Terracotta sculptures 
கலை / கலாச்சாரம்

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய 'சுடுமண்' சிற்பங்கள்!

சேலம் சுபா

ஆதிகாலம் முதல் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத் தான் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். படிப்படியாக அறிவியல் முன்னேற்றங்கள் பெருகப் பெருக இயற்கையில் இருந்து விலகி செயற்கைக்கு மாற ஆரம்பித்து விட்டனர்.

அன்று முதல் இன்று வரை நாகரீகம் பெருகினாலும் மண்ணினால் செய்யப்படும் கலை வடிவங்கள் மாறாமலும் நவீனத்திற்கு ஏற்றவாறு புதுமைகள் செய்யப்பட்டும் பயன்படுத்தப் படுகின்றான. அதில் ஒன்று தான் தற்காலப் பெண்கள் விரும்பி அணியும் டெரகோட்டா நகைகள்.

டெரகோட்டா (Terracotta) - என்பது சுடுமண் சிற்பம் ஆகும். களிமண்ணைக் குழைத்துப் பக்குவமாக்கி வேண்டிய வடிவங்களில் சிற்பமாக்கிப் பின்னர் சூளைகளின் மூலம் சுட்டு, திடமாக மாற்றி உறுதியாக்கப்படுவதால் இவை 'சுடுமண்' சிற்பங்கள் என அழைக்கப்படுகிறது.

இன்று பெருமளவில் பரவியுள்ள இக்கலை ஆதித் தமிழர்களால் கண்டறியப்பட்டது என்பது வியப்பூட்டும் உண்மை. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே டெரகோட்டா முறையில் சிற்பங்கள் முதல் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டதாக அகழாய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது டெரகோட்டா நகைகளையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். தங்க நகைகளுக்கு எப்போதும் மதிப்பு இருந்தாலும் எல்லோராலும் வாங்கி அணிய முடிவதில்லை.

குறைந்த விலையில், விதவிதமான, வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கி, அழகிய வண்ணங்கள் சேர்த்து, புதுமையான நகைகளை டெரகோட்டாவில் உருவாக்க முடியும் என்பதோடு அதன் உறுதித்தன்மையும், கவரும் அழகியலும் பெண்கள் இதை விரும்பக் காரணமாகிறது.

நகைகள் செய்ய, தேவையான களிமண்ணை விரும்பும் வடிவத்துக்கான அச்சில் சேர்த்து உருவம் உருவாக்க வேண்டும். இதை வீட்டுக்குள்ளேயே சில நாட்கள் காய வைத்து, அதன் உறுதித்தன்மையை அதிகரிக்க நெருப்பில் வாட்டி, விரும்பிய வண்ணங்கள் கொடுத்து, அணிகலன்கள் உருவாக்கப்படும். உருவாக்கும் நாட்களும், உருவங்கள் செதுக்கும் ஊசி, நெருப்பில் வாட்டும் கருவி போன்றவற்றை வாங்கத் தேவையான முதலீடும் குறைவு என்பதால் கற்பனை வளம் கொண்ட பெண்கள் வீட்டில் இருந்தே இந்த நகைகளை செய்து வருமானம் ஈட்டலாம்.

கலை மீதான ஆர்வம், தனித்துவம், விடாமுயற்சியுடன் தேடலும், ஆர்வமும் இருந்தால், இத்துறையில் குறுகிய காலத்திலே நன்கு சம்பாதிக்க முடியும். நவீனத்துக்கு ஏற்ப டிசைன்கள், வித்தியாசமான வண்ணங்களுடன் வீட்டில் இருந்தபடியே நகைகளை உருவாக்கி தெரிந்தவருக்கும் ஆன்லைனிலும் விற்கலாம்.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைப்பக்கங்களில் உங்கள் தயாரிப்புக்கான தனிப் பக்கம் உருவாக்கி, படைப்புகளை புகைப்படம் எடுத்து பதிவிடுவதன் மூலம் வாடிக்கையாளர்களை கவரலாம்.

கைவினை தொழிலின் கீழ் வரும் இதற்கு மத்திய, மாநில அரசுகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதுடன் தொழில் துவங்குவதற்கு நிதியுதவியும் ஒதுக்குவது சிறப்பு. மத்திய அரசு சார்பில், கைவினைஞர் அடையாள அட்டை (Artisan Identity Card) வழங்கப்படுகிறது. இதற்கு, http://handicrafts.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த அடையாள அட்டையினால் ஏராளமான பயன்கள் பெறலாம்.

ஆம் நாடு முழுக்க, அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து கண்காட்சிகளிலும் இலவசமாக தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்கும் வாய்ப்பும் தொழிலை அடுத்த கட்டம் கொண்டு செல்ல வங்கிகளில் கடனுதவி பெறவும் இந்த அடையாள அட்டை முக்கிய ஆவணமாக உதவுகிறது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT