Thennakathin Ellora Vettuvan Temple https://ta.wikipedia.org
கலை / கலாச்சாரம்

தென்னகத்தின் எல்லோரா வெட்டுவான் கோயில்!

நான்சி மலர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் எண்ணற்ற அதிசயக் கோயில்கள் பல இருப்பினும், பழைமையான கோயில்களைப் பார்க்கும்போது அவை நம்மை அந்தக் காலக்கட்டத்திற்கே கூட்டிச்செல்வது போல தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பழைமையான அற்புதக் கோயில்தான் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில்.

இது பாண்டியர்களின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இக்கோயில் 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறன்சந்தையன் என்னும் அரசனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டுமானம் நிறைவு பெறாத இந்தக் கோயிலை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் கட்டி முடித்தார் என்று நம்பப்படுகிறது. இந்தக் கோயில் பாறைகளில் வெட்டப்பட்ட கோயிலாகும்.

வெட்டுவான் கோயில்

இக்கோயிலில் நிறைய ஜெயின் சிற்பங்களே உள்ளன. தக்ஷிணாமூர்த்தி மிருதங்கம் வாசிப்பது போன்ற வித்தியாசமான சிற்பம் இக்கோயிலில் உள்ளது. இக்கோயில் மலரும் தாமரையை போன்ற தோற்றத்தில் காட்சி தருவதாகக் கூறப்படுகிறது. வெட்டுவான் கோயில் என்பதற்கு, ‘சிற்பிகளின் சொர்க்கம்’ என்றும், ‘கொலையாளியின் கோயில்’ என்றும் பொருள் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

இக்கோயில் குறித்து சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. சிற்பிகளான தந்தை மகன் ஆகிய இருவரிடையே ஒரு போட்டி ஏற்பட்டது. தந்தை மலையின் உச்சியில் இருக்கும் சிவன் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். மகன் முருகன் கோயிலை கட்டிக்கொண்டிருந்தார். எந்தக் கோயில் முதலில் கட்டி முடிக்கப்படுகிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என்பது நிபந்தனை. முருகன் கோயிலை மகன் முதலில் கட்டி முடித்துவிட, இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகனை கொன்று விடுகிறார். அதனாலேயே மலை மீதுள்ள சிவன் கோயில் இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே உள்ளது என்று கூறப்படுகிறது.

வெட்டுவான் கோயில்

இக்கோயில் அதன் கட்டமைப்புக்கும் கலைத்திறனுக்கும் பெயர் போனதாகும். இக்கோயிலை ஒற்றைக்கல்லில் செவ்வக வடிவில் கட்டியுள்ளனர். பாண்டியர்களின் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஒற்றைக்கல்லால் ஆன முப்பரிண கோயில் இதுதான். தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் துறை இக்கோயிலை பாதுகாத்து வருகிறது.

வெட்டுவான் கோயில்

இக்கோயிலின் கட்டடக்கலையை விருபாக்ஷா மற்றும் எல்லோரா கோயில்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். கட்டடக்கலையில் இம்மூன்று கோயில்களும் ஒன்று போலவே உள்ளதாகக் கூறுகின்றனர். இதற்குக் காரணம் பல்லவர்கள், ராஷ்டிரக்கூடர்கள், சாளுக்கியர்களிடமிருந்த அரசியல் உறவுமுறையேயாகும் என்று கூறப்படுகிறது.

கழுகுமலை கோயிலை ‘தென்னகத்தின் எல்லோரா’ என்றும் அழைப்பதுண்டு. யுனெஸ்கோவின் பாதுகாக்கப்படும் பாரம்பரிய கலைச் சின்னங்களில் கழுகுமலையும் ஒன்றாக உள்ளது. அற்புதக் கலைநயத்துடன் விளங்கும் வெட்டுவான் கோயிலின் அழகை வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை கண்டுகளிக்கலாமே.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT