Magical desert https://tamil.oneindia.com
கலை / கலாச்சாரம்

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

ஆர்.ஜெயலட்சுமி

தூத்துக்குடி மாவட்டம், தேரிக்காடு பகுதியில் உள்ளது சிவப்பு மணல் மேடாகக் காட்சி தரும் பாலைவனம். இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி தேரிக்காடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே செம்மணல் கற்கள் எதுவும் இல்லாமல் ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாக காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால் கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்து விடும் வகையில் மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம் கடல் மட்டத்திலிருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்து விடும். ஒருசில சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல்  மேடாக மாறிவிடும்.

தென்மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு பலத்தக் காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயாஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும். நிமிடத்திற்கு ஒரு முறையாக காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால் அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமமான காரியம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற சிவந்த மணல் பகுதி அந்த மாவட்டங்களின் வேறு எந்த பகுதியிலும் காணப்படவில்லை என்பதுதான்.

இந்த மணல் ஆற்று மணலும் அல்ல, கடல் மணலும் அல்ல. அப்படியானால் இந்த அதிசய மணல்மேடு எப்படி தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையில் எங்கிருந்து எப்படி வந்தது என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடை தெரியாத புதிராகவே இருக்கின்றன. இங்குள்ள மணல் பகுதியில் ஆய்வுகள் மேற்கண்டபோது மணல் மூன்று அடுக்குகளாக இருப்பது தெரிய வந்தது. முதல் அடுக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியது என்றும், அதன் மேல் உள்ள இரண்டாம் அடுக்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், மேல் தளத்தில் உள்ள மணல் பகுதி ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி  இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்தத் தேரிக்காட்டில் மற்றொரு அதிசயம், அந்தப் பாலைவனத்தில் ஒரு சோலையாக மேல புதுகுடி என்ற இடத்தில் ஒரு சுனை இருக்கிறது. கோடை காலத்தில் கூட அந்த சுனையில் சுவையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த சுனையின் கரையில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் புகழ் பெற்றதாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT