தூங்கானை மாடக் கோயில் 
கலை / கலாச்சாரம்

தமிழர் கட்டடக்கலை சிறப்பைக் கூறும் தூங்கானை மாடக் கோயில்!

ஆர்.வி.பதி

மிழர்களின் கோயில் கட்டடக்கலை என்பது கடல் போன்றது. மிக நுட்பமான, ஆச்சரியமூட்டும் பலப்பலக் கோயில்கள் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களால் எழுப்பப்பட்டுள்ளன. கோயில்களில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையே, ‘தூங்கானை மாடக் கோயில்’ ஆகும். இக்கோயிலைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளுவோம்.

தூங்கானை மாடக் கோயில்கள் தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. தூங்கானை மாட விமானம் புறத்தோற்றத்தில் யானையின் பின்னுடல் போன்று காட்சியளிக்கும் என்பதால் இப்பெயர் பெற்றது என்று கூறுவர். இந்தக் கோயில்கள் வடமொழியில் ‘கஜபிருஷ்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில்கள் பல்லவர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்டுள்ளன. சோழர்கள் தொண்டை நாட்டை ஆட்சி செய்த காலத்தில் பல்லவர்களின் மரபைப் பின்பற்றி இத்தகைய கோயில்களை அதிக அளவில் எடுத்துள்ளனர்.

ஆதிகாலத்தில் நமது கோயில்கள் மரத்தினாலும் பின்னர் செங்கல், சுண்ணாம்பு முதலானவற்றைக் கொண்டும் கட்டப்பட்டன. சங்க காலத்தில் கோயில்கள் செங்கற்களால் கட்டப்பட்டு விட்டங்கள்  மரத்தால் அமைக்கப்பட்டு சுவர்கள் சுண்ணாம்பால் பூசப்பட்டு கட்டப்பட்டன. போதிய பாராமரிப்பின்மை காரணமாக அவை நாளடையில் சிதையத் தொடங்கின. இதைத் தொடர்ந்து பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக குன்றுகளை மேற்புரத்திலிருந்து கீழ்ப்புறம் நோக்கி செதுக்கி ஒற்றைக் கற்றளிகளாக வடிவமைக்கப்பட்டன. பின்னர் கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கோயில்கள் கட்டப்பட்டன. இத்தகைய கோயில்கள் கற்றளிக் கோயில்கள் என்று அழைக்கப்பட்டன.

கோயில்களில் கரக்கோயில், கொகுடிக்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், பூங்கோயில், பெருங்கோயில், மாடக்கோயில், இளங்கோயில், ஞாழல்கோயில் என பல வகைகளுண்டு. சிற்ப சாஸ்திர நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்த காந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்ற ஏழு விதமான கோயில்களைப் பற்றிக் கூறுகின்றன.

சிற்ப சாஸ்திர நூல்களில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும் ஹஸ்திபிருஷ்டக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். தமிழில் ஆனைக்கோயில் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆலக்கோயில் என்று மருவியது. இக்கோயில் வகையானது தூங்கானை மாடக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. காண்பதற்கு யானையின் பின்னுடல் போல அமைந்துள்ளதால் இதற்கு யானைக் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது. தூங்கானை மாடக் கோயில் கருவறை அரைவட்ட வடிவத்தில் அமைந்திருக்கும்.

மாமல்லபுரம் சகாதேவ ரதம், கூரம் வித்யவிநீத பல்லவபரமேச்வர கிருஹம், கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருவாலிதாயம் வல்லீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில் மாசிலாமணிஸ்வரர் கோயில், மானாமதி திருக்காரிக்கரைக் கோயில், செரப்பனஞ்சேரி வீமீஸ்வரர் கோயில், ஒரகடம் வாடாமல்லீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலம் தர்மீஸ்வரர் கோயில், பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோயில், வாயலூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில், புலிப்பரக்கோவில் வியாக்ரபுரீஸ்வரர் கோயில், காவாந்தண்டலம் சோழீஸ்வரர் கோயில், திருத்தணி வீரட்டானீஸ்வரர் கோயில் முதலானவை சில தூங்கானை மாடக் கோயில்களாகும்.

தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ரதங்களில் ஒற்றைக்கற்றளியான சகாதேவ ரதம் முதல் தூங்கானை மாடக் கோயிலாகக் கருதப்படுகிறது. திருத்தணியில் அமைந்துள்ள வீரட்டானீஸ்வரர் கோயில் கடைசி பல்லவ மன்னரான அபராஜித பல்லவ வர்மனால் கட்டப்பட்ட கடைசி தூங்கானை மாடக்கோயில் என்று கூறப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT