12 services by the beauty parlor
12 services by the beauty parlor 
அழகு / ஃபேஷன்

அழகு நிலையம் தரும் அசத்தும் சேவைகள் 12..!

வசுந்தரா

எந்த வயதானாலும் அழகாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் எண்ணம். வீட்டிலேயே இயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தயார் செய்து உபயோகிக்கும் பெண்கள் பலர் இருந்தாலும், ‘அப்பாடா... கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று நினைப்பவர்கள் நாடுவது அழகு நிலையங்களின் சேவைகளைத்தான்.

அழகு நிலையங்கள் அளிக்கும் சேவைகள் என்னென்ன? அப்படி என்னதான் சுகம் இருக்கிறது இந்தச் சேவைகளில்? அழகு நிலையம் செல்வோர் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன? பிரபல அழகுக்கலை நிபுணர் வசுந்தரா சொல்வதைக் கேட்போமா?

Beautician Vasundhara
Visible difference

த்ரெட்டிங் தரும் பளிச் அழகு:

Threading

பொதுவாக அழகு நிலையங்களுக்குச் செல்ம் பெண்கள் புருவங்களை த்ரெட்டிங் மட்டுமே செய்து, தங்களை அழகாக்கிக்கொள்கிறார்கள். மேலும், முகத்தில் இருக்கும் அதிகப்படியான முடிகளை நீக்கும்போது முகம் பளிச்சென்று இருக்கும் என்பதாலும், அதிக செலவு இல்லாததாலும் பெண்கள் திரெட்டிங்கை விரும்புகிறார்கள்.

த்ரெட்டிங் மூலம் மேல் உதடு, கன்னம், தாடையின் கீழ்பகுதி ஆகியவற்றில் உள்ள முடிகளை நீக்கும்போது முகம் பளிங்குபோல் பளிச்சென்று ஆகிறது. இதற்கு சிறிது வலி இருக்கும் என்றாலும், 'பெயின்லெஸ் ஜெல்' எனப்படும் வலி தவிர்க்கும் ஜெல்லை தடவி த்ரெட்டிங் மேற்கொள்ளலாம்.

ப்ளீச்சிங் தரும் சரும அழகு:

Bleaching

வீட்டில் விசேஷம் என்றால் அழகு நிலையத்திற்குச் செல்லும் பெண்கள் முகக் கருமையை நீக்கி, முகப்பொலிவைக் கூட்ட ப்ளீச்சிங் செய்ய விரும்புவார்கள்.

ப்ளீச்சிங்கில் கெமிக்கல், ஹெர்பல் என்று இருவகை உண்டு. கெமிக்கலில் அம்மோனியா கலந்திருக்கும் என்பதால் முகத்தில் உள்ள முடியின் கலரை மாற்றும். அதேசமயம் ஹெர்பல் முடியின் கலரை மாற்றாது. மேலும் சருமத்தின் லேயரில் உள்ள கருமைகளைப் போக்கும். அவரவர் சருமத்திற்கு ஏற்ற வகையைத் தேர்ந்தெடுக்கலாம். சென்சிடிவ் ஸ்கின் என்றால் ஹெர்பலும், நார்மல் ஸ்கின் என்றால் ப்ளீச் கெமிக்கலும் உகந்ததாக இருக்கும். நிபுணரின் பரிந்துரைப் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஃபேஷியல் தரும் அழகு:

Facial

பெண்கள் அனைவரும் விரும்பி செய்துகொள்வது ஃபேஷியல்தான். முகம், கழுத்து, முதுகு போன்ற பகுதிகளில் நன்கு மசாஜ் செய்து, பேஸ்பேக் போட்டு, கிளென்ஸ், டோன், ஸ்டீம் என பல வழிமுறைகளில் சருமத்துக்குப் புத்துணர்வு தந்து, மூக்குக்கு மேல் இருக்கும் கருமை யெல்லாம் நீக்கி, முகத்துக்குப் பளபளப்பைத் தருகிறது ஃபேஷியல். முகப் பொலிவற்று, களைப்பாக இருப்பது போன்ற உணர்வு இருப்பவர்களுக்கு ஃபேஷியல் ஒரு வரப்பிரசாதம்.

ஃபேஷியலில் பல விதங்கள் இருக்கு. அதில் பேர்ல், கோல்ட் ஃபேஷியல் போன்றவை சிறப்பானவை; பிரபலமானவை. மேலும், கடற்பாசி, பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மலர் ஃபேஷியலும் பிரபலமாக இருக்கிறது.

ஹைட்ரா ஃபேஷியல் தரும் பலன்கள்:

Hydra Facial

இப்போ அதிகமா எல்லோரும் விரும்புவது ஹைட்ரா ஃபேஷியல்தான். இரண்டு மூன்று வகை ஃபேஷியல்களின் பலன்கள் இந்த ஒரே ஃபேஷியலில் அடங்கிவிடும். கெட்டித்தன்மை, கருமை, உலர் சருமம் போன்ற சரும வகை கொண்டவர்களுக்கும், சருமத்தில் கருந்திட்டுக்கள் கொண்டவர்களுக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் ஆக உதவுகிறது இது.

சிறு மின் சாதனங்கள் மற்றும் கருவிகள் கொண்டு செய்வதால் நல்ல ரிசல்ட் இதில் கிடைக்கும். சற்று அதிகக் கட்டணம் என்றாலும் அதற்கேற்ற பலனைப் பெறலாம். இதேபோல் ரிஜூவினேசன் (rejuvenation) ட்ரீட்மென்ட்டிலும் அல்ட்ரா சானிக், கேல்வேனிக், ரேடியோ ஃப்ரிக்கவன்சியுடன் ப்ராடெக்ட்டுகளும் உள்ளடக்கித் தரும்போது சருமப் புத்துயிருடன் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. இந்த வசதி இந்த வருடம்தான் வந்தது.

வேக்ஸிங் செய்தால் கூடும் அழகு:

Waxing

அன்றிலிருந்து இன்று வரை அழகுக்கலையின் அவசிய அங்கமாக இருப்பது வேக்ஸிங். கை, கால்கள் மற்றும் கை அக்குள் போன்ற சென்சிடிவ் பகுதிகளில் உள்ள அதிகப்படியான முடிகளை அகற்றும் பணி செய்கிறது வேக்ஸிங்.

இதிலும் 2 வகையுண்டு. லிப்போசாலிபெல் மற்றும் ஹாட் வேக்ஸிங். முதல் வகையில் 'டேன்' எனப்படும் கருமை மறையும் என்பதால் அது ஸ்பெஷலாகிறது. வலி இல்லாமல் தற்போது வேக்ஸிங் செய்யப்படுகிறது.

முடி இல்லை எனும் கவலை இனி இல்லை:

Hair extension

ஒன்றிரண்டு வருடங்களாக அழகுக்கலையில் ஹேர் எக்ஸ்டென்ஷன் என்பது அனைவரிடமும் டிரெண்ட்டிங்காகி பிரபலமாகி வருகிறது. முடி இல்லை என யாரும் இனி ஏக்கம் கொள்ள வேண்டியதில்லை. தலைமுடி குறைவாகவோ, அடர்த்தியற்றோ அல்லது முன் மண்டையில் முடி உதிர்ந்து இருந்தாலோ இந்த செயற்கை முடியழகை வைத்துக்கொள்ளலாம். இதிலும் உண்மையான தலைமுடி மற்றும் சிந்தெடிக் முடி என வகைகள் உண்டு. அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்:டிசைன்கள்

Nail art

ஹேர் எக்ஸ்டென்ஷன் போலவே தற்போது நெய்ல் எக்ஸ்டென்ஷன் மற்றும் நெயில் ஆர்ட் எனப்படும் நகங்களை அழகுபடுத்தும் கலையும் பிரபலமாகி வருகிறது. முன்பு நெயில் பாலீஷ் வைத்து மட்டுமே நகங்களை அழகு படுத்துவோம். இப்போது நகங்கள் மீது நெயில் பாலீஷ் கொண்டு டிசைன்கள் வரையப்படுகின்றன. தற்போது ஜெல் நெயில் பாலீஷ் கிடைக்கிறது. இதை வைத்தால் 2 வாரங்கள் ஆனாலும் அழியாமல் புதிதாக வைத்தது போல் இருக்கும். நகங்களும் வலுவாக இருக்கும்.

நகங்களே இல்லை என்றால்கூட அதற்கேற்ற செயற்கையான அக்ரிலிக் நகங்களை ஒட்டி, முழுவதும் ஜெல்லினால் ஆன நெயில் பாலீஷ் பூசி பொருத்தப்படுகிறது. நகங்கள் மீதான கவனம் இப்போது அதிகரித்துள்ளது.

அழகுக்கு அழகு சேர்க்கும் கண்ணிமைகள்:

Eyelids

ஹேர் எக்ஸ்டென்ஷன் நெயில் எக்ஸ்டென்ஷன்போல் கண் இமை முடிகள் அடர்த்தியாக வேண்டும் என்றாலும் ஒட்ட வைக்கப்படுகின்றன. சிலருக்கு இமைகளில் முடி இல்லாமல் அழகே குறையும். அவர்கள் விழாக்களுக்குச் செல்லும்போது மட்டும் இந்த செயற்கை இமைமுடியை ஒட்டவைத்து கூடுதல் அழகு பெறலாம்.

இந்த இமை முடியை ஒருமுறை பொறுத்திக்கொண்டால், இரண்டு வாரங்கள் வரை அப்படியே இருக்கும்படியான வசதியும் தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இமை முடியைக் கழற்றி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

மெனிக்யூர், பெடிக்யூர் தரும் சுகாதார அழகு:

Manicure & Pedicure

பார்லர் வருபவர்கள் முக்கியமாக மெனிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அதிலும் கால்களுக்குச் செய்யப்படும் பெடிக்யூர் செய்ய அதிகம் பெண்கள் வருவார்கள். காரணம், தற்போது அதிகரித்து வரும் வலி. கால் வலி இருப்பவர்களுக்கு எப்சம் உப்பு சேர்த்த சுடு நீரில் கால்களை மூழ்கவைத்து, விரல்களை நீவி, பாத வெடிப்புகளை நீக்கி, நகங்களைச் சுத்தம் செய்து, பாலீஷ் போட்டு, மசாஜ் செய்யும்போது வலி பறந்து புத்துணர்வு கிடைக்கும்.

இதே முறையில் கைகளுக்குச் செய்யப்படுவது மெனிக்யூர். இதிலும் ஜெல் மெனிக்யூர், ஐஸ்கிரீம் மெனிக்யூர் என்று ஸ்பெஷல் வகைகளுண்டு. கைகளுக்குப் புத்துணர்ச்சி தருகிறது மெனிக்யூர்.

அசத்தும் ஹேர் கலர் அழகு:

Hair color

இப்போது விதவித வண்ணங்களில் ஹேர் கலர் செய்துகொள்வதும் ஃபேஷனாக உள்ளது. தற்போது டிரெண்டிங்கில் உள்ளது ஹெர்பல் ஹேர் கலர்தான். ஹென்னா அடிப்படையில் செய்யப்படும் ஹேர் கலரிங் கெமிக்கல்ஸ் இல்லாமல் பக்கவிளைவுகளற்று உள்ளதால் வெகுவாக இதை விரும்புகிறார்கள். இதை அப்ளை செய்து ஒன்று அல்லது ஒன்றரை மாதம் கழித்து டச்சப் செய்யலாம்.

அதேபோல் அடிப்படை ஹேர் கலரிங் செய்ய விரும்பினால் அதிலும் அமோனியா ஃப்ரீ, பிபிடி ஃப்ரீ கலர்களைப் பார்த்து கவனமாகத் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

சீசன் ஸ்பெஷல் அழகு:

Hair spa

அழகு நிலையங்களில் இதுபோன்ற ஸ்பெஷல் சேவைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இந்த வெயில் காலத்தில் தலைக்கு ஆயில் போட்டு மசாஜ் செய்வது, ஹேர் ஸ்பா போன்றவை ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்களாக உள்ளன. அந்தந்த சீசனுக்கு ஏற்றாற்போல் அழகு நிலையங்களில் சேவைகள் மேற்கொள்ளப்படும். இவற்றை நீங்கள் கேட்டு செய்துகொள்ளலாம். திருமண நிகழ்வுகளுக்கு ஸ்பெஷல் பேக்கேஜுகளும் உண்டு.

பீல்ஸ் சிகிச்சை தருகிறது அழகு:

Peels treatment

பீல்ஸ் சிகிச்சை என்பது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், ப்ரீ பிக்மென்டேசனைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மைக்ரோ நீட்லிங்க் எனப்படும் சீரத்தை ஊசி மூலம் சருமத்தில் செலுத்துவது, மேடு பள்ளங்களாகக் காணப்படும் தழும்புகளைச் சமன்படுத்தும் சிகிச்சை ஆகியவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற ஸ்பெஷலான ஏஸ்தெடிக் சிகிச்சைகளை மருத்துவர்களும் செய்கிறார்கள். அழகு நிலையங்களிலும் செய்கிறார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைத் தேர்வு செய்து அழகை மேம்படுத்தலாம்.

தொகுப்பு: சேலம் சுபா

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்!

தெக்கத்து சட்னி மற்றும் பீட்ரூட் சட்னி செய்யலாம் வாங்க!

481 அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்டம்!

மின்சார வாகனங்களின் இருண்ட பக்கம்! 

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

SCROLL FOR NEXT