நாகாலாந்து சிற்ப மர வேலைப்பாடு https://jkphotosnagaland.blogspot.com
கலை / கலாச்சாரம்

பாரம்பரிய கலை வடிவ நாகாலாந்து சிற்ப மர வேலைப்பாடு!

எஸ்.விஜயலட்சுமி

நாகாலாந்து மாநிலத்தில் ‘வுட் கார்விங்’ எனப்படும் மர வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் குறிப்பிடத்தக்க மற்றும் புகழ் பெற்ற, பாரம்பரிய கலை வடிவம் ஆகும். இது நாகா பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

ராட்சத சைசில் மர வாயில்: இங்கே செதுக்கப்படும் மர வடிவமைப்புகள் மிகுந்த கலைநயம் மிக்கவை. ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டவை. நாகலாந்தின் பழங்குடி கிராம மக்கள், கோகிமா கிராமத்திற்கு ராட்சத சைசில் மர வாயில் அமைத்துள்ளனர். இந்த மாநிலத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட பல வழிகள் காணப்படுகின்றன. கிராமங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் இந்த மாதிரி வாயில்கள் பழங்குடியினரால் அமைக்கப்பட்டது. அவற்றில் இருக்கும் உருவங்கள் பல குறியீடுகளைக் கொண்டுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்: நாகாலாந்து மக்களின் வாழ்வியலோடு இணைந்தது மர வேலைப்பாட்டுக் கலை. திறமையான கைவினைஞர்கள் வீட்டுப் பொருட்கள் கருவிகள் மற்றும் கட்டமைப்புகள் உட்பட பல்வேறு பொருட்களை மரத்தை செதுக்கி உருவாக்கினார்கள். வழிபாடு, சடங்குகள், கல்லறைகள் மற்றும் வீட்டின் தூண்கள், வாயில்கள் உமித் தொட்டிகள், உணவு பாத்திரங்கள் ஸ்பூன்கள், எளிய மர பாத்திரங்கள் கூட மர வேலைப்பாடுகளுடன வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொறுங்குகள் (Morungs): மொறுங்குகள் என்பவை நாகாலாந்தின் பாரம்பரிய சமூக கட்டடங்கள் ஆகும். இவை நாகா மக்களின் சமூக மற்றும் கலாசார வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவை. இவை ஒரு கிராமத்தின் சமூக கல்வி மற்றும் பாதுகாப்பு மையங்களாக செயல்பட்டன. இந்த கட்டடங்கள் இளம் போர் வீரர்கள் கூடி கலைகளை கற்கும் இடமாக செயல்பட்டன. இந்தக் கட்டடங்களின் வெளிப்புற மற்றும் உட்புறம் பெரும்பாலும் சிக்கலான மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டன. இவை அந்த மக்களின் வீரம், வலிமை மற்றும் பழங்கால வரலாறு பற்றிய கதையை எடுத்துக்காட்டுகிறது.

சின்னங்கள் மற்றும் கருக்கள்: பல சிற்பங்களில் புலிகள், ஹார்ன்பில்கள், பெரிய கால்நடைகள் போன்ற விலங்குகளின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. அவை நாகா மக்களுக்கு சக்தி, தைரியம் மற்றும் செல்வம் போன்றவற்றின் அடையாளங்களாக இருக்கின்றன. மனித உருவ சிற்பங்கள் போர் வீரர்களை சித்தரிக்கின்றன. சில சிற்பங்களில் புராண உயிரினங்கள் அல்லது ஆவிகள் இருக்கின்றன. இவை கிராமத்தை பாதுகாக்கும் அல்லது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்பட்டது.

கைவினைத் திறன்: மர வேலைப்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உளி மற்றும் கத்திகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தினாலும் விரிவான மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்கினார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் கடினமான மரங்களில் சிற்பங்களை செதுக்கினார்கள். மரம் செதுக்குதலின் திறன்களும் அறிவும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பப்பட்டது. ஒரு தந்தை தனது மகனுக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பது வழக்கம்.

நவீன மாற்றம்: தற்போது மர செதுக்குதல் கலை நவீன மயமாக்கப்பட்டு இருந்தாலும் ஹார்ன்பில் திருவிழா போன்ற கலாசார விழாக்கள் பாரம்பரிய மர வேலைப்பாடுகளை காட்சிப்படுத்துகின்றன. அவை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன. தற்போது வுட் கார்விங் கலையை பாரம்பரிய பயன்பாடுகளுக்கும், அலங்காரப் பொருட்கள் தளவாடங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்துகிறார்கள். இவை சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT