இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர் மற்றும் கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரும் கூட. அவரது எழுத்தாற்றல் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிதம்பரம் பிள்ளை சுதேசி இயக்கத்தில் பங்கு பெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கவும் பிரிட்டிஷ் இறக்குமதியை நிராகரிப்பதற்காகவும் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய மாமனிதர். சிறை சென்று செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படுபவர்.
வ.உ.சி.யின் எழுத்தாற்றல்: வ.உ.சி தனது எழுத்துக்கள் மூலமும் நாட்டு மக்களுக்கு சுதந்திர உணர்வை தூண்டினார். அவர் நான்கு நூல்களை எழுதி உள்ளார்.
மெய்யறம்: இது 125 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. இதில் ஐந்து பகுதிகள் உள்ளன. முதல் பகுதி மாணவர்களுக்கும் இரண்டாவது பகுதி இல்லத்தார்களுக்கும், மூன்றாம் பகுதி ஒரு அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், நான்காவது பகுதி நன்னெறி குறித்தும், கடைசி பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்றும் வ.உ.சி விளக்குகிறார்.
மெய்யறிவு: வ.உ.சி. ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கேரளாவில் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மற்ற கைதிகளுக்கு நீதிநெறிகளை விளக்கினார். அப்போது அவர் இயற்றிய செய்யுள்களே மெய்யறிவு என்ற நூல். இது ஒரு மனிதன் தன்னை அறிந்துகொள்வது எப்படி, தனது விதியை தீர்மானிப்பது எப்படி என்றும் விளக்குகிறது. மேலும், ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, மனதை ஆள்வது, மனதில் தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை உண்டாக்குவது எப்படி என்றும் விளக்குகிறார் வ.உ.சி.
சுய சரிதை: அவரின் சுயசரிதை இரண்டு பகுதிகளை உடையது. முதல் பகுதி சுயசரிதையில் குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக் கல்வி பற்றி குறிப்பிடுகிறார். இரண்டாம் பகுதியில் கோயம்புத்தூர் சிறை வாழ்க்கை, சிறையில் ஏற்பட்ட கலவரம், கண்ணனூர் சிறை வாழ்க்கை பற்றி விளக்குகிறார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு பகுதிகளும் சேர்ந்து ஒரே நூலாக வெளிவந்தன.
திருக்குறள் மொழி பெயர்ப்பு: உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு வ.உ.சி. எழுதிய உரை அவரது ஆழ்ந்த இலக்கண அறிவை வெளிப்படுத்துகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதன் நெறிமுறை போதனைகளை பரந்த பார்வையாளர்களுக்கு உலக அளவில் கொண்டு சென்றார். தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை தமிழ் பேசும் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களுக்கு கொண்டு சென்று உலக அரங்கில் திருக்குறளின் மதிப்பை உயர்த்துவதற்கும் மொழி பெயர்ப்பாளராக வ.உ.சி. உதவி செய்தார்.
சிவஞான போதம்: சிவஞான போதம் என்ற பக்தி நூலுக்கு மிகச் சிறந்த விளக்க உரை எழுதியுள்ளார். அவர் இந்நூலினை ஆழமாக ஆராய்ச்சி செய்து, தத்துவம் பற்றிய ஆழ்ந்த அறிவையும் பக்தி நெறியையும் கற்றார். மத வேற்றுமை கூடாது என்ற கருத்தை இதில் வலியுறுத்தி கூறியுள்ளார். மேலும் ஜேம்ஸ் ஆலன் எழுதிய 4 நூல்களையும் வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார்.
வேதாந்த தத்துவம்: அவர் வேதாந்த தத்துவத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இந்திய ஆன்மிக மரபுகள் பற்றிய அவரது ஆழமான புரிதலின் தாக்கத்தால், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அறநெறி, சுய ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் கருப்பொருளைத் தொட்டன.
தேசபக்தி கவிதைகள், கட்டுரைகள்: அவரது கவிதைகள் பெரும்பாலும் சுதேசி, தேசியவாத உணர்வு, சுயமரியாதை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் உணர்வை சக இந்தியர்களிடையே ஊக்குவித்தது.