உலகின் மிகச் சிறிய நாடு வாடிகன் நகரம். இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குள் இந்த நகரம் அமைந்துள்ளது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மதத் தலைவர்களும் இங்குதான் வாழ்கின்றனர். போப் இங்கேதான் ஆட்சி புரிகிறார்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர்கள் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றன. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபை, பாதிரியார்கள் மற்றும் முக்கிய மதத் தலைவர்கள் அனைவரும் இங்கிருந்துதான் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நாடு 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது. இத்தாலியன், லத்தீன் மொழிகள்தான் இந்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகின்றன. இங்குள்ள தேவாலயங்களில் உலகின் மிகச்சிறந்த ஓவியங்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. வாடிகன் நகரின் முக்கிய வருவாய் என்று பார்த்தால் தபால் தலை விற்பனையும், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் பணமும்தான். இத்தாலிய மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியில் 10 சதவிகிதம் வாடிகன் நகருக்கு நன்கொடையாகத் தருகின்றனர்.
வாடிகன் நகரத்தில்தான் உலகின் மிகச்சிறிய ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 300 மீட்டர் நீளம் உள்ள இரண்டு தடங்கள் மற்றும் சிட்டா வாடிகானோ என்று பெயரிடப்பட்ட ஒரு நிலையமும் உள்ளது. இது பொருட்களை கொண்டு செல்ல மட்டும் பயன்படுகிறது. இதில் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சிறையே இல்லாத ஒரே நாடு இந்த வாட்டிகன் நகரம்தான். குற்றவாளிகள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் லேட்டரன் ஒப்பந்தத்தின்படி இத்தாலிய சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சிறை தண்டனைக்கான செலவை இந்த வாடிகன் அரசு ஏற்கிறது.
வாடிகன் நகரில் யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடையாது. இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களுடைய பதவிக் காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள். அதுவரை தற்காலிக குடியுரிமை கிடைக்கப்பெறும்.
வாடிகன் நகரத்தின் மொத்த பரப்பளவு 121 ஏக்கர் மட்டுமே. இங்கு மருத்துவமனைகள் எதுவும் கிடையாது. யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, பெண்கள் கர்ப்பமானாலோ ரோமில் உள்ள மருத்துவமனைக்கோ, கிளினிக்குகளுக்கோதான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.
இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேவாலயமாகும். இதனை கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆனதாகக் கூறப்படுகிறது. வாடிகன் சிறிய நகரமாக 800 முதல் 900 பேர் மட்டுமே வாழ்ந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இங்கு தனி நபர் குற்ற விகிதம் அதிகமாக உள்ளது. இந்தக் குற்றங்கள் பொதுவாக வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் திருடுதல், பிக்பாக்கெட் அடித்தல் என்று செய்யப்படுகின்றன.