தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள மக்கள் சிவபெருமானை நெல்லையப்பர் என்றும், வேணுவனத்தார் என்றும் வழிபடுகிறார்கள். பார்வதி தேவியை காந்திமதியம்மனாகவும் தரிசிக்கிறார்கள். இந்தக் கோயிலில் மகாவிஷ்ணு வழிபாடும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் வடக்கே அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோயிலின் கருவறையை பாண்டியர்களே கட்டியுள்ளனர். மீதம் இருப்பதை சோழர்கள், சேரர்கள், பல்லவர்கள், மதுரை நாயக்கர்கள் என்று பலரும் கட்டி அழகுப்படுத்தியுள்ளனர்.
இக்கோயிலின் கருவறை மற்றும் கோபுரத்தை, ‘நின்றசீர் நெடுமாறன்’ 7ம் நூற்றாண்டில் கட்டினார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள இசை தூண்களை கட்டியதும் நின்றசீர் நெடுமாறனே ஆவார். பிறகு குலசேகர பாண்டியன் 13ம் நூற்றாண்டில் அதன் சுற்றுச்சுவரை எழுப்பினார்.
இங்குள்ள முக்கியமான கல்வெட்டுகளில் மறவர்மன் சுந்தரபாண்டியன் சிவபெருமானை உடையார், உடையநாயனார் என்று குறிப்பிட்டிருக்கிறார். பார்வதி தேவியை ‘நாச்சியார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். குலசேகர பாண்டியன் கல்வெட்டிலிருந்து தெரியவருவது, அவர் சேர, சோழ, ஹோய்சால மன்னர்களை போரில் தோற்கடித்து அதன் மூலம் கிடைத்த செல்வத்தை வைத்து இக்கோயிலின் மதில் சுவரை கட்டினார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் திருநெல்வேலி ‘தின்னவேலி’ என்று அழைக்கப்பட்டது. புராண காலத்தில் இவ்விடம் வேணுவனம் என்று அழைக்கப்பட்டது. வேணுவனம் என்றால், மூங்கில் காடு என்று பொருள். அந்த மூங்கில் காட்டில்தான் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்ததாகவும் அதற்கு சாட்சியாக இருந்தது மகாவிஷ்ணு என்றும் கூறப்படுகிறது.
இக்கோயில் 14.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது. 260 மீட்டர் நீளமும், 230 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டிருக்கிறது. 1647ல் இக்கோயிலில் உள்ள சங்கிலி மண்டபம் வடைமலையப்பன் பிள்ளையானால் கட்டப்பட்டது. இது காந்திமதியம்மன் கோயிலையும் நெல்லையப்பர் கோயிலையும் இணைக்கும் பாலமாக உள்ளது. நந்தி மண்டபத்தில் இருக்கும் நந்தி தஞ்சாவூர், ராமேஸ்வரம் போன்ற கோயில்களில் உள்ளது போல அளவில் பெரிதாக உள்ளது.
இக்கோயிலின் நந்தி மண்டபம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கேயுள்ள இரண்டு பெரிய தூண்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் 48 துணை தூண்கள் உள்ளன. அதிலே காற்று படும்போதோ அல்லது யாரேனும் தட்டினாலோ இசை உருவாகிறது என்பது விசேஷம். இதில் உருவாகும் இசையானது, இசை கருவிகளிலிருந்து உருவாகும் இசையை போலவே உள்ளது என்பது சிறப்பு.
இங்கிருக்கும் இசைத்தூண்கள் சப்தஸ்வரங்களையும் உருவாக்கக் கூடியதாகும். மொத்தமாக 161 இசைத்தூண்கள் சேர்ந்து இங்கு இசையை உருவாக்குகிறது. இங்கிருக்கும் ஒரு தூணை தட்டினால் மற்ற தூண்களும் அதிரும் என்பது ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. இத்தூண்களை ஸ்ருதி தூண்கள், கானா தூண்கள், லயா தூண்கள் என்று பிரிக்கிறார்கள். ஸ்ருதி தூண்கள் அடிப்படையான இசையை உருவாக்குவது, லயா தூண்கள் தாளங்களை உருவாக்குவது.
நெல்லையப்பர் கோயிலில், ஸ்ருதி மற்றும் லயா இரண்டும் சேர்ந்த தூண்களை பார்க்கலாம் என்பது விசேஷம்.
சிவபெருமான் நடனமாடிய இடங்களில் திருநெல்வேலியும் ஒன்று. இவ்விடத்தை தாமிர அம்பலம் அல்லது தாமிர சபை என்று கூறுவார்கள். நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகும். திருவாரூரை அடுத்து மிகப்பெரிய தேர் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோவிலாகும். ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அலைமோதும். இந்த அதிசயக் கோயிலை அதன் கலைத்திறனுக்காகவும், கட்டடக் கலைக்காகவும், இசைத்தூண்களின் நுட்பத்திற்காகவும் அவசியம் ஒருமுறையேனும் பார்க்க வேண்டியது அவசியமாகும்.