ஹம்சத்வனி சபா சுந்தர் மற்றும் இசை கலைஞர்கள்  
கலை / கலாச்சாரம்

நார்வே பாட்டுக்கு அமெரிக்க வயலின், ஆஸ்திரேலிய மிருதங்கம்.. சென்னையில் கலைகட்டும் NRI கச்சேரி!

S CHANDRA MOULI
Margazhi Sangamam

சென்னை இந்திரா நகர் யூத் ஹாஸ்டல் அரங்கத்தில் ஓர் கச்சேரி! உமா ரங்கநாதன் வாய்ப்பாட்டு, லயா ராகவ் வயலின், சேயூன் ராகவன் மிருதங்கம். இந்தக் கச்சேரியின் ஸ்பெஷலிடி என்ன தெரியுமா? உமா ரங்கநாதன் நார்வேயில் வசிப்பவர், லயா ராகவ் அமெரிக்கா குடிமகள், சேயூன் ராகவன் வசிப்பது ஆஸ்திரேலியாவில். இந்த மூன்று என்.ஆர். ஐ. கலைஞர்களுமாகச் சேர்ந்து சென்னையில் நடைபெற்றுவரும் மார்கழி இசை கச்சேரியை அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

இந்த ஒரு கச்சேரி மட்டுமில்லை, யூத் ஹாஸ்டல் அரங்கத்தில் நடக்கும் பெரும்பான்மையான கச்சேரிகளில் பங்கேற்பவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் கலைஞர்கள்தான். இன்னும் சொல்லப்போனால், என் ஆர் ஐ. இசைக்கலைஞர்கள்.

ஹம்சத்வனி சபா

இவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் என்ஆர்ஐ கலைஞர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்கழி இசை கச்சேரியில் பங்குபெற செய்துவருகிறார்கள் யூத் ஹாஸ்டல்ஸ் அரங்கத்தை நடத்தி வருகிறது ஹம்சத்வனி சபாவினர்.

1990ல் ஆரம்பிக்கப்பட்டது ஹம்சத்வனி சபா. தென் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் கலா ரசிகர்களுக்கு உள்ளூர் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஹம்சத்வனி சபாவை துவக்கியவர், இந்து ஆங்கில நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான ராமச்சந்திரன் அவர்கள்தான்.

1990 ஆகஸ்டில் மாண்டலின் ஸ்ரீனிவாசின் கச்சேரியோடு ஆரம்பிக்கப்பட்ட சுமார் 300 உறுப்பினர்கள் கொண்ட ஹம்சத்வனி சபாவுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார்கள் செம்மகுடியும், டி கே பட்டம்மாளும். அவர்களின் பரிபூரணமான ஆசியில் இன்று அமோகமாக வளர்ந்து, அடையாறு பகுதியில் இசை வெள்ளம் பெருக வழி செய்துகொண்டிருக்கிறது ஹம்சத்வனி சபா.

இப்போது சபாவின் ஸ்தாபகர் ராமச்சந்திரனுக்கு நூற்றாண்டு விழா. அதனால் இந்த ஆண்டு இன்னும் ஸ்பெஷலாக இசைவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறார் அவருடைய மகன் சுந்தர். ஹம்சத்வனி சபா நிறுவனர் ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் மார்கழி இசை விழாவை சிறப்பாக நடத்திவரும் ராமச்சந்திரனின் மகன் சுந்தர் அவர்களிடம் கல்கி சார்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

என் ஆர் ஐ இசைக் கலைஞர்களைக் கொண்டு பிரத்யேக இசைவிழா நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?

1994ல் அப்பா அமெரிக்கா சென்றிருந்த சமயம், அங்கே நடைபெற்ற இசைவிழாக்களைப் பார்த்தபோது, அங்கே பலரும் ஆர்வத்துடன் கர்நாடக இசை கற்றுக் கொண்டு, நல்ல திறமையோடு இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தார். ஆனால், அவர்களில் வெகு சிலருக்கே சென்னையில் நடக்கும் இசைவிழாவில் சபாக்களில் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

இன்னொரு விஷயம், அமெரிக்காவில் கர்நாடக இசை ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், அங்குள்ள கலைஞர்கள் இங்கே சீசனின் போது சபாக்களில் பாடுவதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, என். ஆர். ஐ கலைஞர்களின் திறமையை அங்கீகரித்து, அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அமைத்துக் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என அவர் நினைத்தார். அதன் பலன்தான் ஹம்சத்வனியில் நடைபெறும் என் ஆர் ஐ கலைஞர்களின் கச்சேரிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள்.

ஒவ்வொரு ஆண்டு மார்கழி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ஆண்டுதோறும் சுமார் 100 கலைஞர்கள் தங்களைப் பற்றிய சுய விபரக் குறிப்புகளோடு விண்ணப்பிக்கிறார்கள். பலர், தங்களுடைய நிகழ்ச்சியின் வீடியோவையும் எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். எங்கள் சபாவின் தேர்வுக் குழுவினர் அவற்றையெல்லாம் படித்து, பார்த்து, திறமைசாலிகளுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த என் ஆர் ஐ இசைவிழாவில் சுமார் 500 பேருக்கு மேல் வாய்ப்பளித்து இருக்கிறோம். ஆண்டுக்கு சுமார் 40 முதல் 50 பேர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் சுமார் 50% பேர்கள் புதியவர்கள். முந்தைய ஆண்டுகளில் நிகழ்ச்சி வழங்கிய கலைஞர்களுக்கு அவர்களது கச்சேரிக்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் மீண்டும் வாய்ப்பளிக்கிறோம்.

என் ஆர் ஐ கலைஞர்களின் திறமையை நம் ஊர் கலைஞர்களின் திறமையோடு ஒப்பிட முடியுமா?

நம் ஊர் சீனியர் வித்வான்களோடு அவர்களை ஒப்பிட முடியாது. இளைய தலைமுறை கலைஞர்களோடு ஒப்பிட்டால், அவர்களும் நல்ல திறமை சாலிகள்தான். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. இங்குள்ள கலைஞர்கள் அனைவருமே முழுநேரக் கலைஞர்கள்தான். ஆனால் அங்கே அப்படி இல்லை. அது மட்டுமில்லாமல், அங்கே இசை, நடனம் கற்றுக்கொள்கிறவர்கள் வார இறுதி நாட்களில் நெடுந்தூரம் பயணித்து இசை, நடனம் பயில வேண்டும். தங்களது வேலையையும் பார்த்துக்கொண்டு. ஆர்வம் காரணமாகவே தங்கள் கலைத் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். எனவே, அவர்களை ஊக்குவித்து, வாய்ப்பளிக்கவேண்டியது நம் கடமை.

இந்த ஆண்டு ஹம்சத்வனியின் என் ஆர் ஐ இசைவிழாவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரிட்டன், பிரான்ஸ், கனடா என்று பல்வேறு நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில், எங்கள் மேடை மூலமாக பன்னாட்டுக் கலைஞர்களுக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டு, அவர்கள் அயல்நாடுகளில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தும் சாத்தியங்கள் பற்றி ஆலோசனை செய்கிறார்கள் என பெருமையோடு கூறினார் சுந்தார்.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT