Tanjore Saraswati Mahal Library is a monument of world culture 
கலை / கலாச்சாரம்

உலகக் கலாசாரத்தின் நினைவுச்சின்னமாய் விளங்கும் தஞ்சை சரசுவதி மகால் நூலகம்!

பொ.பாலாஜிகணேஷ்

ஞ்சாவூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள சரசுவதி மகால் நூலகம்தான். இது ஆசியாவின் மிகப்பழைமையான நூலகங்களுள் ஒன்று. இந்த நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் 300 ஆண்டுகால சேகரிப்பின் பொக்கிஷமாகத் திகழ்கிறது.

இந்த சரசுவதி மகால் நூலகம், கி.பி.1531 - 1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாகத் தொடங்கப்பட்டது. பின்னர், கி.பி. 1675ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்த நூலகத்தை பேணிப்பாதுகாத்து வளா்த்து வந்தனர்.

ஓலைச் சுவடிகளின் அணிவகுப்பு

மராத்திய மன்னா்களுள் புகழ்பெற்று விளங்கிய சரபோஜி மன்னரின் (கி.பி.1798 -1832) சேவையை நினைவுகூறும் விதமாக இந்த நூலகத்திற்கு சரபோஜி சரசுவதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது. அத்துடன், இரண்டாம் சரபோஜி மன்னர், 1820ம் ஆண்டு காசிக்கு சென்றபோது, அங்கிருந்து ஏராளமான சமஸ்கிருத நூல்களைக் கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000 அச்சுப் புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் இந்த நூலகத்தில் சேர்க்கப்பட்டன. ஆகையால் இந்நூலகம். ‘சரபோசி சரசுவதி மகால் நூல் நிலையம்’ என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது.

இந்த நூலகத்தில் அரிய வகை ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகிதக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இங்கே சங்ககால இலக்கிய உரைகள், மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்ட 30,433 ஓலைச்சுவடிகள், 6,426 புத்தகங்கள் மற்றும் இதழ்களும் உள்ளன. நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

சரசுவதி மகால் உள்ளே...

அதன்படி, இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் முதலிய பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. அத்துடன் வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், தத்துவம் முதலிய பல்வேறு கலையியல் நூல்களும் உள்ளன.

சரசுவதி மகால் முன் தோற்றம்

300 ஆண்டுகளுக்கு முன்னர் படியெடுத்து எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் முதலிய நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அழகிய நகரங்களின் படங்கள், உடற்கூறு, தாவரம் முதலிய கலைக்களுக்குரிய பல நிழற்படங்கள், சிறந்த ஓவியங்கள் முதலியவையும் உள்ளன.

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் இது. பல்வேறு வரலாற்று ஆவணங்களை சுமந்தபடி கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த சரசுவதி மகால் நூலகம் எனும் கலாசார நினைவுச் சின்னம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT