உலகில் எத்தனையோ எண்ணிலடங்கா அதிசயங்கள் உள்ளன. இருப்பினும் விண்வெளியும் அதுக்கு சற்றும் குறைந்தது இல்லை என்பதை நமக்கு அவ்வப்போது நிரூபித்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி வளிமண்டலத்தில் நடக்கும் ஒரு அதிசய நிகழ்வுதான், ‘அரோரா போரியாலிஸ்.’ இது ரிப்பன் போன்று நடனமாடும் ஒரு வெளிச்சமாகும். வடதுருவத்தில் நிகழும் இந்த நிகழ்வை வெறும் கண்களாலேயே காணலாம்.
இது வடதுருவத்திலும் தென்துருவத்திலுமே காணப்பட்டக்கூடிய ஒரு நிகழ்வாகும். வடதுருவத்தில் நிகழ்வதன் பெயர் அரோரா போரியாலிஸ். தென்துருவத்தில் நிகழ்வதற்கு பெயர் அரோரா ஆஸ்ட்ராலிஸ் ஆகும். எனினும், வடதுருவத்தில் நிகழும் அரோரா போரியாலிஸ்தான் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இது உருவாவதற்குக் காரணம் சூரியனிலிருந்து வரும் சக்தி வாய்ந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதும்போது நம் பூமியின் மீது இருக்கும் காந்தப்புலங்கள் அதை அப்படியே துருவப்பகுதிக்கு தள்ளிக்கொண்டு சென்று பூமியின் மீது படாமல் பாதுகாக்கிறது. இதற்கு ஏற்படும் நிறத்திற்குக் காரணம் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் இரசாயன அமைப்பாகும். நைட்ரஜன் மூலக்கூறு சிவப்பு நிறத்தையும் ஆக்ஸிஜன் மூலக்கூறு பச்சை நிறத்தையும் உருவாக்குகிறது.
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் அதிகமாக இருக்கும்போது நல்ல வெளிச்சமான பிரகாசமான அரோரா உருவாகும் என்று கூறுகின்றனர். பூமியின் காந்த சக்திக்கு ஏற்ற மாதிரி அதன் வடிவமும் உருவமும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 – 2025ல் சூரியக் காற்றின் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்ற தகவல் இருப்பதால் இதுவே அரோரா போரியாலிஸ்ஸை பார்க்க வேண்டும் என்று நினைப்போருக்கு சரியான நேரமாக அமையும் என்று கூறப்படுகிறது. அரோரா போரியாலிஸ் பார்க்க வேண்டும் என்பது நிறைய பேரின் ஆசையாகவும் கனவாகவும் இருக்கும். இந்த அதிசயம் எப்போதும் வானில் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் அதற்கான சரியான நேர, கால, இடம் அமைய வேண்டும் என்கிறார்கள்.
வடதுருவத்தில் 2500 கிலோ மீட்டர் சுற்றளவை கொண்ட இடத்தை, ‘அரோரல் ஸோன்’ என்று அழைப்பார்கள். அந்த இடத்திலேயே அடிக்கடி அரோரா போரியாலிஸ் நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை அரோரா போரியாலிஸை காண்பதற்கான சரியான நேரமாகக் கருதப்படுகிறது. இரவில் 9 மணி முதல் 3 மணி வரை நன்றாகக் காண முடியுமாம்.
இதுபோன்ற நிகழ்வு மற்ற கிரகங்களிலும் நடக்கும். வீனஸ், மார்ஸ் போன்ற கிரகங்களிலும் இது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரோரா போரியாலிஸ் என்ற பெயரை முதன் முதலில் வைத்தவர் இத்தாலிய வானியலாளரான கலிலியோவாகும். கலிலியோ 1619ல் விடியலுக்கான கடவுளான அரோராவின் பெயரையும் கிரேக்க கடவுளான வடக்கின் காற்றான போரியாஸின் பெயரையும் இந்த நிகழ்விற்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 30,000 வருட பழைமையான குகை ஓவியத்தில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரோரா போரியாலிஸை அதிகம் புகைப்பட கலைஞர்களே படம் பிடிக்க விரும்புகிறார்கள். அதன் பச்சை நிறமும், நடனமும் அழகும் அவர்களை கவர்ந்திழுக்கிறது. எனினும், தட்ப வெட்ப மாற்றம், வெளிச்சமின்மை போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு சவாலாகவே அமைகிறது.
அரோரா போரியாலிஸை பார்பதற்கான சிறந்த நாடுகள், ஐஸ்லேன்ட், பின்லேன்ட், நார்வே, ஸ்வீடனாகும். இந்தியா மிகவும் தொலைவில் இருப்பதால் இங்கே அதை காண இயலாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிகழும் இந்த நிகழ்வை பார்ப்பவர்களுக்கு நல்ல சகுனமாகவும் செல்வ செழிப்பை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. பச்சை நிறமே பரவலாகக் காணப்பட்டாலும் நீலம், பர்புல் நிறங்களை காண்பது மிகவும் அரிதான நிறமாகக் கருதப்படுகிறது.