாவின் டிசம்பர் கலை விழா மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா அரங்கில் நடைபெறுகிறது. அவர்கள் அளிக்கும் விருதுகள் : கான பத்மம் : விஜய் சிவா. நாட்டிய பத்மம்: டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம். வாத்ய பத்மம்: குருவாயூர் துரை. நாடக பத்மம்: கே பி அறிவானந்தம். முருகப்பா குழுமத்தின் எம் எம் முருகப்பன் துவக்கி வைக்கிறார். உமையாள்புரம் சிவராமன் விருது பெற்றவர்களை வாழ்த்துகிறார்.

விஜய் சிவா, நான்கு வயதில் ராகங்களை அடையாளம் காணும் திறன் கொண்டிருந்தவர். இவரது முதல் குரு இவரது தாயார் அகிலா சிவா. பின்னர் டி கே ஜயராமன்,டி கே பட்டம்மாளிடம் இசை பயின்றார். இவரது சகோதரர் மனோஜ் சிவா சிறந்த மிருதங்கக் கலைஞர். சகோதரி பூர்ணா சிறந்த வயலின் கலைஞர்.

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் இசைவிழா ஆழ்வார்பேட்டை எத்திராஜ கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. சங்கீத கலா சிகாமணி விருது பெறுபவர் மதுரை ஜி எஸ் மணி. நாட்டிய கலா சிகாமணி விருது : ஆனந்த சங்கர் ஜெயந்த். பாம்பே ஞானத்துக்கு நாடக கலா சிகாமணி விருது.

ஆழமான கர்நாடக இசை அடித்தளம் கொண்டவரான ஜி எஸ் மணி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியிடம் பணியாற்றியவர். அந்தக் காலத்திலேயே திரைப்படப் பாடல்களில் இடம்பெற்ற கர்நாடக இசை ராகங்களை மேடையில் பாடி, நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

முத்ராவின் விருது விபரங்கள் : முத்ரா சாதனையாளர் விருது: சுகுணா வரதாச்சாரி. நாடக முத்ரா : நடிகர், இயக்குனர் கிரிதரன் ஆகியோர் பொறுகிறார்கள்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT