டைட்டானிக் விபத்து ஏற்பட்டு பல வருடங்கள் ஆனாலும், உலக மக்களால் மறக்கமுடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது. டைட்டானிக் விபத்தில் பலியானோர் அதிகம், அதேபோல் உயிர் தப்பியவர்களும் உண்டு. அந்த விபத்திலிருந்து தப்பித்த ஒருவர் தனது சொந்த நாட்டிலேயே புறக்கணிக்கப்பட்ட கதையைதான் இப்போது நாம் பார்க்கவுள்ளோம்.
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் என்ற கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாகவே கருதப்படுகிறது.
இந்த விபத்தில் தப்பித்தவர்கள் சிலரின் வாழ்க்கை மிகவும் சோகமாகவே இருந்துள்ளது.
அதில் ஒருவர்தான் ஜப்பானை சேர்ந்த Masabumi Hosono என்பவர். இவர் ஒரு ஜப்பான் அதிகாரி ஆவார். டைட்டானிக் கப்பல் விபத்துக்கு முன், இவர் ரஷ்யாவில் ரயில்வே துறையின் ஜப்பான் போக்குவரத்து துறையில் வேலை செய்து வந்தார். 42 வயதான இவர் ரஷ்யாவில் செய்த வேலையை ஜப்பானுக்கு மாற்றி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடவேண்டும் என்ற ஆசையுடன் நாடு திரும்பும் முடிவை எடுத்தார். அப்போதுதான் டைட்டானிக்கில் பயணம் செய்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒரே ஜப்பானியர் இவர்தான்.
கப்பல் மூழ்கியபின் ஹொசொனோ இதுதான் அவரின் கடைசி நிமிடங்கள் என்று எண்ணி கண்களை மூடி மரணத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து கப்பலின் விளிம்பில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென்று ஒரு அதிகாரி வந்து படகில் இரண்டு பேர் உட்கார இடம் உள்ளது என்று கூறினார்.
ஹொசொனோவின் பக்கத்தில் இருந்தவர், உடனே படகில் இறங்கினார். படகு எடுக்கும் சமயம் வந்தது. ஏனெனில், கப்பல் முழுவதுமாக மூழ்கவிருந்தது. ஹொசொனோ அக்கம்பக்கம் வேறு யாராவது பெண்கள் அல்லது குழந்தைகள் உள்ளார்களா? என்று பார்த்திருக்கிறார். முதலில் இறங்கிய அந்த நபர் ஹொசொனோவை அவசரப்படுத்தினார், கப்பல் மூழ்கப்போகிறது என்று. ஹொசொனோ என்ன செய்வது என்று அறியாமல், படகில் இருப்பவர்களையாவது காப்பாற்றலாம் என்று படகில் ஏறினார்.
உயிர்தப்பிய 700 பேரில் ஹொசொனோவும் ஒருவர். ஆனால், அவர் ஜப்பான் திரும்பியபோது அவரை யாருமே வரவேற்கவில்லை. ஜப்பான் மக்களும் செய்தியாளர்களும் என்னென்னமோ பேச ஆரம்பித்தார்கள். ஆம்! வீர மரணத்தைக்கூட ஏற்கமுடியாத இவர் ஒரு மனிதரா? என்று கேள்விகள் எழுப்பினர். அங்கு எத்தனையோ குழந்தைகளும் பெண்களும் இருக்கும்போது உயிருக்கு பயந்த கோழையாக நாடு திரும்பியிருக்கிறான் என்று செய்தித்தாளின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டது. சொந்த நாட்டு மக்களே அவரைப் புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மனமுடைந்தார். வேதனைகளை மையின்மூலம் வெளியிட்டு டைட்டானிக் விபத்தில் நடந்தவற்றை எழுதி புத்தகம் வெளியிட்டார்.
1939ம் ஆண்டு வரை வெட்கத்துடனே, மக்கள் முகத்தில் முழிக்காமலேயே, இயற்கை எய்தினார்.
அதன்பின்னர் சில வருடங்களுக்கு பின்னரே அவரின் புத்தகத்தைப் படித்த ஒரு ஆராய்ச்சியாளர் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்தார். அப்போதுதான் உலக மக்களுக்கு தெரிய வந்தது. உயிருக்கு பயந்து கோழையாக, பெண்களையும் குழந்தைகளையும் தள்ளிவிட்டு படகில் ஏறியது வேறு ஒருவர் என்றும், ஹொசொனோ படகில் இருந்தவர்களைக் காப்பாற்றவே செய்தார் என்றும் தெரியவந்தது. ஆனால், அவர் மறைவுக்குப் பின் போற்றப்பட்டு என்ன பயன்?
இருக்கும்போது அவரின் கௌரவம், அரசு வேலை பறிக்கப்பட்டதுடன், ஜப்பானில் எங்கேயும் வேலை தரவில்லை. புழுவாக மதிக்கப்பட்டார், அக்கம்பக்கம் யாருமே பேசவில்லை. இருட்டறையையும் ஒரு விளக்கின் வெளிச்சத்தையும், தன்னுடைய வேதனையை எழுத உதவும் காகிதத்தையும் பேனாவையுமே நண்பர்களாக்கிக் கொண்டார்.
மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்த இவர், மனிதனின் பிடியில் மாட்டிக்கொண்டாரே!! அவரின் கதையில், விதி வரிகளை எழுதிவிட்டது.