தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிற்பக் கலைக்கு மாபெரும் உதாரணமாக விளங்கும் இந்த ஆலயம் சோழர்கால திருக்கோயில்களில் ஒன்று.
இரண்டாம் ராஜராஜனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை, இத்தல இறைவனை வணங்கி சாப விமோசனம் பெற்றதால் இந்தக் கோயிலுக்கு, ஐராவதேஸ்வரர் கோயில் என்றும், இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
இங்குள்ள யானை - காளை சிற்பம் பிரசித்திப்பெற்றது. யானையின் உடலை மறைத்தால் காளையின் உருவமும், காளையின் உடலை மறைத்தால் யானையின் உருவமும் தெரியும் வகையில், இரண்டு விலங்குகளுக்கும் ஒரே தலையை வடித்திருப்பது சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இங்குள்ள தூண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிறிதளவு கூட இடைவெளி இன்றி சிற்பங்களால் நிறைந்துள்ளன. நர்த்தனம் புரியும் கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம், வாத்தியக்காரர்களும், நாட்டியத்தின் முத்திரை காட்டும் பெண்களின் சிற்பங்களும் சில சென்டி மீட்டர் உயரமே கொண்டவை. அவ்வளவும் மிகவும் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது.
இறைவனின் கருவறைக்கு முன்பாக ராஜகம்பீரன் திருமண மண்டபம் என்னும் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேர் சக்கரங்களோடு, ஒரு பக்கம் யானைகளாலும், மறு பக்கம் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சிவாலயங்களில் மூலவரின் அருகிலேயே அம்பிகைக்கு சன்னிதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு அம்பாள் தெய்வநாயகியின் சன்னிதி, ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு வெளியே வலது புறம் அமைந்திருக்கிறது.
ஆலயத்திற்குள் நுழைந்ததும் நந்தியின் முன்பாக பலிபீடம் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் படிக்கட்டுகளோடு அமைந்த பலிபீடம் இது. இந்தப் படிகளைத் தட்டினால் ஒலி எழுப்பும் இசைப்படிகள் ஆகும். சாபங்கள், பாவங்கள் போக்கும் தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது.
தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயம் மற்றும் தாராபுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும், ‘அழியாத சோழர் பெருங்கோயில்கள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கருவறை விமானம், ஐந்துநிலை மாடங்களுடன் 80 அடி உயரம் கொண்டதாக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.