காலம் காலமாக பெண்கள் தங்களை மேலும் அழகாக காட்டிக்கொள்ள விதவிதமான ஆபரணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். காது, மூக்கு, நெற்றி, விரல்கள், கைகள், கால்கள் என அனைத்திற்கும் ஆபரணங்கள் உருவாக்கப்பட்டன. காலத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்புகள் மாறின. புதிய புதிய யோசனைகளால் ஆபரணக் கலை மேலோங்க ஆரம்பித்தது.
அந்த வகையில்தான் சுமார் 3300 முதல் 1200 பிசி நூற்றாண்டுகளில் சிந்து சமவெளி நாகரிகத்தின்போது டெரகோட்டா ஆபரணம் வடிவமைக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
காலப்போக்கில் அழிந்தும் உருமாறியும் வரும் பல பொருட்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மத்தியில் தன்னை சிதைத்துக்கொள்ளாமலும் தான் இருப்பதை மக்கள் மறக்காமல் இருக்க காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை உருவாக்கிக் கொண்டும் இருப்பது டெரகோட்டா. அதற்கு முக்கிய காரணம் இயற்கை.
ஆம்! களிமண்ணை எடுத்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருவாக்கப்படும் இந்த டெரகோட்டா ஆபரணங்களுக்கு அழிவே கிடையாதுதானே!
பழங்காலத்தில் பானைகள், வீட்டு அலங்கார பொருட்கள், உபயோகப் பொருட்கள் என ஆரம்பித்து கடவுள் சிலை வரை டெரகோட்டாவில் செய்ய ஆரம்பித்தனர். மௌரிய ராஜ்யத்தில் 322 முதல் 185 பிசி நூற்றாண்டு காலக்கட்டத்தில் செய்த டெரகோட்டா நடனப்பெண் சிலை பாட்னா நகரில் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு, தற்போது பாட்னா அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மொகஞ்சதாரோ காலத்து டெரகோட்டா பெண் கடவுள் சிலையும் கண்டறியப்பட்டுள்ளது.
பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள இதனை வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஆரஞ்சு, சிவப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு போன்ற நிறங்களாய் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த டெரகோட்டா வகையில், தோடு, வளையல், மோதிரம், பதக்கம் போன்ற எண்ணற்ற அணிகலன்கள் அழகாகவும் வண்ணம் நிறைந்ததாகவும் செய்து கொள்ளலாம். இந்த ஆபரணங்கள் செய்ய தொடங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை அனைவராலும் வரவேற்கப்படும் ஒன்றாக அமைகிறது டெரகோட்டா அணிகலன்கள்.
சிறு டாலர் செய்து கயிற்றோடு இணைத்து அணிவது, மிக எளிமையாகவும் இந்த காலத்துக்கு ஏற்ற உடைகளுக்கு பொருத்தமானதாகவும் அமைகிறது. பண்டிகைக்கும் வீட்டு விசேஷங்களுக்கும் உடுத்தும் அனார்கலி, குர்தா, சேலை போன்ற பாரம்பரிய உடைகளுக்கும், ஜீன்ஸ் – குர்த்தீஸ், வெஸ்டர்ன் வேர் ஆடைகள் போன்ற நவீன உடைகளுக்கும் ஏற்றவாறு கண்கவர் வடிவமைப்பு களுடன் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
டெரகோட்டா அணிகலன் செய்யும் கலை நாளுக்கு நாள் புதுப்புது வடிவமைப்புகளுடன் ஆடம்பரமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தங்கம், வெள்ளி, வைரம் என்று வாங்கிப் போட்டுக்கொள்ளும் காலம் மாறி, ஆயிரம் விலைக்கணக்கில் டெரகோட்டா அணிகலன்களை வாங்கி அணியும் காலம் இது என்றே சொல்லத் தோன்றுகிறது!