Mother tongue is a symbol of culture https://www.newsfirst.lk/tamil
கலை / கலாச்சாரம்

பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தாய்மொழி!

உலக தாய்மொழி தினம் (21.02.2024)

சேலம் சுபா

வ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய தனித்தன்மைகள் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் மாற்ற முடியாத அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழிதான். இதனை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினம் என சிறப்பிக்கிறது ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனமான யுனெஸ்கோ. இவ்வாண்டிற்கான கருப்பொருளாக, ‘பன்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்’ என்பதாக உள்ளது.

மகாத்மா காந்தி, ‘எனது தாய்மொழியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தபோதும், தாயின் மார்போடு ஒட்டிக்கொள்வதுபோல, எனது தாய்மொழியைப் பற்றிக்கொள்ள வேண்டும். அது மட்டுமே என்னை உயிரோடு வைத்திருக்கும்’ என்று ஹரிஜன்  பத்திரிக்கையில் தாய்மொழி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழியின் சிறப்பு குறித்து நெல்சன் மண்டேலா, ‘நீங்கள் ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால், நீங்கள் பேசுவது அவனது மூளைக்கு செல்லும். ஆனால், நீங்கள் அவனது தாய்மொழியில் பேசும்போது, அது அவனுடைய இதயத்துக்கு செல்லும்’ என்று கூறியுள்ளார்.

ஆம்... தாய்மொழி என்பது தாய்க்கு ஒப்பான ஒன்று. மொழி என்பது கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்பு சாதனம் என்று நினைக்கிறோம். ஆனால், மொழி என்பது அவற்றை எல்லாம் தாண்டி நம் பண்பாட்டு அடையாளம். கலாசார வளர்ச்சிக்கு உதவும் ஆதாரம். வெற்றிக்கு வித்திடும் அஸ்திவாரம்.

உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் மொழிகள் ஏறக்குறைய 6,000 மொழிகள் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. நமது இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருவது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக மொழிகளைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான மரபுடைய மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி.  இந்த சிறப்பு உலகில் சில மொழிகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால், தற்போதைய டிஜிட்டல் உலகில் தமிழ் மொழி வளர்ச்சி நோக்கி பயணிக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. பன்னாட்டு மொழி அறிவு நிச்சயம் தேவை. மறுக்கவில்லை. ஆனால், தாய்மொழியைத் தவிர்த்து விட்டுத்தான் அதைப் பெற வேண்டுமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளை இன்றும் நாம் கற்கிறோம் என்பதே தமிழ் மொழியின் சிறப்புக்கு சான்று. கருவில் இருக்கும்போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் அனைத்தும் தாய்மொழி வழியாகவே நடக்கிறது.

ஆகவே, நமது தாய்மொழியான தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் கற்றுத்தர வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT