வளையல்கள அணிந்துகொள்வது என்பது பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பதாகும். ஆனால், வளையல் அணிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை சேர்க்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். இந்து மதத்தின்படி வளையல் அணிவது பெண்களின் பாரம்பரியம் ஆகும். பண்டைய காலங்களிலிருந்து, பெண்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட வளையல்களை அணிவது தொடர்கிறது. ஆனால், பெண்கள் வளையல் அணிவதன் அறிவியல் காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?
வளையல்கள் என்பது பெண்களின் அழகுக்கான ஒரு பொருள் மட்டுமல்ல, இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். இதை அணிவதன் மூலம் பெண்கள் அழகாக இருப்பது மட்டுமின்றி, மகத்தான ஆரோக்கியப் பலன்களையும் பெறுகிறார்கள்.
இரத்த ஓட்டம்: பெண்கள் கையில் வளையல் அணிவதால் மணிக்கட்டு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. மணிக்கட்டு பகுதியில் வளையல்களின் உராய்வு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அது அவர்களை மேலும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு சிறந்தது: கர்ப்பிணிகள் இரு கைகளிலும் வளையல்களை அணிய வேண்டும். குறிப்பாக, வளைகாப்பின்போது கர்ப்பிணிப் பெண்கள் அதிக வளையல்களை அணிகின்றனர். வயிற்றில் இருக்கும் குழந்தையை வளையல் சத்தம் மகிழ்ச்சிப்படுத்துவதுதான் இதற்கு முக்கியக் காரணம். அது மட்டுமல்லாமல், குழந்தைகளின் செவித்திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய பின்னணி காரணமாகும். கண்ணாடி வளையல்கள் அணிவதன் மூலம், பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை நீங்குகிறது. வளையல்களின் சத்தம் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
பலன்கள்: வளையல்களை முன்னும் பின்னுமாக நகர்த்துவது இரத்த நாளங்களை மசாஜ் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. சோர்வு, மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, வலிகளைத் தாங்கும் வலிமையையும் தருகிறது. வளைகாப்பின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு களிமண் வளையல் போடுவதுண்டு. களிமண் வளையல்கள் உடலில் இருந்து வெப்பத்தை அகற்ற உதவுகிறது.
வளையல்கள் வளிமண்டலத்திலிருந்து நன்மையையும் தூய்மையையும் உறிஞ்சுகின்றன. இது அணிபவருக்கு இயற்கையான ஆற்றலை அளிக்கிறது. இது சுற்றியுள்ளவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது. வளையல்களுக்கு இரண்டு வண்ணங்கள் மிகவும் பிரபலம். அவை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் உள்ளன. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பச்சை வளையல்கள் பொதுவாக அணியப்படுகின்றன. பஞ்சாப், உ.பி போன்ற வட மாநிலங்களில் சிவப்பு நிறம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பச்சை நிற வளையல்கள் பொதுவாக ஆன்மிகம் அமைதியைக் குறிக்கிறது. தீமையை அழிக்கும் ஆற்றல் சிவப்பு நிறத்துக்கு உண்டு.